ஆசிய, பொதுநலவாய விளையாட்டு விழாக்களில் பங்கேற்கும் மெய்வல்லுனர் குழாம் அறிவிப்பு

151
AASL selects team for Commonwealt

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 19 ஆவது ஆசிய விளையாட்டு விழா மற்றும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா ஆகிய போட்டித் தொடர்களுக்காக பெயரிடப்பட்டுள்ள 22 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாம் தேசிய மெய்வல்லுனர் தேர்வுக் குழுவின் அனுமதிக்காக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு மற்றும் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கு ஆகியவற்றில் நடைபெற்ற மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் மற்றும் இந்த மாத முற்பகுதியில் தியகமவில் நடைபெற்ற 100 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் ஆகியவற்றில் வீரர்கள் வெளிப்படுத்திய அதிசிறந்த ஆற்றல்கள் மற்றும் அடைவு மட்டங்களின் அடிப்படையில் இரண்டு பிரதான சர்வதேச விளையாட்டு விழாவுக்கான வீர, வீராங்கனைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கு 21 வீர, வீராங்கனைகளும், சீனாவின் ஹங்சூவில் செப்டெம்பர் 10 ஆம் திகதியிலிருந்து 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கு 8 வீர, வீராங்கனைகளும் பெயரிடப்பட்டுள்ளனர்.

சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), காலிங்க குமாரகே (400 மீட்டர், 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்), யுபுன் அபேகோன் (100 மீட்டர்), உஷான் திவங்க (உயரம் பாய்தல்), நிலானி ரட்நாயக்க (3,000 மீட்டர் தடைதாண்டல் ஓட்டம்), சாரங்கி சில்வா (நீளம் பாய்தல்), கயந்திகா அபேரட்ன (800 மீட்டர், 1,500 மீட்டர்) ஆகிய 7 பேரும் பொதுநலவாய விளையாட்டு விழா, ஆசிய விளையாட்டு விழா ஆகிய இரண்டு குழாம்களிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இவர்களைவிட பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இலங்கை குழாத்தில் ரொஷான் ரணதுங்க (110 மீட்டர் சட்டவேலி ஓட்டம்), சமல் குமாரசிறி (முப்பாய்ச்சல்), தனுஷ்க சந்தருவன் (நீளம் பாய்தல்), அருண தர்ஷன (4×400 மீட்டர் அஞ்சலோட்டம் மற்றும் 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்), இசுறு லக்ஷான் (4×400 மீட்டர் அஞ்சலோட்டம்), பபசர நிக்கு (4×400 மீட்டர் அஞ்சலோட்டம்), வீ. தேஷான் (4×400 மீட்டர் அஞ்சலோட்டம்), தருஷி கருணாரட்ன (4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்), நதீஷா ராமநாயக்க (4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்டம்), அமாஷா டி சில்வா (100 மீட்டர், 4×100 மீட்டர் அஞ்சலோட்டம்), ருமேஷிகா ரத்நாயக்க (4×100 மீட்டர் அஞ்சலோட்டம்), ஷெலிண்டா ஜென்சென் (4×100 மீட்டர் அஞ்சலோட்டம்), மேதானி ஜயமான்ன (4×100 மீட்டர் அஞ்சலோட்டம்), லக்ஷிகா சுகந்தி (4×100 மீட்டர் அஞ்சலோட்டம்)

இதேவேளை, அமெரிக்காவில் வசித்துவரும் இலங்கை மரதன் ஓட்ட வீராங்கனையான ஹிருணி விஜேரட்ன பொதுநலவாய விளையாட்டில் மாத்திரம் போட்டியிடவுள்ளார்.

இதனிடையே, ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல் முறையாக கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி களமிறங்கவுள்ளதுடன், ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்திலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பெண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்டத்திலும் இலங்கை சார்பில் அணிகள் களமிறங்கவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதில் இறுதியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டத்தில் இலங்கை அணி நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<