சைனீஸ் தாய்ப்பேயில் ஜுன் முதலாம் மற்றும் 2ஆம் திகதி நடைபெறவுள்ள தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 5 மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளனர்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெறும் பொருட்டு இலங்கை வீரர்கள் பங்குபற்றுகின்ற கடைசி சர்வதேச மெய்வல்லுனர் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
உலக மெய்வல்லுனர் கண்டங்களுக்கிடையிலான சுற்றுத் தொடரின் வெண்கலப் பிரிவின் கீழ் சைனீஸ் தாய்ப்பேயில் நடைபெறவுள்ள இந்த தொடர் தாய்ப்பே நகரில் உள்ள தாய்ப்பே முனிசிபல் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுகயீனம் காரணமாக தொடர்ச்சியாக 3 சர்வதேச போட்டிகளைத் தவறவிட்ட இளம் வீராங்கனை தருஷி கருணாரத்னவும், கயந்திகா அபேரத்னவும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் நதிஷா ராமநாயக்க பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்றவுள்ளனர். இந்த 3 வீராங்கனைகளும் சைனீஸ் தாய்ப்பேயை நேற்று சென்றந்தடைந்தனர்.
இதனிடையே, சீனாவின் சொக்குயிங் விளையாட்டரங்கில் கடந்த 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெற்ற பெல்ட் அண்ட் ரோட் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த அருண தர்ஷனவும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட நதீகா லேகம்கேவும் தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக சீனாவில் இருந்து நேரடியாக சீன தாய்ப்பே சென்று இலங்கை அணியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
- ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்
- ஜேர்மனியின் அன்ஹால்ட் மெய்வல்லுனரில் முதலிடம் பிடித்தார் யுபுன்
- டோக்கியோவில் காலிங்க குமாரகேவிற்கு இரண்டாமிடம்
இந்த வீரர்களில் சீனாவில் நடைபெற்ற பெல்ட் அண்ட் ரோட் மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.48 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பிடித்த அருண தர்ஷன மீது தான் அனைவரது பார்வையும் திரும்பியுள்ளது. குறித்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கான தரவரிசைப் புள்ளிகளை அவர் சற்று அதிகரித்துக்கொண்டுள்ளார்.
எனவே, தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் சிறந்த காலத்தைப் பதிவுசெய்து வெற்றியீட்டினால் உலக தரவரிசையில் முன்னேற்றம் அடைந்து ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பு அருண தர்ஷனவிற்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சைனீஸ் தாய்ப்பே சென்றுள்ள இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர்களாக சுசந்த பெர்னாண்டோ மற்றும் விமுக்தி டி சொய்ஸா ஆகிய இருவரும் செயல்படவுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறுவதற்கு கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர்கள் ஆறு சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர். ஆனால் அவர்களில் எவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<