இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கட் அணி, இலங்கை மகளிர் கிரிக்கட் அணியுடன் 4 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு T20 போட்டியில் விளையாடவுள்ளது. இன்று (18) நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை அபாரமாக வென்றது.

ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை மகளிர் அணியின் புதிய அணித் தலைவி சமரி அதப்பத்து முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணியின் முதல் இரண்டு விக்கட்டுகளும் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் கைப்பற்றப்பட்டது.

14292361_1206977009375862_6641982133805375520_nதொடர்ந்து அணி தலைவியும் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க இலங்கை அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை அணியின் முதல் 5 துடுப்பாட்ட வீராங்கனைகளில் 4 துடுப்பாட்ட வீராங்கனைகள் ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் மைதானத்தில் இருந்து அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால் வெளியேற்றப்பட்டனர். அவுஸ்திரேலிய பந்துவீச்சிற்கு சற்று தாக்குப் பிடித்து நின்ற இமல்கா மெண்டிஸ் 28 பந்துகளுக்கு 1 ஓட்டம் மட்டுமே பெற்றார். முதல் 5 துடுப்பாட்ட வீராங்கனைகளில் அவர் மட்டுமே ஓட்டம் ஒன்றைப் பெற்றது பெறும் ஏமாற்றம் அளித்தது.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 3 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் காணப்பட்டது. நிதானமாக துடுப்பெடுத்தாடிய கௌஷல்யா 36 பந்துகளில் 14 ஓட்டங்கள் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அனைத்து வீராங்கனைகளும் ஆட்டமிழந்து செல்ல அணிக்கு நம்பிக்கை அளித்த இனோகா ரணவீர தனி ஆளாக துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார்.

43 பந்துகளில் 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 32 ஓட்டங்களைக் குவித்தார் இனோகா ரணவீர. அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களாகிய பர்லிங் மற்றும் பீம்சின் பந்து வீச்சில் இலங்கை அணி 24.5 ஓவர்களில் 76 ஓட்டங்களுக்கு சுருண்டது.

80 ஓட்டங்கள் எனும் இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியினின் முதல் விக்கட்டை 2ஆவது ஓவரில் கௌஷல்யா கைப்பற்றினார். எனினும் அதன் பின்னர் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய வீராங்கனைகளின் விக்கட்டை இலங்கை அணியால் தொடர்ந்து கைப்பற்ற முடியவில்லை.

2ஆவது விக்கட்டுக்காக போல்டன் மற்றும் லென்னிங் இணைந்து பெற்ற 45 ஓட்டங்கள் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது.

அவுஸ்திரேலியா 45 ஓட்டங்களைப் பெற்று இருந்த நிலையில் துடுப்பாட்டத்தில் ஜொலித்த இனோகா பந்துவீச்சிலும் ஜொலித்து தொடர்ந்து இரண்டு விக்கட்டுகளைக் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய மகளிர் அணியின் விக்கட்டுகள் கைப்பற்றப்பட்டு ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 50 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து காணப்பட்டது. எனினும் இலங்கை அணி மிகக் குறைந்த ஓட்டங்களையே பெற்றுக்கொண்டமையால் அவுஸ்திரேலிய அணியை கட்டுப்படுத்த முடியவில்லை.

இறுதியில் 15.4 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து அவுஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை அடைந்தது. பந்து வீச்சிலும் ஜொலித்த இனோகா ரன்வீர 3 விக்கட்டுகளைக் கைப்பற்றினார்.

இலங்கை அணியின் பந்து வீச்சு ஓரளவு ஆறுதல் அளித்த போதும் இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம் காரணமாக அபாரத் தோல்வி அடைந்தது. 3 ஒரு நாள் போட்டிகள் எஞ்சிய நிலையில் இலங்கை மகளிர் அணி விட்டதை பிடிக்குமா என்பது சந்தேகமானது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் அணி – 76/10 (24.5) , இனோகா ரணவீர 32, கௌஷல்யா 14, பர்லிங் 3/4, பீம்ஸ் 3/16

அவுஸ்திரேலிய மகளிர் அணி – 79/6 (15.4), லென்னிங் 27, போல்டன் 19, இனோகா ரணவீர 3/20

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்