3 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியை சுவீகரித்த கடற்படை விளையாட்டு கழகம்

203

டயலொக் ரக்பி லீக் தொடரின் தீர்க்கமான 13 ஆம் வாரத்திற்கான போட்டியொன்றில் CR & FC அணியும் கடற்படை அணியும் மோதிக் கொண்டன. ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் கடற்படை விளையாட்டுக் கழகம் 37-34 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியை பெற்று மூன்றாம் இடத்தை உறுதி செய்து கொண்டது.

CR & FC மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியை அவ்வணியின் அஷான் டி கொஸ்டா தொடக்கி வைத்தார். போட்டியின் ஆரம்பத்தில் கிடைத்த ஸ்க்ரம் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட CR & FC வீரர்கள் அனுராத ஹேரத் ஊடாக முதல் ட்ரையினை வைத்தனர். கடினமான கோணத்தில் கிடைத்த கொன்வெர்சன் உதையை நளீன் குமார வெற்றிகரமாக உதைத்தார். (கடற்படை அணி 00 – CR & FC அணி 07)

கடற்படை அணிக்கு சில ட்ரை வாய்ப்புக்கள் கிடைத்த போதிலும் அவை தவறவிடப்பட்டன. எவ்வாறாயினும் பெனால்டி உதை ஒன்றின் மூலம் திலின வீரசிங்க கடற்படை அணிக்கு முதல் புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (கடற்படை அணி 03 – CR & FC அணி 07)

CR & FC அணி தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்படி அவ்வணி ஷெமால் வீரசேகர மூலமாக தமது இரண்டாவது ட்ரையினை பெற்றுக் கொண்டது. நளீன் குமார உதையினை தவறவிட்டார். (கடற்படை அணி 03 – CR & FC அணி 12)

சில நிமிடங்களின் பின்னர் தமது வழமையான ஆட்டத்திற்கு திரும்பிய கடற்படை வீரர்கள் ட்ரை ஒன்றை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தனர். இளம் வீரர் சுபுன் டில்ஷான் ட்ரையினை பெற்றுக் கொடுத்ததுடன், திலின வீரசிங்க கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (கடற்படை அணி 08 – CR & FC அணி 12)

இத்தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் CR & FC அணியின் இளம் முன்கள வீரர் ஒமல்க குணரத்ன எதிரணியின் தடுப்பை தகர்த்து முன்னேறி ட்ரை ஒன்றை வைத்தார். இலகுவான உதையினை நளீன் குமார குறிதவறாது உதைத்தார். (கடற்படை அணி 08 – CR & FC அணி 19)

முதல் பாதியின் இறுதி 15 நிமிடங்களில் அதிரடி ஆட்டத்தை வெளிக்காட்டி எதிரணியை நிலை குலையச் செய்த கடற்படை அணி அடுத்தடுத்து இரண்டு பெனால்டி உதைகள் மற்றும் ட்ரை ஒன்றினை வைத்து முன்னிலை பெற்றுக் கொண்டது. இரண்டு பெனால்டி உதைகளையும் கொன்வெர்சன் உதையையும் திலின வீரசிங்க லாவகமாக உதைத்ததுடன், ட்ரையினை துலஞ்சன வீரசிங்க பெற்றுக் கொடுத்தார். அத்துடன் முதல் பாதி நிறைவுக்கு வந்தது. (கடற்படை அணி 21 – CR & FC அணி 19)

முதல் பாதி: கடற்படை விளையாட்டு கழகம் 21 – CR & FC விளையாட்டு கழகம் 19

முதல் பாதியை போன்றே இரண்டாம் பாதியும் விறுவிறுப்பாகவே இடம்பெற்றது. இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில் கடற்படை விளையாட்டுக் கழகத்தின் சாணக சந்திமால் ட்ரொப் கோல் ஒன்றின் மூலம் மூன்று புள்ளிகளை பெற்றுக் கொடுத்தார். (கடற்படை அணி 24 – CR & FC அணி 19)

சில நிமிடங்களின் பின்னர் CR & FC அணி வீரர் தாரிக் சாலிஹ் விதிமுறை மீறிய ஆட்டத்தின் காரணமாக மஞ்சள் அட்டை ஒன்றினை பெற்று 10 நிமிடங்களுக்கு வெளியேறினார். அதன்மூலம் கிடைத்த பெனால்டி உதையை திலின வீரசிங்க வெற்றிகரமாக உதைத்து புள்ளிகளை மேலும் அதிகமாக்கினார். (கடற்படை அணி 27 – CR & FC அணி 19)

