2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் சம்பியன் பட்டம் வெல்லும் அணி, இரண்டாமிடத்தைப் பிடிக்கும் அணி மற்றும் பிற இடங்களைப் பெற்ற நாடுகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை குறித்த தகவல்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அறிவித்துள்ளது.
இதன்படி, இங்கிலாந்தின் லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்கா–அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற சம்பியனாகும் அணிக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 107 கோடியே 53 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
கடந்த இரண்டு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களில் சம்பியன்களான நியூஸிலாந்தும் அவுஸ்திரேலியாவும் பெற்ற பணப்பரிசைவிட இம்முறை பணப்பரிசு இரட்டிப்பு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 அத்தியாயங்களிலும் சம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே பணப்பரிசாக வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இம்முறை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி 62 கோடியே 68 இலட்சம் ரூபா) பணப்பரிசு வழங்கப்படவுள்ளது.
- டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிப்பு
- உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு
இறுதியாக நடைபெற்ற 2021-25 பருவகாலத்துக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட அணிக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை 800,000 அமெரிக்க டொலர்களாகும்.
இதேவேளை, இந்த தொடரில் விளையாட அனைத்து அணிகளும் புள்ளிப் பட்டியலில் பிடித்த இடங்களை கணக்கில் கொண்டு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6ஆவது இடம் பிடித்த இலங்கை அணிக்கு 840,000 அமெரிக்க டொலர்கள பரித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை ரூபாயில் சுமார் 25 கோடி ரூபாவாகும்.
இந்த நிலையில், இம்முறை ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 3ஆவது இடம்பிடித்த இந்திய அணிக்கு 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 4ஆவது இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 5ஆவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு 960,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 7ஆவது இடத்தைப் பிடித்த பங்காளதேஷ் அணிக்கு 720,000 அமெரிக்க டொலர்களும், 8ஆவது இடம் பிடித்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 600,000 அமெரிக்க டொலர்களும், கடைசி இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 480,000 அமெரிக்க டொலர்களும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<