கட்டாரும் 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத் தொடரும்

280

பிரபல இசைக்குழுவான BTS இன் தலைமைப் பாடகரான ”ஜங் குக்” 2022ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கிண்ண தொடரின் உத்தியோகபூர்வ பாடல்களில் ஒன்றான “Dreamers” பாடலில், ”Look who we are, we are the dreamers, We make it happen, ’cause we believe it ” எனக் கூறுகின்றார்.

இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை முழு உலகுக்கும் உணர்த்தி காட்டும் வகையில் மத்திய கிழக்கினைச் சேர்ந்த சிறிய நாடொன்று தனது கனவினை நனவாக்கியிருக்கின்றது. அந்த நாடு கட்டார். கட்டார் பல விமர்சனங்களை தாண்டி தங்களது கனவான 2022ஆம் ஆண்டின் கால்பந்து உலகக் கிண்ணத் தொடரினை இன்று நனவாக்கி வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது.

கால்பந்து விளையாட்டின் மிகப் பெரும் திருவிழாவாக கருதப்படும் கால்பந்து உலகக் கிண்ணத்தினை நடாத்தும் வாய்ப்பினை கட்டார் 2010ஆம் ஆண்டு பெற்றிருந்தது. அதாவது, இதன் மூலம் கால்பந்து உலகக் கிண்ணத்தை நடாத்தும் முதலாவது மத்திய கிழக்கு நாடு கட்டாராகும். அத்தோடு 2002ஆம் ஆண்டின் பின்னர், ஆசிய நாடு ஒன்றில் கால்பந்து உலகக் கிண்ணம் நடைபெறுவதும் இதுவே முதல் தடவையாகும்.

கட்டார் நாடானது, மாபெரும் சவாலான உலகக் கிண்ணம் ஒன்றை தமது சொந்த மண்ணில் சாத்தியமாக்க பல்வேறு விடயங்களைச் செய்திருக்கின்றது. கட்டார் பொதுவாக அதிக உஷ்ண நிலை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். எனவே கால்பந்து உலகக் கிண்ணத் தொடர்கள் பாரம்பரியரீதியாக நடாத்தப்படும் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் தெரிவு செய்யப்படாமல், 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத் தொடரினை நடாத்துவதற்கு குளிர் மாதங்களான நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகியவை தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த கால்பந்து உலகக் கிண்ணத்திற்காக கட்டார் கட்டமைப்பு வசதிகளினையும் விருத்தி செய்திருக்கின்றது. அந்தவகையில் பிரமாண்டமான முறையில் குளிரூட்டல் (A/C) வசதிகளுடனான புதிய 7 கால்பந்து அரங்குகள் இந்த கால்பந்து உலகக் கிண்ணத்திற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன.

புதிதாக அமைக்கப்பட்ட மைதானங்கள் கட்டாரின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருப்பதோடு, அவை சுற்றுச்சூழல் பாதுகாப்பினை (Sustainability) வலியுறுத்தும் நோக்கத்திலும் “Zero Waste” எண்ணக் கருவுடன் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, இந்த உலகக் கிண்ணத் தொடரில் டோஹாவில் அமைக்கப்பட்டிருக்கும் மைதானங்களில் ஒன்றான Stadium 974 இணை நோக்குவோம். இது ஒரு மீள் சுழற்சி மைதானமாகும். அதாவது தற்காலிகமான இந்த மைதானம் மீள் சுழற்சி செய்யக்கூடிய கப்பல் பொதி கொள்கலங்கள் (Shipping Containers) 974 உடன் அமைக்கப்பட்டிருப்பதோடு, கால்பந்து உலகக் கிண்ணத் தொடர் நிறைவடைந்த பின்னர் பிரிக்கப்படக்கூடிய (Disassemble) வகையில் காணப்படுகின்றது. இதில் 974 என்னும் இலக்கம், கட்டாரின் சர்வதேச அழைப்புக் குறியீட்டினை (International Dialing Code) குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது.

Stadium 974

அதேவேளை, இந்த உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி அடங்கலாக மொத்தம் 10 போட்டிகள் நடைபெறவுள்ள லுசைல் அரங்கு, இந்த கால்பந்து உலகக் கிண்ணத்தில் காணப்படும் மிகப் பெரிய மைதானமாக இருப்பதோடு சர்வதேச அளவில் அனைத்து வசதிகளும் கொண்ட மிகப் பிரமாண்ட கால்பந்து அரங்குகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

லுசைல் அரங்கு

அத்துடன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்க வரும் கட்டார் உள்ளிட்ட 32 நாடுகளின் கால்பந்து வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளும் வகையில் அணிகளின் Base Camps, மைதானங்ளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.

இன்னும் இந்த உலகக் கிண்ணத் தொடருக்காக புதிய விமான நிலையம், 100 இற்கும் மேற்பட்ட நட்சத்திர ஹோட்டல்கள், புதிய நெடுஞ்சாலைகள், புதிய மெட்ரோ (Metro) ரயில் போக்குவரத்து சேவை என அனைத்தினையும் கட்டார் உருவாக்கியிருக்கின்றது.

