சகீப் அல் ஹசனின் சகலதுறை ஆட்டத்தால் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி.

169

சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது  இருபதுக்கு 20 சர்வதேச போட்டியில் பங்களாதேஷ் அணி 12 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 தொடரில் முதலாவது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இன்று (5) ப்லோரிடாவின் லோடர்ஹில் அரங்கில்  நடைபெற்றது.

அன்ரோ ரசலின் சகலதுறை பிரகாசிப்பால் மேற்கிந்திய தீவுகளுக்கு இலகு வெற்றி

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று (01) செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரின் முதல் போட்டியில், கெஸ்ரிக்…

இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் கார்லோஸ் பரத்வேட் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.  அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழந்து 171 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுக்கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இருபது ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழந்து 159 ஓட்டங்களை பெற்று 12 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

பங்களாதேஷ் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் தமீம் இக்பால் ஆகியோர் களமிறங்கினர். எனினும் இதில் லிட்டன் தாஸ் சிறந்த ஆரம்பத்தை கொடுக்க தவறி ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறியதோடு தொடர்ந்து முஷ்பிகுர் ரஹீம் மற்றும் சௌம்யா சர்கார் ஆகியோரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

எனினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பால் மற்றும் அணித்தலைவர் சகீப் அல் ஹசன் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக 90 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்ததினர். இறுதியில் பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தல் பங்களாதேஷ் அணி சார்பாக அதிக பட்சமாக தமீம் இக்பால் 44 பந்துகளில் 74 ஓட்டங்களையும் சகீப் அல் ஹசன் 38 பந்துகளில் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அஷ்லி நேர்ஸ் மற்றும் கீமோ போல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பங்களாதேஷ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 172 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக அன்ட்ரூ பிளட்சர் மற்றும் எவின் லுயிஸ் ஆகியோர் களமிறங்கினர். லுயிஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்க தொடர்ந்து களமிறங்கிய அன்ட்ரூ ரசல் மற்றும் மாலன் சமுவேல்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாட அதே வேகத்தில் ஆட்டமிழந்தனர். 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து இக்கட்டான நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக அன்ட்ரூ பிளட்சர் மற்றும் ரோமன் பவல் ஆகியோர்  மேலும் 58 ஓட்டங்களை சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு வழிவகுத்தனர். எனினும் மேற்கிந்திய தீவுகளின் அனைத்து முயற்சிகளும் பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களால் முறியடிக்கப்பட்டது. இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.

>>அவமானங்கள் பல தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்<<

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக அன்ட்ரூ பிளட்சர் மற்றும் ரோமன் பவல் ஆகியோர் அதிக பட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக நஸ்முல் இஸ்லாம் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியதோடு சகீப் அல் ஹசன் இரண்டு விக்கெட்டுகளையும் சாய்த்திருந்தார்.

இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக தமீம் இக்பால் தெரிவானார். தற்போது 1 – 1 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ள இருபதுக்கு 20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை (6) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் அணி – 171/5 (20) – தமீம் இக்பால் 74, சகீப் அல் ஹசன் 60 , அஷ்லி நேர்ஸ் 25/2, கீமோ போல் 39/2

மேற்கத்திய தீவுகள் அணி – 159/9 (20) – அன்ட்ரூ பிளட்சர் 43,  ரோமன் பவல் 43, நஸ்முல் இஸ்லாம் 28/3, முஸ்தபிசுர் ரஹ்மான் 50/3, சகீப் அல் ஹசன் 19/2

போட்டி முடிவு பங்களாதேஷ் அணி 12 ஓட்டங்களால் வெற்றி.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<