கொவிட் -19 என்ற கொரோனா வைரஸ் தொற்று பீதியால் உலகளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கிரிக்கெட் தொடர்கள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் சில தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒருசில வாரங்களுக்கு முன் கிரிக்கெட் மைதானங்களில் சிக்ஸர்கள், பௌண்டரிகள், அரைச்சதங்கள், சதங்கள், ஹெட்ரிக், 5 விக்கெட்டுக்கள் என பல வீரர்கள் தங்களது துடுப்பு மட்டைகளாலும், பந்துவீச்சாலும் சாகசங்களையும், சாதனைகளையும் புரிந்து வந்தனர்.

கொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்

சீனாவில் உருவாகி, இன்று…..

எனினும், முழு உலகையே தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸினால் ஏனைய விளையாட்டுக்களைப் போல கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடுகின்ற பெரும்பாலான வீரர்கள் தங்களது வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர்.

145 வருடகால கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால் இவ்வாறு கிரிக்கெட் உலகையே முடக்கிப் போட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல.

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தில் முதலாவது உலக யுத்தம் இடம்பெற்ற கால கட்டத்தில் அனைத்து வகையான முதல்தரப் போட்டிகளும் இரத்து செய்யப்பட்டன.

ஆனாலும், நிதி திரட்டும் போட்டிகள், இராணுவ படைப் பிரிவுகளுக்கிடையில் நடைபெறுகின்ற போட்டிகள் அனைத்தும் நடைபெற்றன.

இதனையடுத்து இரண்டாவது உலக மகா யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் இவ்வாறு கிரிக்கெட் போட்டிகள் தடைப்பட்டன.

இதன் ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் 1939 இல் டெஸ்ட் தொடரொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் மாதம் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

எனினும், யுத்தத்தின் போது கைது செய்கின்றவர்களை தடுத்து வைப்பதற்கான  முகாமாக ஓவல் மைதானத்தை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் இடைநிறுத்தப்பட்டது.

இதுஇவ்வாறிருக்க, இரண்டாம் உலக மகா யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் இங்கிலாந்தில் முக்கிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவிட்டாலும், ஏனைய நாடுகளில் ஒருசில போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

அதிலும் குறிப்பாக, லுப்ட்வாப் என்ற விசேட விமானம் மூலம் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு கொண்டிருந்த போது, லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த கிரிக்கெட் போட்டியொன்றைப் பார்வையிட அதிகளவான பார்வையாளர்கள் வந்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், 1944 இல் லண்டணை இலக்காகக் கொண்டு ஜேர்மனியின் வுடில்பெக் – வீ 1 விமானம் மூலம் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டன.

இதில் ஜுலை 29 ஆம் திகதி லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியொன்றில் இங்கிலாந்தின் அரச விமானப்படை அணிக்காக நட்சத்திர வீரரான வோலீ ஹெமன்ட் விளையாடினார்.

இந்தப் போட்டியைக் காண 3000 இற்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்துக்கு வருகை தந்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலங்கள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் குறித்த விமானத்திலிருந்து மைதானத்தை அண்டிய பகுதியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் போது மைதானத்தில் இருந்த வீரர்களைப் போல ரசிகர்கள் அனைவரும் கீழே விழுந்தனர்.

எனினும் குறித்த குண்டானது அதிர்ஷ்டவசமாக மைதானத்திலிருந்து 200 மீற்றர் தூரத்தில் விழுந்து வெடித்ததால் அனைவரும் தப்பித்துக் கொண்டனர்.

உள்ளூர் முதல்தர கிரிக்கெட்டில் அசத்தும் ஹஷான் திலகரத்னவின் மகன் துவிந்து

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும…..

ஆனாலும், குறித்த போட்டியானது தொடர்ந்து நடைபெற்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், 1968 இல் தென்னாபிரிக்கா சுற்றுப்யணத்துக்கான இங்கிலாந்து அணியில் இருந்து பசில் டி ஒலிவேரா நீக்கப்பட்டார். இதனால் 1970 இல் அதே தென்னாபிரிக்கா போட்டித் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

குறிப்பாக, போட்டித் தொடரில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என செய்திகள் வெளியாகியதையடுத்து முதலாவது போட்டி நடைபெற ஒருசில தினங்கள் இருக்க, போட்டித் தொடரானது இரத்து செய்யப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில்தான் தென்னாபிரிக்காவில் கறுப்பு இனத்தவர்களுக்கான இனப்பாகுபாடு தலைதூக்கத் தொடங்கியது. இதனால் அங்கு சுமார் 20 வருடங்கள் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இந்தியா, இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை சுனாமிப் பேரலை தாக்கியது.

