உலகக் கிண்ண குழாத்தில் இருந்து வெளியேறும் லஹிரு குமார

ICC World Cup 2023

1502

பயிற்சிகளின் போது தசை உபாதைக்குள்ளாகிய இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான லஹிரு குமார, ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் குசல் மெண்டிஸ்!

லஹிரு குமார இலங்கை அணி அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடவிருந்த போட்டிக்காக நேற்று (28) பயிற்சிகளை மேற்கொண்டிருந்த போது தனக்கு தசை வலி இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் நிர்வாகத்தினரிடம் முறையிட்டிருந்தார்.

இதனையடுத்து MRI பரிசோதனைகளுக்கு முகம் கொடுத்த குமார, குறித்த பரிசோதனைகளில் அடிப்படையில் தசை உபாதை குணமாக சுமார் இரண்டு வாரங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இதன் காரணமாகவே அவர் உலகக் கிண்ணத் தொடரில் இருந்தும் வெளியேறி இருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.

லஹிரு குமார இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக இந்த உலகக் கிண்ணத் தொடரில் வெற்றி பெறுவதற்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தோடு, போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் லஹிரு குமாரவின் இழப்பு இலங்கை கிரிக்கெட் அணிக்கு பேரிழப்பாக மாறியிருக்கின்றது.

லஹிரு குமாரவிற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து அணித்தலைவர் தசுன் ஷானக்க, மதீஷ பதிரன ஆகிய வீரர்கள் வெளியேறியிருந்ததோடு லஹிரு குமார இலங்கை அணியில் இருந்து வெளியேறும் மூன்றாவது வீரராக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

லங்கா T10 தொடரின் வீரர்கள் ஏலத்துக்கான திகதி அறிவிப்பு

இதேவேளை லஹிரு குமார வெளியேறிய நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி அனுபவ வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீரவிற்கு இலங்கை குழாத்தில் வாய்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

துஷ்மன்த சமீர ஏற்கனவே மேலதிக வீரராக அஞ்செலோ மெதிவ்ஸ் உடன் இலங்கை குழாத்திற்குள் உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது இலங்கை அணிக்காக உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பினையும் பெற்றிருக்கின்றார்.

இதேவேளை இந்த உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 5 போட்டிகளில் ஆடியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியானது 2 போட்டிகளில் வெற்றியினையும், 3 போட்டிகளில் தோல்வியினையும் சந்தித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரில் விளையாடும் ஆறாவது போட்டி நாளை (30) ஆப்கானிஸ்தானுடன் ஆரம்பமாகின்றது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<