கட்டாரில் உலகக் கிண்ணத் தொடரினை பார்வையிட சுமார் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட கால்பந்து இரசிகர்கள் படையெடுப்பார்கள் எனக் கூறப்பட்டிருப்பதோடு, இந்த கால்பந்து உலகக் கிண்ணத் தொடரினை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க அந்த நாடு சுமார் 220 பில்லியனுக்கு மேலதிகமான அமெரிக்க டொலர்களை செலவிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது 2022ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணம், கால்பந்து உலகக் கிண்ண வரலாற்றில் அதிக பொருட் செலவுடன் நடாத்தப்பட்ட உலகக் கிண்ணத் தொடராக மாறுகின்றது.

ஆனால் ஒரு பக்கத்தில் உலகக் கிண்ணத் தொடரினை நடாத்தும் கட்டார் மீது விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. அதாவது அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களை (Domestic Workers) அந்த நாடு நடாத்துகின்ற விதம், அந்த நாடு சில விடயங்களில் கடைப்பிடிக்கும் கொள்கைகள் என்பவை குறித்து இந்த விமர்சனங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த விமர்சனங்கள் உண்மைக்கு புறம்பானவை என மறுக்கும் கட்டார் இன்று உலகம் திரும்பி பார்க்க கூடிய ஒரு உலகக் கிண்ணத் தொடரினை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றது என்பதே உண்மை.

நாம் இந்த கட்டுரையில் ஒரு மொத்த மக்கள் தொகை வெறும் 3 மில்லியன் மாத்திரமே கொண்ட ஒரு நாட்டினால் எவ்வாறு உலகக் கிண்ணத் தொடர் ஒன்றினை வெற்றிகரமாக நடாத்த முடிகின்றது என்பதனை பார்ப்போம்.

கட்டார் பாலைவன வளைகுடா நாடுகளில் ஒன்று, சவூதி அரேபியாவினை ஒரு பக்க எல்லையாக கொண்டிருக்கும் அந்த நாட்டின் ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்கு வெறும் 2 மணித்தியாலயங்களில் பயணம் செய்ய முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது. முன்னர் குறிப்பிட்டது போன்று கட்டாரில் 3 மில்லியன் மக்கள் தொகை இருந்த போதும் சுமார் 4 இலட்சம் பேரே கட்டாரினை பூர்வீகமாக கொண்டவர்களாக இருப்பதோடு, ஏனையோர் அந்த நாட்டிற்கு பணியாளர்களாக உலகெங்கிலும் இருக்கும் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்களாக காணப்படுகின்றனர்.

கட்டாரினை சுமார் 100 வருடங்கள் பின்னோக்கி பார்க்கும் சந்தர்ப்பத்தில் அது இப்போது போன்று வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாக இருந்தது அல்ல. அப்போது முத்துக் குளித்தல் (Pearl Diving) மூலம் வருமானம் பெற்ற கட்டார் அங்கே 1930ஆம் ஆண்டு எண்ணெய் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே வளர்ச்சியடைய தொடங்கியது.

தொடர்ந்து 1970ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இயற்கை வாயுவும் (Natural Gas) அங்கே இருப்பது கண்டறியப்பட்டிருந்தது. தற்போது உலகில் இயற்கை வாயுவினை அதிக அளவில் கையிருப்பில் வைத்திருக்கும் நாடுகளில் மூன்றாம் இடத்தில் கட்டார் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் அந்த நாட்டினை பிற்காலத்தில் செல்வம் பொழிக்கும் நாடுகளில் ஒன்றாக மாற்றியிருக்கின்றன.

ஆனால், செல்வம் கொழித்தாலும் பல்நாட்டு விளையாட்டுத் தொடர் ஒன்றினை இலகுவாக அனைத்து நாடுகளாலும் நடாத்தி விட முடியாது. அதற்கான சரியான வழிகாட்டல்களும், திட்டமிடல்களும் கிடைத்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். இந்த கால்பந்து உலகக் கிண்ணத் தொடரில் அது சாத்தியமாக மாறியிருக்கின்றது என்றே கூற முடியும்.

உதாரணமாக, இறுதியாக ரஷ்யாவில் நடைபெற்ற கால்பந்து உலகக் கிண்ணத் தொடரினை பார்க்கலாம். 2018ஆம் ஆண்டுக்கான கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் முதல் போட்டி மொஸ்கோ நகரிலும், இரண்டாவது, மூன்றாவது போட்டிகள் செயின்ட் பீடர்ஸ்பெக் மற்றும் சொச்சி ஆகிய நகரங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இதில் செயின்ட் பீடர்ஸ்பெக் மற்றும் மொஸ்கோ ஆகிய நகரங்களுக்கு இடையிலான நிலப்பரப்பு தூரம் சுமார் 705 கிலோ மீட்டர்களாகும். அதேநேரம், மொஸ்கோ மற்றும் சொச்சி ஆகிய நகரங்கள் இடையிலான தூரம் சுமார் 1620 கிலோ மீட்டர்களாகும்.

