பாராலிம்பிக்கில் சாதித்த இலங்கை வீரர்கள் கௌரவிப்பு

2020 Tokyo Paralympics

170

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமையை தேடிக்கொடுத்த வீரர்களை கௌரவிக்கும் விசேட வைபவம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்படி, இம்முறை டோக்கியே பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுத்த தினேஷ் பிரியன்த ஹேரத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் 5 கோடி ரூபாவும், இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒரு கோடி ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் தனி ஒருவருக்கு வழங்கப்பட்ட அதிகூடிய பணப்பரிசுத் தொகையாகும்.

அதேபோல, டோக்கியோ பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடித்துவக்குவுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் 2 கோடி ரூபாவும் இலங்கை கிரிக்கெட் சபையினால் 10 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

இலங்கை பாரா வெற்றியாளர்களுக்கு பரிசாக மோட்டார் கார்

அதுமாத்திரமின்றி, இவர்கள் இருவரினதும் பயிற்சியாளரான பிரதீப் நிஷான்தவுக்கு ஒரு கோடியே 77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

இவர்கள் உட்பட டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்குகொண்டு திறமைகளை வெளிப்படுத்தியிருந்த மேலும் 5 பேருக்கு 10 கோடியே 66 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா ஒட்டுமொத்த பணப்பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 5ஆவது இடத்தைப் பெற்ற பாலித்த பண்டாரவுக்கு 25 இலட்சம் ரூபா பணப்பரிசு கிடைத்தது.

படகோட்டப் போட்டியில் 12ஆவது இடத்தைப் பெற்ற பிரியமால் ஜயகொடி, ஈட்டி எறிதல் வீரர் சம்பத் ஹெட்டியாராச்சி, குறுந்தூர ஓட்டப் போட்டியில் 9ஆவது இடத்தைப் பெற்ற சமன் சுபசிங்க, குறுந்தூர ஓட்ட வீராங்கனையும், நீளம் பாய்தல் வீராங்கனையுமான குமுது பிரியன்கா ஆகியோருக்கு தலா 5 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

Photos: Felicitation for the Paralympians – Tokyo Paralympics 2020

அத்துடன், குறித்த வீரர்களது பயிற்சியாளர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதன்படி, பாலித்த பண்டாரவின் பயிற்சியாளர் யூ.பி.டி. பெரேராவுக்கு 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் சமன் சுபசிங்கவின் பயிற்சியாளர் சஜித் ஜயலால், குமுது பிரியன்காவின் பயிற்சியாளர் ஏ.ஆர். ரத்நாயக்க மற்றும் பிரியமால் ஜயகொடி ஆகியோரின் பயிற்சியாளர் லசன்த்த வெலிக்கல ஆகியோருக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்பட்டது.

இந்த வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அநுராத விஜேகோன், கிராமிய பாடசாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இரஜாங்க அமைச்சின் செயலாளர் ரவீந்திர சமரவிக்ரம, விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, தேசிய விளையாட்டுப் பேரவையின் உறுப்பினர் சன்ஜீவ விக்ரமநாயக்க, தேசிய பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் லுதினன் கேர்னல் ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<