பிரான்ஸ் வீரர் போல் போக்பாவுக்கு நான்கு ஆண்டுகள் தடை

229

ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரான்ஸின் நட்சத்திர கால்பந்து வீரர் போல் போக்பாவுக்கு கால்பந்து விளையாட 4 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜுவென்டஸ் அணி 3 – 0 என்ற கோல்கள் கணக்கில் சீரி (Serie A) தொடரின் முதல் போட்டியில் வெற்றியீட்டியது. அந்தப் போட்டிக்கு பிறகு நடத்தப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில், போல் போக்பா உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் போட்டியில் அவர் விளையாடவே இல்லை. மாற்று வீரராக வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். அப்படி இருந்தும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, கடந்த செப்டம்பரில் இத்தாலியின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு (NADO Italia) தீர்ப்பாயத்தால் போக்பா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவர் உடலில் அதிக டெஸ்டோஸ்டிரோன் இருப்பது உறுதி செயப்பட்டு இருந்தது. அவர் தடைசெய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியது குறித்து விசாரணை ஆரம்பமாகிய நிலையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். 

போக்பாவின் ஊக்கமருந்து மறு ஆய்வு பரிசோதனை கடந்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்டு அதிலும் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதற்கு எதிராக இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிலையத்துடன் பேச வேண்டாம் என்று முடிவு செய்த போக்பா, இந்த வழக்கை இத்தாலியின் ஊக்கமருந்து எதிர்ப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. 

அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் கொடுத்த துணைச் சத்துப்பொருளை உட்கொண்டதால் டெஸ்டோஸ்டிரோன் வந்ததாக போக்பாவின் பிரதிநிதிகள் மன்றில் கூறினர். அதேபோல, விளையாட்டுத் திறனை மேம்படுத்தக்கூடிய எந்த மருந்தையும் வேண்டுமென்றே உட்கொள்ளவில்லை என்று போக்பா குறிப்பிட்டார். 

இதனிடையே, இத்தாலியின் தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக போக்பாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை பகிரங்கப்படுத்தப்படாததால், வழக்கை நேரடியாக அறிந்த ஒருவர், போல் போக்பாவுக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் தடையை உறுதிப்படுத்தினார். 

இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டு மற்றும் கால்பந்து விளையாட தடைவிதித்தது பற்றி கருத்து தெரிவித்த போக்பா, இது தமக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், தாம் இதுவரை உருவாக்கிய அனைத்தும் தம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தான் கட்டியெழுப்பிய விளையாட்டுப் பயணமே தன்னை விட்டுப் போய்விட்டது என வேதனை தெரிவித்துள்ளார். 

ஏவ்வாறாயினும், தற்போதைய தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவுவும் போக்பா தெரிவித்துள்ளார் 

அடுத்த மாதம் தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் போக்பா, கால்பந்து போட்டிகளில் மீண்டும் விளையாட முடியாமல், கிட்டத்தட்ட 35 வயது வரை ஓரங்கட்டப்படும் ஒரு நிலையை எதிர்கொள்கிறார் 

போக்பாவின் போட்டித் தடை அவரது கால்பந்து வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், சீரி லீக்கின் முக்கிய அணிகளில் ஒன்றான ஜுவென்டஸுக்கும் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

2018 பிபா உலகக் கிண்ண கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்ற பிரான்ஸ் அணியில் போல் போக்பா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்கால்பந்துசெய்திகளைப்படிக்க<<