இதில் மொஸ்கோ – சோச்சியினை விடுவோம். குறுகிய துாரம் உடைய மொஸ்கோ-செயின்ட் பீடர்ஸ்பேக் நகரங்களை எடுக்கலாம். இரு நகரங்களினையும் அதிவேக புகையிரத போக்குவரத்து மூலம் கடப்பதற்கு சுமார் மூன்றரை மணித்தியாலயங்கள் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விமானத்தில் சென்றாலும் சுமார் 2 மணித்தியாலயங்கள் பிரயாண நேரமாக தேவைப்படும். ஒரு கால்பந்து இரசிகர் மொஸ்கோ மற்றும் செயின்ட் பீடர்ஸ்பெக் என இரண்டு நகரங்களிலும் நடைபெறும் போட்டிகளினை நேரடியாக பார்க்க விரும்பும் போது அது அவருக்கு சிரமமாக அமையலாம்.

ஆனால், கட்டாரில் உலகக் கிண்ணப் போட்டிகளினை பார்க்க வரும் இரசிகருக்கு அவ்வாறான சிரமம் ஒன்று ஏற்படாது. கால்பந்து உலகக் கிண்ணம் கட்டாரில் ஐந்து நகரங்களில் உள்ள எட்டு மைதானங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கே ஒரு மணித்தியாலயத்திற்குள் ஒரு இரசிகருக்கு அனைத்து மைதானங்களினையும் சாதாரண போக்குவரத்தின் மூலம் அடைய முடியும். அதாவது ஒரு நாளைக்கு நான்கு போட்டிகள் நடைபெற்றால், நான்கு போட்டிகளையும் ஒரு கால்பந்து இரசிகரால் நேரடியாக கண்டுகளிக்க கூடிய வசதிகள் கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.

அதாவது ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளினை நடாத்தும் போது அங்கே அதிக பார்வையாளர்கள் கூட்டம் வரும், அனைவருக்கும் போக்குவரத்து வசதிகள் செய்ய வேண்டி ஏற்படும், அத்தோடு இரசிகர்கள் தங்குவதற்கான ஹோட்டல்களின் தேவை என அனைத்தினையும் மிக வெற்றிகரமாக கட்டாரின் கால்பந்து உலகக் கிண்ண ஏற்பாட்டுக் குழு முகாமைத்துவம் செய்திருக்கின்றது.

அத்துடன் கால்பந்து இரசிகர்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளும் கட்டாரில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது இரசிகர்களின் பொழுது போக்கிற்காக இரண்டு புதிய தீவுகளையே உருவாக்கியிருக்கும் கட்டார் அங்கே மிகவும் சிறந்த உணவகங்கள் (Restaurants), நீர் பொழுதுபோக்கு பூங்காக்கள் (Water Parks) என்பவற்றினை அமைத்திருப்பதோடு, பிரபல்ய கலைஞர்கள் பங்குபெறும் இசை நிகழ்வுகளையும் (Aracadia Music Festival) ஒழுங்கு செய்திருக்கின்றது. அத்துடன் கால்பந்து இரசிகர்களுக்கான பிரத்தியேக வலயங்களும் (Fan Zone) காணப்படுகின்றன.

விமர்சனங்கள் இருந்த போதும் அவை அனைத்தினையும் தாண்டி ஒரு வெற்றிகரமான உலகக் கிண்ணத் தொடரினை கட்டார் இன்று உலகிற்கு நடாத்திக் காட்டி வருகின்றது. கால்பந்து இரசிகர்களும் விரும்பும் உலகக் கிண்ணத் தொடராக கட்டாரின் இந்த உலகக் கிண்ணத் தொடர் ஏற்கனவே மாறிவிட்டது. இதற்கு இந்த கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் பிரமாண்ட ஆரம்ப நிகழ்வு, தொடரின் ஆரம்ப போட்டிகளில் சவூதி அரேபியா, ஜப்பான் போன்ற நாடுகள் உலகக் கிண்ண சம்பியன்களுக்கு அதிர்ச்சியளித்தது, கட்டார் நாட்டு மக்களின் உன்னத விருந்தோம்பல் என்பன காரணம் என்பதில் மறுப்பு கிடையாது. அத்துடன் ஆரம்ப போட்டி முடிவுகளினை கருத்திற் கொள்ளும் போது இந்த உலகக் கிண்ணத் தொடரின் நொக்அவுட் சுற்றுப் போட்டிகள் மேலும் சுவாரசியம் கொண்டதாக அமையும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இனி இரசிகர்களுக்கான கேள்வி, இந்த கால்பந்து உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த இறுதிப் போட்டிக்கு எந்த அணிகள் தகுதி பெறும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்? கீழே Comment செய்க.

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<