சங்கக்காரவின் சாதனையை முறியடித்த விராட் கோஹ்லி

ICC T20 World Cup 2022

88

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அரைச் சதமடித்த இந்திய வீரர் விராட் கோஹ்லி பிரமிக்க வைக்கும் சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகளால் வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்த விராட் கோஹ்லி, T20 கிரிக்கெட்டில் 4000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இன்றைய அரைச் சதம் மூலம் விராட் கோஹ்லி சர்வதேச T20 போட்டிகளில் 37ஆவது அரைச் சதத்தை எட்டினார். மேலும் T20 உலகக் கிண்ணத் தொடரில் மட்டும் 100 பௌண்டரிகளை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். T20 உலகக் கிண்ணத்தில் 100 பௌண்டரிகளை விளாசிய முதல் இந்திய வீரர் விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் அதிக ஓட்டங்களைக் குவித்த வெளிநாட்டு வீரர்கள் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதே மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா 15 இன்னிங்ஸ்களில் 940 ஓட்டங்களை எடுத்திருந்தார். இந்த நிலையில், கோஹ்லி தனது 15 ஆவது இன்னிங்சில் 950 ஓட்டங்களைக் கடந்து லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.

இது தவிர, T20 உலகக் கிண்ண நொக் அவுட் போட்டியில் கோஹ்லி தனது நான்காவது அரைச் சதத்தை விளாசியுள்ளர். இதன்மூலம் T20 உலகக் கிண்ண அரையிறுதியில் மூன்று அரைச் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோஹ்லி நிகழ்த்தினார்.

முன்னதாக, 2014 இல் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான அரையிறுதியில் 44 பந்துகளில் 72 ஓட்டங்கள், 2016 இல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 47 பந்துகளில் 89 ஓட்டங்கள் மற்றும் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 40 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, ஐசிசியின் T20, ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களின் அரை மற்றும் இறுதிப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த குமார் சங்கக்காரவின் சாதனையை விராட் கோஹ்லி இன்றைய போட்டியில் வைத்து முறியடித்துள்ளார். 16 இன்னிங்ஸ்களில் 531 ஓட்டங்கள் குவித்த சங்கக்காரவின் சாதனையை, 12 இன்னிங்ஸ்களில் 536 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் கோஹ்லி முறியடித்தார்.

இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் 14 இன்னிங்களில் 509 ஓட்டங்களுடன் 3 ஆவது இடத்திலும், இந்தியாவின் சௌரவ் கங்குலி 6 இன்னிங்ஸ்களில் 489 ஓட்டங்களுடன் 4 ஆவது இடத்திலும் இலங்கையின் மஹேல ஜயவர்தன 16 இன்னிங்ஸ்களில் 484 ஓட்டங்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் சர்வதேச T20 போட்டிகளில் ஆடி வருகின்ற 34 வயதான விராட் கோஹ்லி, இதுவரை மொத்தம் 115 போட்டிகளில் 107 இன்னிங்ஸ்கள் விளையாடி 4008 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் ஒரு சதமும் 37 அரைச் சதங்களும் அடங்கும். அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை 122 ஓட்டங்களாகும்.

அத்தோடு, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வைத்து T20 உலகக் கிண்ண வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த மஹேல ஜயவர்தனவைப் பின்தள்ளி விராட் கோஹ்லி (1141 ஓட்டங்கள்) முதலிடத்தைப் பிடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதுமாத்திரமின்றி, இம்முறை டி20 உலகக் கிண்ணத்தில் 6 போட்டிகளில் விளையாடிய கோஹ்லி, 4 அரைச் சதங்களுடன் 296 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் முதலிடத்தைப் பிடித்தார். முன்னதாக 2016 T20 உலகக் கிண்ணத்திலும் அதிக ஓட்டங்களைக் குவித்த (273 ஓட்டங்கள்) வீரராக மாறிய அவர், தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<