SAFF சம்பியன்ஷிப் 2023 தொடர் இந்தியாவில்

227
SAFF Championship

இந்த ஆண்டு (2023) ஜூன் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்து சம்மேளன (SAFF) சம்பியன்ஷிப் தொடரை நடாத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தெற்காசிய கால்பந்து சம்மேளனம் (SAFF) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான SAFF சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்கனவே நேபாளம் பெற்றிருந்தது. இவ்வாறான ஒரு நிலையிலேயே தற்போது அந்த வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தெற்காசிய கால்பந்து சம்மேளனம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் திகதி SAFF சம்பியன்ஷிப் தொடருக்கான சந்தைப்படுத்தல் மற்றும் வணிக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏலத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

குறித்த ஏலத்திற்கான இறுதித் திகதியாக 2023 ஜனவரி மாதம் 16ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த உரிமத்தினை Sports Partner International நிறுவனம் அடுத்த நான்கு தொடர்களுக்கு செல்லுபடியாகும் வகையில் எதிர்வரும் 2029ஆம் ஆண்டு வரை பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நிறுவனம் மற்றும் தொடருக்கான அனுசரணையாளர்கள் இம்முறை SAFF சம்பியன்ஷிப் தொடரை இந்தியாவில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டமைக்கு அமையவே இம்முறை தொடர் இந்தியாவிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெற்காசிய கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

எனினும், அனைத்து இந்திய கால்பந்து சம்மேளனம் (AIFF) கேட்டுக் கொண்டதற்கு அமைய போட்டிகள் இடம்பெறும் மைதானம் குறித்த தகவல் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993ஆம் ஆண்டு முதல் இடம்பெற்று வருகின்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்தியா இதுவரையில் அதிக பட்சமாக 8 முறை கிண்ணத்தை வென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலைதீவுகள் 2 முறையும் இலங்கை பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் கிண்ணம் வென்றுள்ளன.

இறுதியாக கடந்த 2021ஆம் ஆண்டு மாலைதீவுகளில் இடம்பெற்ற SAFF சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நேபாள அணியை 3-0 என வெற்றி கொண்ட சுனில் ஷெத்ரி தலைமையிலான இந்திய அணி நடப்புச் சம்பியனாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<