ஆசியக் கிண்ண கால்பந்தில் சம்பியனானது கத்தார்

AFC Asia Cup 2023

45
AFC Asia Cup 2023

ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஜோர்தானை 3க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி கத்தார் அணி தொடர்ச்சியாக 2ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.

AEC ஆசிய கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நேற்றுமுன்தினம் (10) தோஹா, லுசெய்ல் விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதல் முறையாக ஆசியக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோர்தான் அணி, நடப்புச் சம்பியன் கத்தார் அணியுடன் மோதியது.

விறு விறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் பாதியில், கத்தார் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. போட்டியின் 22ஆவது நிமிடத்தில் கத்தார் அணிக்கு கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் அக்ரம் அபிப் கோல் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் ஜோர்தான் அணி வீரர் Tazba Al-inamat அந்த அணிக்காக முதல் கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து போட்டியின் 73ஆவது மற்றும் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+5ஆவது நிமிடம்) கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட கத்தார் அணி வீரர் அக்ரம் அபிப், மேலும் 2 கோல்களை அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.

இறுதியில் 3க்கு 1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றியீட்டிய கத்தார் அணி, சம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம் ஜப்பான் அணிக்குப் பிறகு அடுத்தடுத்து 2 தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை கத்தார் அணி பெற்றுக் கொண்டுள்ளது. இறுதியாக அந்த அணி ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற  ஆசியக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், ஆசியக் கிண்ண கால்பந்து சம்பியன் பட்டத்தை அதிக தடவைகள் வென்ற அணிகளுக்கான தரவரிசையில் 4ஆவது இடத்தை தென் கொரியாவுடன் (1956, 1960) கத்தார் பகிர்ந்து கொண்டது. முதல் மூன்று இடங்களில் ஜப்பான் (1992, 2000, 2004, 2011), சவுதி அரேபியா (1984, 1988, 1996), ஈரான் (1968, 1972, 1976) அணிகள் உள்ளன.

இந்த நிலையில், இம்முறை போட்டித் தொடரின் பெறுமதி மிக்க வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் ஆகிய 2 விருதுகளையும் கத்தார் அணியின் அக்ரம் அபி தட்டிச் செல்ல, சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை அதே அணியின் மிஷால் பர்ஷாம் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, 19ஆவது ஆசியக் கிண்ண கால்பந்து தொடர் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க<<