நேற்று ஆரம்பமாகிய மாகாண ரீதியிலான மகளிர் டி-20 போட்டி தொடரின் இரண்டு போட்டிகள் இன்று கொழும்பு புளும்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழக மைதானத்தில் இடம்பெற்றன. வட மத்திய மாகாண மகளிர் அணி மற்றும் தென் மாகாண மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வட மத்திய மாகாண மகளிர் அணியும், மத்திய மாகாண மகளிர் அணி மற்றும் மேல் மாகாண மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சூப்பர் ஓவர் மூலம் மத்திய மாகாண மகளிர் அணியும் வெற்றி பெற்றன.

இன்று காலை ஆரம்பமாகிய முதலாவது போட்டியில்,  வட மத்திய மாகாண மகளிர் அணியும், தென் மாகாண மகளிர் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் மாகாண மகளிர் அணியின் தலைவி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அதன்படி, தென் மாகாண மகளிர் அணி ஒரு சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றது. எனினும் வட மத்திய மாகாண மகளிர் அணியின் துள்ளியமான பந்து வீச்சின் காரணமாக, அவ்வணியினால் 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதில் தென் மாகாண அணியின் அனுஷ்கா சஞ்சீவனி 48 ஓட்டங்களையும், சாமரி பொல்கம்பல ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும் பெற்றனர்.

 Photos: Southern v North Central | Women’s Provincial T20 Championship 

இலகுவான வெற்றி இலக்கொன்றை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வட மத்திய மாகாண மகளிர் அணியினர் 16.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். இதில் மிகவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சாமரி அத்தபத்து 63 ஓட்டங்களைப்பெற்றார். பந்து வீச்சில் தென்மாகாண அணியின் சாமோதி குணரத்ன 16 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

ஸ்கோர் சுருக்கம்

தென் மாகாண மகளிர் அணி: 107/3 (20) – அனுஷ்கா சஞ்சீவனி 48, சாமரி பொல்கம்பல 31*

வட மத்திய மாகாண மகளிர் அணி: 108/2 (16.1) – சாமரி அத்தபத்து 63, ஒஸாதி ரணசிங்க 31, சமோதி குணரத்தன 16/2

போட்டி முடிவு – வடமத்திய மாகாண அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி


இதே மைதானத்தில் இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் மேல் மாகாண மகளிர் அணியும், மத்திய மாகாண மகளிர் அணியும் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேல் மாகாண அணித்தலைவி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். ஆரம்பம் முதலே துடுப்பாட்டத்தில் தடுமாறிய மேல் மாகாண அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அதிகபட்சமாக மேல் மாகாண அணி சார்பாக நிபுணி ஹன்சிக்கா 46 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் மத்திய மாகாண அணியின் உதேசிகா பிரபோதினி 15 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் செரினா ரவிக்குமார் 20 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் மிகவும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மத்திய மாகாண மகளிர் அணியினர், மேல் மாகாண மகளிர் அணியின் திறமையான பந்து வீச்சின் காரணமாக இலக்கை எட்ட முடியாமல் திண்டாடியது. அவ்வணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். இதனால் போட்டி சமநிலையில் முடிவுற்றது. துடுப்பாட்டத்தின் போது மத்திய மாகாண அணியின் பிரசாதினி வீரக்கொடி அதிகபட்சமாக 34 ஓட்டங்களை பெற்றார்.

இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக இரு அணியினருக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டது. சூப்பர் ஓவர் முடிவில், மத்திய மாகாண மகளிர் அணி, வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்

மேல் மாகாண மகளிர் அணி: 91/9 (20) – நிப்புனி ஹன்சிக்கா 46, உதேசிகா பிரபோதினி 15/3, செரீனா ரவிக்குமார் 20/2

மத்திய மாகாண மகளிர் அணி: 91/8 (20) – பிரசாதினி வீரக்கொடி 34, யசோதா மெண்டிஸ் 19

சூப்பர் ஓவர்

மேல் மாகாண மகளிர் அணி: 06/1 (1)

மத்திய மாகாண மகளிர் அணி: 07(0.5)

போட்டி முடிவு – மத்திய மாகாண மகளிர் அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.