றினோன் தலைவர் கிண்ண அரையிறுதியில் யாழ் மத்தி, ஸாஹிரா

Schools Football

602

இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 வயதின்கீழ் பிரிவு 1 அணிகளுக்கு இடையிலான றினோன் தலைவர் சம்பியன்ஷிப் சுற்றுப் போட்டியின் அரையிறுதிக்கு முதல் இரண்டு அணிகளாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன.

ஏற்கனவே இடம்பெற்று முடிந்த குழு நிலைப் போட்டிகளின் நிறைவின்படி, தத்தமது குழுக்களில் முதலிரு இடங்களையும் பெற்ற அணிகள் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதன்படி, முதலிரு காலிறுதிப் போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமை (05) கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எதிர் அல் அக்ஸா கல்லூரி

குழு A யில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியும், குழு D யில் இரண்டாம் இடம்பெற்ற கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி அணியும் முதல் காலிறுதியில் மோதின.

ஆட்டம் ஆரம்பித்தது முதல் ஆதிக்கம் செலுத்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்காக அபிஷான் இரு கோல்களையும் ஹரிஷ் ஒரு கோலையும் பெற, அல் அக்ஸா சார்பாக கதீம் ஒரு கோலைப் பெற்றுக் கொடுத்தார்.

எனவே, முதல் பாதி நிறைவில் யாழ்ப்பாண வீரர்கள் 3-1 என முன்னிலை பெற்றனர்.

>> Photos – Jaffna Central College v Al Aqsa College

>> Photos – Maris Stella College v Zahira College

எனினும், தொடர்ந்து இரண்டாவது பாதியில் 80 நிமிடங்கள் வரை மேலதிக கோல் எதுவும் பெறப்படவில்லை. இந்நிலையில், போட்டியின் இறுதி நிமிடங்களில் அபிஷான் தனது ஹெட்ரிக் கோலை பதிவு செய்ய, ஹரிஷ் அடுத்த கோலையும் பெற்றுக் கொடுத்தார்.

மறுமுனையில் அல் அக்ஸா வீரர் அப்கான் அவ்வணிக்கான  இரண்டாவது கோலையும் பதிவு செய்ய, போட்டி நிறைவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி  5-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று, முதல் அணியாக தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

முழு நேரம்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 5 – 2 அல் அக்ஸா கல்லூரி

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி எதிர் ஸாஹிரா கல்லூரி

குழுநிலை சுற்றில் B குழுவில் முதலிடம் பெற்ற நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வீரர்கள் குழு C யில் இரண்டாம் இடம் பெற்ற கொழும்பு ஸாஹிரா கல்லூரியை இரண்டாவது காலிறுதியில் சந்தித்தனர்.

போட்டியின் முதல் பாதியில் ஆகில் மற்றும் அணித் தலைவர் சியாட் ஆகியோர் ஸாஹிரா கல்லூரிக்காக தலா ஒரு கோலைப் பெற்று இரு கோல்களால் அணியை முன்னிலைப் படுத்தினார்.

எனினும், இரண்டாம் பாதியின் 90ஆவது நிமிடத்தில் மாரிஸ் ஸ்டெல்லா வீரர் யுதில் நிஸ்ஸன்க அவ்வணிக்கான முதல் கோலைப் பெற, அதற்கு அடுத்த நிமிடத்தில் சியாட் தனது அடுத்த கோலையும் பதிவு செய்தார்.

எனவே, போட்டி நிறைவில் ஸாஹிரா கல்லூரி வீரர்கள் 3-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது அணியாக றினோன் தலைவர் சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகினர்.

தொடரின் அடுத்த இரண்டு காலிறுதிப் போட்டிகளும் இந்த வார இறுதியில் இடம்பெறவுள்ளன.

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 3 ஸாஹிரா கல்லூரி

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<