முதல் போட்டியில் யேமனிடம் வீழ்ந்தது இலங்கை

FIFA World Cup 2026 Qualifiers

411

பிஃபா கால்பந்து உலகக் கிண்ணம் 2026 மற்றும் AFC ஆசிய கிண்ணம் 2027 ஆகிய தொடர்களுக்கான பூர்வாங்க தகுதிச் சுற்றில் யேமன் அணிக்கு எதிரான முதல் கட்ட (1st Leg) போட்டியில் இலங்கை அணி 3-0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

பிஃபாவின் தடையை எதிர்கொண்டிருந்தமையினால் பல மாதங்களாக எந்தவொரு சர்வதேசப் போட்டியிலும் ஆடாத இலங்கை அணி, புதிய ஒரு எதிர்பார்ப்புடன் சவூதி அரேபியாவின் அபா நகரில் அமைந்துள்ள இளவரசர் சுலாதான் பின் அப்துல் அஸீஸ் அரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் யேமனை எதிர்கொண்டது.

இலங்கை முதல் பதினொருவர் மரியதாஸ் நிதர்சன்,

ஷரித்த ரத்னாயக்க (அணித் தலைவர்), ஷமோத் டில்ஷான், ஹர்ஷ பெர்னாண்டோ, ஷலன சமீர, சுஜான் பெரேரா, வசீம் ராசிக், மொஹமட் சிபான், றிப்கான் மொஹமட், சுரேஷ் பரத், ராஜமோகன் ஆதவன், மரியதாஸ் நிதர்சன்

அண்மையில் இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்ற சுரேஷ் பரத் மற்றும் ராஜ்மோகன் ஆதவன் ஆகியோர் இந்தப் போட்டியின்மூலம் இலங்கை தேசிய கால்பந்து அணிக்காக அறிமுகம் பெற்றனர்.

போட்டி ஆரம்பித்ததில் இருந்து இரண்டு அணியினரும் எதிரணியின் கோல் எல்லைக்கு பந்தை கொண்டு செல்வதில் தீவிரம் காண்பித்தனர். குறிப்பாக மிக நீண்ட ஒரு இடைவெளியின் பின்னர் ஆடிய இலங்கை வீரர்களின் ஆட்ட வேகம் சிறந்த முறையில் இருந்தது.

எனினும், ஆட்டத்தின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து பந்தை எடுத்து வந்த அஹ்மட் மாஹிர் சிறந்த முறையில் இலங்கை தடுப்பு வீரர்களை கடந்து வந்து கோலுக்கு அண்மையில் இருந்து சுஜான் பெரேராவையும் தாண்டி பந்தை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.

அதன் பின்னரும் அவ்வணியினர் பெற்ற கோலுக்கான முயற்சிகளை இலங்கை அணியின் பின்கள வீரர்களும் கோல் காப்பாளர் சுஜான் பெரேராவும் தடுத்தனர். மறுமுனையில் இலங்கை வீரர்கள் கோலுக்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் யேமன் கோல் எல்லையில் வைத்து தடுக்கப்பட்டன. எனவே, முதல் பாதி 1-0 என யேமன் அணியின் முன்னிலையுடன் நிறைவுற்றது.

முதல் பாதி: யேமன் 1 – 0 இலங்கை

இரண்டாம் பாதி ஆரம்பித்தது முதல் மீண்டும் கோல் முயற்சிகளை யேமன் வீரர்கள் மேற்கொண்டனர். எனினும், இதன்போது இலங்கை அணியின் தடுப்பு வீரர்களினால் பல தவறுகள் விடப்பட்டன.

இலங்கை அணிக்கு எதிரணியின் கோல் எல்லையில் ஒரு திசையில் கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை ஆதவன் பெற்றார். அவர் கோல் நோக்கி வேகமாக உதைந்த பந்தை யேமன் கோல் காப்பாளர் வெளியே தட்டி விட்டார்.

ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் மீண்டும் மத்திய களத்தில் பந்தைப் பெற்று முன்னோக்கி எடுத்து வந்த யேமன் வீரர் நஸ்ஸர் அஹ்மட் நீண்ட தூரத்தில் இருந்து பந்தை வேகமாக கோலுக்குள் செலுத்தி அவ்வணிக்கான இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.

 தொடர்ந்து ஆட்டத்தின் 90 நிமிடங்கள் கடந்த நிலையில் அணித்தலைவர் அப்துல்வசி, யேமனுக்கு கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை நேராக கோலுக்குள் செலுத்தி அணிக்கான மூன்றாவது கோலையும் பெற்றுக்கொடுக்க, ஆட்ட நிறைவில் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் யேமன் அணி வெற்றி பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாம் கட்டப் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி இலங்யைில் இடம்பெறவுள்ளது. இலங்கை அணி இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் அடுத்த போட்டியில் 4 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு நேரம்: யேமன் 3 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

யேமன் – அஹ்மட் மாஹிர் 33’, நஸ்ஸர் அஹ்மட்67’, அப்துல்வசி அல் மடாரி 90+2

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<