பஞ்சாப் அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த பானுக ராஜபக்ஷ

Indian Premier League 2022

1271

நவி மும்பையில் நடைபெற்ற நேற்றைய IPL போட்டியில், தொடர் வெற்றிகளை குவித்துவந்த குஜராத் டைட்டண்ஸ் அணிக்கு எதிராக, பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பதிவுசெய்தது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பலமிக்க குஜராத் அணிக்கு, ஆரம்பம் முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.

>>மே.தீவுகளின் புதிய தலைவராக நிக்கோலஸ் பூரன் நியமனம்<<

இதில் காகிஸோ ரபாடா தன்னுடைய 4 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை சாய்க்க, குஜராத் அணி சாய் சுதர்ஷனின் 65 ஓட்டங்களின் உதவியுடன் 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஓட்டங்களை குறைந்த வேகத்துடன் பெற்றுக்கொள்ள, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஜொனி பெயார்ஸ்டோவ் ஏமாற்றமளித்து ஆட்டமிழந்தார்.

எனினும் சிக்கர் தவானுடன் இணைந்த பானுக ராஜபக்ஷ, வேகமாக ஓட்டங்களை குவித்து தவானின் அழுத்தத்தை குறைக்க, பஞ்சாப் அணி பக்கம் வெற்றி திரும்பியது. பானுக ராஜபக்ஷ மற்றும் சிக்கர் தவான் ஆகியோர் 2வது விக்கெட்டுக்காக 87 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இதில் சிக்கர் தவான் அரைச்சதம் கடந்ததுடன், பானுக ராஜபக்ஷ 28 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 40 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 10 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 30 ஓட்டங்களை விளாச, சிக்கர் தவான் ஒரு சிக்ஸர் மற்றும் 8 Aபௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

எனவே, பஞ்சாப் அணி வெறும் 16 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 147 ஓட்டங்களை பெற்று வெற்றியை பெற்றுக்கொண்டது. இதேவேளை, இந்த போட்டியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளதுடன், குஜராத் அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<