எனினும் சளைக்காது போராடிய CR & FC அணி ட்ரை ஒன்றினை பெற்று புள்ளி வித்தியாசத்தை குறைத்தது. மீண்டும் விவேகமான ஆட்டத்தை வெளிக்காட்டிய ஓமல்க குணரத்ன ஸ்க்ரம் ஒன்றிலிருந்து பந்தை பெற்று முன்னேறி, விங் நிலை வீரர் ரந்தித வர்ணபுரவிற்கு பந்தினை கடத்த, அவர் ட்ரை வைத்தார். நளீன் குமார கொன்வெர்சன் உதையை தவறவிட்டார். (கடற்படை அணி 27 – CR & FC அணி 24)

கடற்படை வீரர் லஹிரு விஸ்வஜித் விதிமுறைக்கு மீறிய அபாயகரமான தடுப்பாட்டம் காரணமாக சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதன் காரணமாக அவ்வணிக்கு 14 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதன் போது கிடைத்த பெனால்டி உதையை நளீன் குமார குறிதவராது உதைத்து புள்ளிகளை சமனாக்கினார். (கடற்படை அணி 27 – CR & FC அணி 27)

இரு அணிகளும் போட்டியில் முன்னிலை பெற ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எவ்வாறாயினும் மற்றுமொரு சிறப்பான பெனால்டி உதை மூலம் திலின வீரசிங்க கடற்படை அணியை முன்னிலை பெறச் செய்தார். (கடற்படை அணி 30 – CR & FC அணி 27)

புள்ளிகளை மேலும் அதிகரிக்க உதவி செய்த சுபுன் டில்ஷான் அபாரமான நகர்வொன்றின் மூலம் CR & FC அணியின் தடுப்பை ஊடுருவி முன்னேறி சாணக சந்திமாலிற்கு பந்தை கடத்தினார். அவர் ட்ரை ஒன்றினை வைக்க கடற்படை அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்தது. கடினமான உதையை திலின வீரசிங்க லாவகமாக உதைத்தார். (கடற்படை அணி 37 – CR & FC அணி 27)

எனினும் இறுதி நிமிடங்களில் விட்டுக்கொடுக்காது போராடிய CR & FC அணி சஷான் மொஹமட் மற்றும் ஒமல்க குணரத்ன ஆகியோரின் அபாரமான பந்து கைமாற்றலின் மூலமாக கம்பங்களுக்கடியில் ட்ரை வைத்தது. நளீன் குமார இலகுவான உதையை புள்ளிகளாக மாற்றினார்.  (கடற்படை அணி 37 – CR & FC அணி 34)

போட்டி நிறைவடையும் கட்டத்தில் CR & FC அணிக்கு இலகுவான பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்த போதிலும், அவ்வணி கம்பங்களை நோக்கி உதைத்து போட்டியை சமநிலையில் முடித்துக் கொள்ளாமல் ட்ரை ஒன்றினை பெற்றுக் கொள்ள முயற்சி செய்தது. எவ்வாறாயினும் 14 வீரர்களுடன் சிறப்பாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்ட கடற்படை அணி வெற்றியை தமதாக்கியது.

முழு நேரம்: கடற்படை விளையாட்டு கழகம் 37 – CR & FC விளையாட்டு கழகம் 34

இவ்வெற்றியின் மூலம் கடற்படை அணி லீக் தரவரிசையில் மூன்றாம் இடத்தை உறுதி செய்து கொண்டது. முதலிடத்திற்கான போட்டியை தெரிவு செய்யக் கூடிய தீர்க்கமான போட்டியில் ஹெவலொக் மற்றும் கண்டி கழக அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி 5ஆம் திகதி மாலை 6.30 இற்கு ஹெவலொக் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. போட்டியை நேரடியாக கண்டுகளிக்க ThePapare.com உடன் இணைந்திருங்கள்.

ThePapare.com இன் ஆட்ட நாயகன் – சுபுன் டில்ஷான் (கடற்படை விளையாட்டுக் கழகம்)

புள்ளிகளைப் பெற்றோர்

கடற்படை விளையாட்டுக் கழகம் – 37

ட்ரை – சுபுன் டில்ஷான் 1, துலஞ்சன விஜேசிங்க 1, சாணக சந்திமால் 1

கொன்வர்சன் – திலின வீரசிங்க 2

பெனால்டி – திலின வீரசிங்க 5

ட்ரொப் கோல் – சாணக சந்திமால் 1

CR & FC விளையாட்டு கழகம் – 34

ட்ரை – ஓமல்க குணரத்ன 2, அனுராத ஹேரத் 1, ஷெமால் வீரசேகர 1, ரந்தித வர்ணபுர 1

கொன்வர்சன் – நளீன் குமார 3

பெனால்டி – நளீன் குமார 1