ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம்

Asian Relay Championship 2024

59

தாய்லாந்தின் பாங்கொக்கில் நேற்று (21) நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் பிரபல இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணியினர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினர்.

அண்மையில் பஹாமாஸில் நடைபெற்ற உலக அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்று ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்ற இந்தியாவை இப்போட்டியில் இலங்கை அணி வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

குறித்த போட்டியை 3 நிமிடங்கள், 04.48 செக்கன்களில் நிறைவு செய்து இலங்கை அணியினர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர். தங்கம் வென்ற இலங்கை அஞ்சலோட்ட அணியில் அருண தர்ஷன, பசிந்து லக்ஷான் கொடிகார, தினுக்க தேஷான் மற்றும் காலிங்க குமாரகே ஆகியோர் இடம்பெற்றனர்.

எவ்வாறாயினும், ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி தங்கம் பதக்கம் வென்றிருந்தாலும், பாரிஸில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறவில்லை.

குறிப்பாக, உலக மெய்வல்லுனர் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி 27ஆவது இருப்பதால் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கு தகுதி பெறுவதற்கான பாதை கடினமாகியுள்ளது. பாரிஸில் நடைபெறும் 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 16 அணிகள் மட்டுமே பங்கேற்கும்.

இதேவேளை, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இந்தியா (3:05.76) வெள்ளிப் பதக்கத்தையும், வியட்நாம் (3:07.37) வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 4ஆவது இடத்தையும், பெண்களுக்கான 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 5ஆவது இடத்தையும் பெற்றுக் கொண்ட இலங்கை அணி, பெண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் 4ஆவது இடத்தையும் பெற்று ஏமாற்றம் அளித்தது.

குறிப்பாக, நேற்று நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டதால், வீரர்களுக்கு தங்களது சிறந்த நேரத்தை பதிவு செய்ய முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<