பாடசாலை வயதுநிலை நீச்சல் போட்டிகளில் 13 சாதனைகள் முறியடிப்பு

153
45th AISC2018

கொழும்பு சுகததாஸ நீச்சல் தடாகத்தில் நடைபெற்றுவரும் 45ஆவது அகில இலங்கை பாடசாலைகள் நீர்நிலைகள் விளையாட்டுப் போட்டியின் முதலிரண்டு நாட்களில் மொத்தமாக 13 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

இதில் பதினொரு சாதனைகள் பெண்களால் நிலைநாட்டப்பட்ட அதேவேளை, இரண்டு சாதனைகள் மாத்திரம் ஆண்களால் நிலைநாட்டப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள்..

அத்துடன், இம்முறை போட்டித் தொடரில் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள கொழும்பு விசாகா வித்தியாலய மாணவிகளால் இதுவரை ஏழு புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன.

இதில் அக்கல்லூரியின் 14 வயது வீராங்கனையான கங்கா செனவிரத்ன, 2016 றியோ ஒலிம்பிக்கில் இலங்கை அணியைப் பிரிநிதித்துவப்படுத்தியவரும், தேசிய நீச்சல் சம்பியனுமான கிமிகோ ரஹீமின் இரண்டு சாதனைகளை முறியடித்திருந்தார்.  

இவர் போட்டிகளின் முதல் நாளில் பெண்களுக்கான 200 மீற்றர் பின்நோக்கிய நீச்சலிலும், நேற்று நடைபெற்ற 100 மீற்றர் சாதாரண நீச்சலிலும் இவ்வாறு புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தார். முன்னதாக 2013ஆம் ஆண்டு குறித்த போட்டிப் பிரிவுகளில் கிமிகோ ரஹீம் சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், அக்கல்லூரின் மற்றுமொரு வீராங்னையான ரமுதி சமரக்கோன், நேற்று நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 50 மீற்றர் மற்றும் 200 மீற்றர் மல்லாக்கு நீச்சல் போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தார். குறித்த போட்டிகளின் முதல் நாளில் நடைபெற்ற 100 மீற்றர் மல்லாக்கு நீச்சல் போட்டியிலும் அவர் போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீற்றர் சாதாரண கலப்பு நீச்சல் போட்டியில் கொழும்பு விசாகா வித்தியலாய மாணவிகள் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்தனர். குறித்த போட்டியை 4 நிமிடங்களும் 46.12 செக்கன்களில் நிறைவுசெய்த அக்கல்லூரி மாணவிகள், 2016ஆம் ஆண்டு கொழும்பு மகளிர் கல்லூரி மாணவிகளால் நிகழ்த்தப்பட்ட சாதனையை முறியடித்திருந்தனர்.  

போட்டியின் முதல் நாளில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர்கள், நேற்று 2 போட்டி சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர். 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வண்ணத்துப்பூச்சி நீச்சலில் கலந்துகொண்ட சதெவ் செனவிரத்ன, போட்டியை 58.91 செக்கன்களில் நீந்தி போட்டி சாதனையுடன் முதலிடத்தை பெற்றார். அதே கல்லூரியைச் சேர்ந்த சக வீரரான ஷெனன் அபிஷேக் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், போட்டிகளின் முதல் நாளில் 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 50 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியில் புதிய போட்டி சாதனை நிகழ்த்திய கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரியின் ஷெனலி ஹேரத், நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மற்றும் 100 மீற்றர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்ளை பெற்றுக்கொண்டார்.

அத்துடன், போட்டிகளின் முதல் நாளில் ஆண்களுக்கான 100 மீற்றர் மல்லாக்கு நீச்சலில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியிருந்த, கொழும்பு ஆனந்த கல்லூரி மாணவன் கே.சி தல்பந்து, நேற்று நடைபெற்ற 50 மற்றும் 200 மீற்றர் மல்லாக்கு நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார்.

இதன்படி, இம்முறை போட்டித் தொடரில் இரண்டு நாட்கள் நிறைவடையும் போது பெண்கள் பிரிவின் நடப்புச் சம்பியனான கண்டி மஹமாயா கல்லூரி 367 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஆண்கள் பிரிவில் நடப்புச் சம்பியனான மருதானை புனித ஜோசப் கல்லூரி 326 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்த இரண்டு பிரிவுகளிலும் முறையே விசாகா வித்தியாலயம் (281 புள்ளிகள்), கொழும்பு றோயல் கல்லூரி (206 புள்ளிகள்) இரண்டாவது இடங்களைப் பெற்றுக்கொண்டுள்ளன.

நெஸ்ட்லே லங்கா நிறுவனத்தின் மைலோ 25ஆவது வருடமாகவும் அனுசரணை வழங்கி வருகின்ற அகில இலங்கை பாடசாலைகள் நீர்நிலைகள் விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இம்முறை 9,11,13,15,17 மற்றும் 19 ஆகிய ஆறு வயதுப் பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றுவருகின்றன.

அத்துடன், வடக்கைத் தவிர ஏனைய எட்டு மாகாணங்களையும் சேர்ந்த 186 பாடசாலைகளைச் சேர்ந்த 1850 வீரர்களும், 1215 வீராங்கனைகளும் இதில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<