ஜேர்மனியின் அன்ஹால்ட் மெய்வல்லுனரில் முதலிடம் பிடித்தார் யுபுன்

Internationales Leichtathletik Meeting Anhalt 2024

118
Yupun Abeykoon

ஜேர்மனியின் டெஸாவு நகரில் நேற்று (25) நடைபெற்ற Internationales Leichtathletik Meeting Anhalt 2024 சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.16 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பிடித்தார். 

இந்தப் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்றை 10.15 செக்கன்களில் நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட யுபுன், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆண்களுக்கான 100 மீற்றரில் தனது அதிசிறந்த காலப்பெறுமதியையும் பதிவு செய்தார் 

எனினும், பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான உரிய அடைவு மட்ட நேரமான 10.00 செக்கன்களை அடைய முடியாமல் போனது. 

இந்த மாத முற்பகுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற டுபாய் கிராண்ட் பிரிக்ஸ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குகொண்ட யுபுன், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.18 செக்கன்களில் நிறைவு செய்த யுப்புன் அபேகோன் 3ஆம் இடத்தைப் பிடித்தார் 

அதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் திகதி இத்தாலியில் நடைபெற்ற Roma Sprint Festival மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்ட அவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.21 செக்கன்களில் நிறைவு செய்து 4ஆம் இடத்தைப் பெற்றுக் கொண்டார் 

எனவே, தொடர்ச்சியாக சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யுபுன் அபேகோனுக்கு தரவரிசைப் புள்ளிகளின் அடிப்படையில் ஒலிம்பிக் தகுதியை பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 

இது இவ்வாறிருக்க, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு விழாவிற்கான தகுதியைப் பெறுவதற்கு சர்வதேச மெய்வல்லுனர் சங்கத்தினால் ஜூன் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>>மேலும்பலமெய்வல்லுனர்செய்திகளைப்படிக்க<<