இந்த இயற்கை அனர்த்தத்தால் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 1.5 மில்லியனுக்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களை இழந்து நிர்க்கதியாகினர்.

இந்த நிலையில், சுனாமி அனர்த்தத்தினால் ஒருசில கிரிக்கெட் தொடர்களும் உடனடியாக இரத்து செய்யப்பட்டன.

இதில் குறிப்பாக இலங்கை அணி, நியூஸிலாந்துக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்ததுடன், டிசம்பர் 26 ஆம் திகதியான Boxing Day தினத்தன்று அந்த அணியுடனான ஒருநாள் போட்டியில் விளையாடியது.

எனினும், சுனாமி அனர்த்தத்தின் எதிரொலியினால் இவ்விரு அணிகளுக்குமிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இரத்து செய்யப்பட்டு இலங்கை அணி வீரர்கள் நாடு திரும்பினர்.

இது இவ்வாறிருக்க, இலங்கையைப் பொருத்தமட்டில் சுனாமி அனர்த்தம் காரணமாக தென்பகுதியில் உள்ள மிகவும் பிரபல்யமிக்க காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் முற்றிலும் சேதங்களுக்கு உள்ளாகியது.

இந்த நிலையில், காலி கிரிக்கெட் மைதானம் மீண்டும் புனரமைக்கப்பட்டதுடன், சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு 2007 டிசம்பர் மாதம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி அங்கு நடைபெற்றது.

இதேவேளை, இலங்கை அணி கடந்த 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்தத் தொடரில் கடாபி மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்கு மைதானம் நோக்கி வந்த இலங்கை வீரர்கள் பயணித்த பஸ் வண்டி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் 6 பேர் காயம் அடைந்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக தொடரை இரத்து செய்து இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது. அதன்பின் எந்தவொரு அணியும் பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை.

இதேநேரம், 1987 மற்றும் 1993 ஆகிய வருடங்களில் நியூஸிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய போது கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து நியூஸிலாந்து அணி, உடனடியாக தொடரை இரத்து செய்து சொந்த நாடு திரும்பியது.

அதேபோன்று 2002 ஆம் ஆண்டில் கராச்சியில் நியூஸிலாந்து அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமையில் வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.

பழைய கிரிக்கெட் வீடியோக்களை ரசிகர்களுக்கு பரிசாக அளிக்கும் ஐ.சி.சி

சர்வதேச அளவில் அதிபயங்கரமாக பரவி…..

எதுஎவ்வாறாயினும், இதுவரை கிரிக்கெட் அணியொன்றை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலாக 2009 இலங்கை அணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை குறிப்பிடலாம்.

எதுஎவ்வாறாயினும், சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு அதே இலங்கை அணி, கடந்த வருடம் பாகிஸ்தானுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடியது.

இந்த நிலையில், இறுதியாக 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றின் ஜும்ஆத் தொழுகைக்காக வந்த அப்பாவி மக்களை இலக்கு வைத்து தீவிரவாதியொருவன் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதனால் 51 பேர் ஸ்த்தலத்திலேயே உயிரிழந்தனர்.

எனினும், இந்தப் படுகொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பங்களாதேஷ் அணி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியதுடன், குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற ஒருசில நிமிடங்களுக்கு முன் அந்த அணி வீரர்கள் தொழுகைக்காக குறித்த பள்ளிவாசலை நோக்கி வருகை தந்தனர்.

எனினும், அதிஷ்டவசமாக எந்தவொரு வீரரும் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு முன் அந்த சம்பவத்திலிருந்து தப்பித்து உடனடியாக தங்களுடைய ஹோட்டலை வந்தடைந்தனர்.

இதனால், பங்களாதேஷ் அணி உடனடியாக தொடரை இரத்து செய்து சொந்த நாடு திரும்பியது.

இவ்வாறு, யுத்தம், தீவிரவாதம் மற்றும் இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட விடயங்களினால் கிரிக்கெட் விளையாட்டிலும் பல தடங்கல்கள், பின்னடைவுகள் ஏற்பட்ட வரலாறுகள் உள்ளன. ஆனாலும், இன்று கொவிட்-19 என்கின்ற கொரோனா வைரஸ் கிரிக்கெட் விளையாட்டை மாத்திரமல்ல, முழு விளையாட்டு உலகையும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது என்றால் மிகையாகாது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<