லக்னோவ் சுபர் ஐயண்ட்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர்

102

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் தொடர்ந்து 2 தடவைகள் பிளே-ஓப் சுற்றுக்கு முன்னேறிய லக்னோவ் சுபர் ஐயண்ட்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டு IPL தொடரில் புதிய அணியாக இணைந்துகொண்ட லக்னோவ் சுபர் ஐயண்ட்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு பிளே-ஓப் சுற்று வரை முன்னேறி அசத்தியது.

குறிப்பாக இம்முறை IPL தொடரில் லக்னோவ் சுபர் ஐயண்ட்ஸ் அணியின் தலைவர் கே.எல் ராகுல் உபாதை காரணமாக பாதியிலேயே விலகிய போதும் அந்த அணி புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்து சிறப்பாகவே செயல்பட்டது.

இந்த நிலையில், லக்னோவ் சுபர் ஐயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கடந்த 2 ஆண்டுகளாக முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகின்ற நிலையில், தலைமைப் பயிற்சியாளராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆன்ட்டி பிளவர் செயல்பட்டு வந்தார்.

இருப்பினும், அவருடைய 2 ஆண்டுகால பதவிக்காலம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்த ஆண்டுடன் நிறைவு பெற்றுள்ளதால் அடுத்த பருவத்தில் லக்னோவ் சுபர் ஐயண்ட்ஸ் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன.

இந்த நிலையில், அந்த அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் அந்த அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆவதற்கு முன் பிக்பாஷ் லீக்கில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர் பணியாற்றியிருந்ததுடன், அவரது பயிற்றுவிப்பில் அந்த அணி மூன்று தடவைகள் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

அதேபோல, அவுஸ்திரேலியா அணி முதல் முறையாக கடந்த 2021இல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தை வென்ற போது ஜஸ்டின் லேங்கர்தான் அந்த அணியின் பயிற்சியாளராக பணியாற்றியிருந்தார். எவ்வாறாயினும், 2022 பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அவர் இராஜினாமா செய்தார்.

எனவே தற்போது அவர் முதல் தடவையாக IPL தொடரில் பயிற்சியாளராக அவதாரம் எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 >> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<