பொதுநலவாய விளையாட்டு விழாவில் 114 இலங்கை வீரர்கள்

Commonwealth Games 2022

192

இங்கிலாந்தில் பேர்மிங்ஹாமில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 15 வகையான போட்டி நிகழ்ச்சிகளுக்காக 114 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் இன்று (30) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

பொதுநலவாய விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாதங்களுக்கும் குறைவான நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், குறித்த விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி விபரம் மற்றும் அதற்கான ஏற்பாடுகள் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட சந்திப்பு இன்று (30) கொழும்பில் உள்ள ஒலிம்பிக் இல்லத்தில் நடைபெற்றது.

இலங்கை பொதுநலவாய விளையாட்டு சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை அணியின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதில் மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ உரையாற்றுகையில், இந்த ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 114 வீர வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளதாகவும் அதில் 54 வீரர்கள் மற்றும் 60 வீராங்கனைகள் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.

இதுதவிர, ஒவ்வொரு விளையாட்டு சங்கத்தினாலும் பரிந்துரைக்கப்பட்ட பயிற்சியாளர்கள், முகாமையாளர் என 35 பேர் அடங்கிய அதிகாரிகள் குழு மற்றும் 16 உதவியாளர்களும் என மொத்தம் 165 பேர் கொண்ட குழு இந்த ஆண்டு பொதுநலலாய விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் பேர்மிங்ஹமில்

இதனிடையே, கொரோனா வைரஸ் உள்ளிட்ட முக்கிய விடயங்களை கருத்தில் கொண்டு இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்குபற்றுகின்ற அனைத்து விளையாட்டு வீரர்களும் ஒலிம்பிக் போன்று விளையாட்டுக் கிராமம் ஒன்றில் தங்கவைக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்த அவர், அவர்களுக்காக ஐந்து வெவ்வேறு தங்குமிட வசதிகளை போட்டி ஏற்பாட்டுக் குழு செய்துள்ளதாகவும், அவற்றுள் நான்கு இடங்களில் இலங்கை வீரர்கள் தங்கவைப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

அதேபோல, குறித்த நான்கு இடங்களுக்கும் தனித்தனியாக பொறுப்பான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில், இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள முதலாவது இலங்கை அணி எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. அதற்கு முன்னதாக மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ உள்ளிட்ட அதிகாரிகள் குழு ஜுலை 21ஆம் திகதி பேர்மிங்ஹாமை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்ற இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட அணிகள்!

இதுஇவ்வாறிருக்க, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு வெளிநாடுகளில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்ற ஒருசில வீரர்கள் நேரடியாக அந்தந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்தை வந்தடைவார்கள் என மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதன்படி, இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரான யுபுன் அபேகோன் மற்றும் அவரது பயிற்சியாளர் இத்தாலியிலிருந்தும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளான அனாமரி ஒண்டாஜ்ஜி, மில்கா கெஹானி ஜப்பானிலிருந்தும், ஜூடோ வீரர் சாமர தர்மரத்ன ஸ்லோவோக்கியாவிலிருந்தும், டைவிங் வீரர் துலாஞ்சன் பெர்னாண்டோ அவுஸ்திரேலியாவிலிருந்தும், இலங்கை மல்யுத்த அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் ஹங்கேரியிலிருந்தும் இவ்வாறு இங்கிலாந்தை வந்தடையவுள்ளனர்.

மறுபுறத்தில் இலங்கை மெய்வல்லுனர் அணியில் இடம்பெற்றிருந்த அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்ற உயரம் பாய்தல் வீரரான உஷான் திவங்க பெரேரா விசா பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இருந்து விலக தீர்மானித்ததையடுத்து அவருக்குப் பதிலாக பிரிதொரு வீரருக்கு வாய்ப்பு வழங்க தேசிய ஒலிம்பிக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களுக்கு 3 பிரிவுகளின் விமான டிக்கெட் வழங்கப்படவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சு 20 பேருக்கும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் 20 பேருக்கும் பொதுநலவாய விளையாட்டுத்துறை சங்கம் 99 பேருக்கும் விமான டிக்கெட்டுகளை வழங்ககுகின்றன.

அத்துடன், இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அனைத்து செலவுகளையும் இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கவுள்ளது.

ஆசிய, பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் பங்கேற்கும் மெய்வல்லுனர் குழாம் அறிவிப்பு

இதேவேளை, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் முதல் தடவையாக இலங்கை அணியில் வீரர்களின் எண்ணிக்கையை விட வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் தலைவர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், மிக விரைவில் தலைவர் மற்றும் முழு வீரர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க பொதுநலவாய விளையாட்டு விழாவில் பளுதூக்கல், மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ், மெய்வல்லுநர் ஆகிய போட்டிகளில் இலங்கைக்கு பதக்கம் கிடைக்கும் என அனுமானிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழா இங்கிலாந்தின் பேர்மிங்ஹாம் நகரில் எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதிவரை நடைபெற உள்ளது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<