பாடசாலை மெய்வல்லுனரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆபித்துக்கு வெண்கலப்பதக்கம்

428

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற 33 ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் திருகோணமலை மாவட்டம், கிண்ணியா முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி மாணவன் ஏ. ஆபித் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் வெண்கலப் பதக்கத்தை வென்று இம்முறை பாடசாலை விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்துக்கு மைதான நிகழ்ச்சிகளில் (Track Events) முதலாவது பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்தார்.

இதன்படி 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கலந்துகொண்ட அவர், குறித்த தூரத்தை 6.89 மீற்றர் பாய்ந்து தேசிய மட்டத்தில் 2 ஆவது தடவையாகவும் பதக்கம் வென்று அசத்தினார்.

அண்மைக்காலமாக பாடசாலை மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வலய, மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுவந்த ஆபித், நீளம் பாய்தலுக்கு மேலதிகமாக 100 மற்றும் 400 மீற்றர் ஓட்டப் பந்தயங்களிலும் வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியிலும் ஆபித் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த மாதம் மாத்தறையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட ஆபித் முதல் சுற்றுடன் வெளியேறியிருந்தார். ஆனால் அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் விளையாட்டு விழாவில் 4 ஆவது இடத்தைப் அவர் பெற்றிருந்தாலும், கடந்த வருடம் யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஆபித்துக்கு, 6 ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பாடசாலை மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாள் முடிவுகள்

கல்வி அமைச்சும், கல்வி அமைச்சின் சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறைப்…

கடந்த சில வருடங்களாக மெய்வல்லுனர் அரங்கில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி மாணவர்களின் அண்மைக்கால வெற்றிக்கு பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.சி.ஏ நஷாத் மற்றும் கிண்ணியா பிரதேச விளையாட்டு பயிற்றுவிப்பாளர் எம்.ஹாரிஸ் ஆகியோர் முக்கிய காரணமாக இருந்து வருகின்றனர்.

விளையாட்டுத்துறையில் போதிய வசதிகளின்றி மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற கிண்ணியா முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வருகின்ற மாற்றமானது நிச்சயம் தேசிய மட்டத்தில் சிறந்த வீரர்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான முக்கிய மைல்கல்லாக அமையும் என பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.சி.ஏ நஷாத் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.

போதியளவு வசதிகளின்றி, மைதானமின்றி வெளி மாவட்டங்களுக்குச் சென்று பயிற்சிகளைப் பெற்று இவ்வாறு தேசிய மட்டத்தில் வெற்றியைப் பெற்றுக்கொண்ட மற்றும் இதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, காலி றிச்மண்ட் கல்லூரியைச் சேர்ந்த இசுரு மலிந்த, 6.97 மீற்றர் தூரம் பாய்ந்து புதிய பாடசாலை சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், கொழும்பு லொயலா கல்லூரியைச் சேர்ந்த கவிந்து கல்தேரா, 6.92 மீற்றர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தையும் வென்றமை குறிப்பிடத்தக்கது.