14 நாட்கள் தனிமைப்படுத்தலை எதிர்க்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை

794

கொவிட்-19 நெறிமுறைகள் காரணமாக இலங்கை மற்றும் பங்களாதேஷ்  அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் நடைபெறுவதில் தொடர்ந்தும் சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. 

நேற்றைய தினம் (14) பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு கிடைக்கப்பெற்ற கடிதத்தின் படி, இலங்கை கிரிக்கெட் சபை தமது வீரர்களை  7 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்க ஒப்புக்கொண்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிஷாமுதீன் சௌத்ரி தெரிவித்திருந்தார். 

>> ரசிகர்களுடன் ஆரம்பமாகும் முதல் கிரிக்கெட் தொடர்

தற்போது, இலங்கை கிரிக்கெட் சபை தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் இருக்க வேண்டும் என அறிவித்துள்ள நிலையில், இவ்வாறான நீண்ட காலத்துக்கு வீரர்களால் ஹோட்டல் அறைக்குள் இருக்க முடியாது என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஷ்முல் ஹசன் தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் இந்த முடிவை அறிந்துக்கொண்ட இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, நாட்டின் கொவிட் அதிரடிப்படையுடன் கலந்துரையாடி, இலங்கை கிரிக்கெட் சபை இதுதொடர்பில் மறுபரிசீலனை செய்யுமாறு தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை திடீர் சந்திப்பொன்றை மேற்கொண்டு கலந்துரையாடிய நிலையில், தற்போது 7 நாட்கள் தனிமைப்படுத்தலினை அடிப்படையாகக்கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும், 7 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடாத வீரர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலானது, தயார்படுத்தலை கடினப்படுத்தும் என நஷ்முல் ஹசன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

“இதுபோன்ற நெறிமுறைகளுக்கு கீழ் டெஸ்ட் சம்பியன்ஷிப் விளையாட முடியாது. நேற்றைய தினம் கிடைத்த இலங்கை கிரிக்கெட் சபையின் கடிதத்தில் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது கலந்துரையாடப்பட்டது. இப்போது  நெறிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதுடன், கொவிட்-19 காலப்பகுதியில் ஏனைய நாடுகள் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு மேற்கொண்டிருக்கும் திட்டங்களை, இலங்கை கிரிக்கெட் சபை நெருங்கவும் இல்லை” 

அதுமாத்திரமின்றி, இலங்கை கிரிக்கெட் சபையானது பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கான சலுகைகளை குறைத்துள்ளது மாத்திரமின்றி, வலைப் பந்துவீச்சாளர்களையும் வழங்குவதற்கு மறுத்துள்ளதாக நஷ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

>> Video – இலங்கை டெஸ்ட் அணியில் புதுமுக வீரர்கள்..! |Sports RoundUp – Epi 131

“எமது வீரர்களை உணவு உட்பட எந்த தேவைகளுக்காகவும் ஹோட்டல் அறையிலிருந்து வெளிச்செல்ல கூடாது என இலங்கை கிரிக்கெட் சபை எமக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேநேரம், எமக்கு தம்புள்ளை கிரிக்கெட் மைதானம் ஆரம்ப பயிற்சிகளுக்காக வழங்கப்படவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையை பொருத்தவரை, உள்ளூர் போட்டிகள் நடைபெறத் தொடங்கியுள்ளன. இவ்வாறான நிலையில், எமக்கு தரப்பட்டுள்ள நெறிமுறைகள் கடினமாகியுள்ளதுடன், அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அதேநேரம், இலங்கையில் உள்ளூர் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாம் மிகப்பெரிய குழாத்துடன் இலங்கை வருகிறோம் எனவும், எமது பயிற்சிக்கான வசதிகள் செய்துக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தோம். எமது வீரர்கள் 7 மாதங்களாக பயிற்சிகளில் ஈடுபடாமல் இருக்கும் நிலையில், பயிற்சிக்கான அனுமதியை அவர்கள் வழங்கவில்லை. அதேநேரம், வலைப் பந்துவீச்சாளர்களையும் எமக்கு வழங்க மறுத்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், நாம் டெஸ்ட் சம்பியன்ஷிப்பை எவ்வாறு எதிர்கொள்வது?” என நஷ்முல் ஹசன் கேள்வியெழுப்பியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இம்மாதம் 27ம் திகதி இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருப்பதுடன், ஒக்டோபர் 23ம் திகதி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் என அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<