உள்ளக நீளம் பாய்தலில் இலங்கை சாதனை படைத்தார் தனுஷ்க

119

அமெரிக்காவின் தற்போது மெய்வல்லுனர் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்ற இலங்கையின் நட்சத்திர நீளம் பாய்தல் வீரரான தனுஷ்க சந்தருவன், உள்ளக மெய்வல்லுனர் நீளம் பாய்தலில் இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.

அமெரிக்காவில் நேற்று (20) நடைபெற்ற மாஸ்டர்ஸ் உள்ளக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்குகொண்ட அவர், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் 7.82 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய இலங்கை சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் 1995ஆம் ஆண்டு பெனில்டஸ் பெர்னாண்டோவினால் அமெரிக்காவில் வைத்து 7.75 மீட்டர் தூரம் பாய்ந்து நிலைநாட்டப்பட்ட இலங்கை சாதனையை 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ்க சந்தருவன் முறியடித்துள்ளார்.

அதேபோல, உள்ளக மெய்வல்லுனரில் ஆண்களுக்கான நீளம் பாய்தலுக்கான உலக தரவரிசையில் 40ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் ஏஅண்ட்எம் பல்கலைக்கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முப்பாய்ச்சல் மற்றும் நீனம் பாய்தல் ஆகிய போட்டிகளில் பங்குபற்றி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற தனுஷ்க சந்தருவன், கடந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான் நீளம் பாய்தலில் பங்குகொண்டு 7.84 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<