மெண்டிஸ் நீக்கப்பட்டதை நியாயப்படுத்தும் லெப்ரோய்

1092

இம்மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து முன்வரிசை துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் நீக்கப்பட்டதை இலங்கை தேர்வுக் குழுத் தலைவர் கிரேம் லெப்ரோய் நியாயப்படுத்தியுள்ளார்.

நாட்டின் நம்பிக்கை தரும் எதிர்பார்ப்பாக உள்ள 22 வயது குசல் மெண்டிஸ் நீக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் அனைவரதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்திலும் அவர் இதேபோன்று போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியபோது அப்போது தலைமை பயிற்சியாளராக இருந்த கிரஹாம் போர்ட் அவரை அணியில் இருந்து வெளியேற்றாமல் தக்கவைத்துக் கொள்ள ஆதரவாக இருந்தார். எவ்வாறாயினும் இளம் துடுப்பாட்ட வீரர் நீக்கப்படுவதற்கு தூண்டிய காரணிகள் பற்றி லெப்ரோய் குறிப்பிட்டுள்ளார்.

“அவரை பாதாளத்துக்குத் தள்ளவோ அல்லது இந்தியாவுக்கு அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர வைக்கவோ எமக்கு விருப்பம் இல்லை. உண்மையில் அவரை சில உள்நாட்டு போட்டிகளில் விளையாடச் செய்து, தனது பாணியில் ஆடி மீண்டும் மன உறுதியை பெறச் செய்யவே நாம் முயன்று வருகிறோம்” என்று லெப்ரோய் Cricbuzz இணையத்தளத்திற்கு திங்கட்கிழமை (06) குறிப்பிட்டார்.

“அவர் ஒரு நம்பிக்கை கொண்ட வீரர். அவரைப் பொறுத்தவரை நம்பிக்கை தான் அனைத்துமே. அவரை மேலும் இன்னிங்சுகளில் ஆடவைத்து மென்மேலும் குறைந்த ஓட்டங்கள் பெற்று அதன் பின் அவர் நீக்கப்பட்டு அவரது நம்பிக்கையை மேலும் சிதறிடிக்கும் நிலையை உருவாக்க நாம் விரும்பவில்லை. அவருக்கு தன்வசம் போதுமான வயது இருக்கும்போது தம்மை கிரிக்கெட்டில் சிறந்ததொரு வீரராக வருவதற்கு அவரை தொடர்ந்து பயணிக்க செய்யவே நாம் விரும்புகிறோம். அவர் மேலும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றும் லெப்ரோய் குறிப்பிட்டார்.

மெண்டிஸ் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு மஹேல ஆவேசம்

மெண்டிஸ் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டமைக்கு மஹேல ஆவேசம்

இந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான   ….

 

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கௌஷால் சில்வா அணிக்கு தேவையான அனைத்து தகமைகளும் கொண்டவருக்கான உதாரணமாக இருப்பதாக பயிற்சியாளர் நிக் போதாஸ் குறிப்பிட்டிருக்கும் நிலையில் அவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்ற நிலையில், அந்த தொடரில் நான்கு இன்னிங்சுகளிலும் சில்வாவின் அதிகூடிய ஓட்டங்கள் 27 மாத்திரமாகும். எனினும் இந்தியாவுக்கு எதிரான இலங்கை அணியின் திட்டத்தில் சில்வா இருப்பதை அனைவரும் நம்பி இருந்ததாக, போதாஸ் அவருக்கு ஆதரவாக குறிப்பிட்டுள்ளார்.

“நிக்கின் அதே கருத்துடன் நாமும் ஒத்து நிற்கிறோம். ஆனால் கடைசியில் ஓட்டங்களை பெற்றிருக்க வேண்டும். ஆளுமை, செயற்பாடுகள், அணியின் ஆட்ட உணர்வு அனைத்துமே அவரிடம் உள்ளது, ஆனால் துடுப்பாட்டத்திலும் அவரிடம் நாம் மேலும் எதிர்பார்க்கிறோம்” என்று லெப்ரோய் விளக்கினார்.

சில்வா இல்லாத நிலையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இடம் காலியாக உள்ளது. மெண்டிஸின் 19 வயதுக்கு உட்பட்ட அணியின் சக வீரர் சதீர சமரவிக்ரம அந்த இடத்தை நிரப்ப பொருத்தமானவர் என்று லெப்ரோய் குறிப்பிட்டார். “சதீர எதிர்காலத்தில் நம்பிக்கை தரும் வீரராக உள்ளார். அவரை அணிக்குள் கொண்டுவர இதுவே சரியான நேரமாகும். தற்போது அவர் உலகின் முதல் நிலை அணிக்கு எதிரான சவாலுக்கு முகங்கொடுக்கும் நேரமாகும். மோசமான பந்துகளுக்கு அடித்தாடி பந்துவீச்சாளர்களுக்கு அவர் அழுத்தம் கொடுப்பார். அவரது ஆட்டம் (எம்மை) அதிகம் கவர்ந்துள்ளது” என்று லெப்ரோய் சுட்டிக்காட்டினார்.

“மூன்றாவது துடுப்பாட்ட வீரர் வரிசைக்கு லஹிரு திரிமான்ன மற்றும் தனஞ்சய டி சில்வா இடையே சமமான வாய்ப்பு உள்ளது. கரீபியனில் இலங்கை A அணிக்காக தனஞ்சய ஓட்டங்கள் குவித்தது பற்றி நாம் அதிகம் மகிழ்ச்சி அடைகிறோம். எதிர்காலத்தில் அவரை ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவோ அல்லது மூன்றாவது வரிசை வீரராகவோ அனுப்ப கருதுகிறோம். அவரை மத்திய வரிசையில் அனுப்ப விரும்பவில்லை” என்று லெப்ரோய் கூறினார்.

இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்

இந்தியாவுக்கெதிரான இலங்கை டெஸ்ட் குழாம் இதுதான்

இந்திய அணிக்கு எதிராக நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கொல்கத்தாவில் ஆரம்பமாகவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட திறமையான…

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது கையில் காயத்திற்கு உள்ளான மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்ன காயத்தில் இருந்து முழுமையாக மீண்டிருக்கும் நிலையில் எதிர்வரும் தொடரில் அவதானத்திற்கு உள்ளாகியுள்ளார். “அசேல உடற்தகுதியுடன் உள்ளார். அது மருத்துவ அடிப்படையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் அது தொடக்கம் அவர் மூன்றரை மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. உலகின் சிறந்த அணியுடன் ஆடும் போதும் ஆட்ட திறனில் உச்சத்தில் இருக்கும் வீரர்களே தேவையாக உள்ளனர். அனைத்தும் சரியாக இடம்பெற்றால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு திரும்புவார்” என்று விளக்கினார் லெப்ரோய்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமாக பந்து வீசிய நுவன் பிரதீப் தொடர்பிலும் தேர்வாளர்கள் அதிக அவதானம் காட்டியுள்ளனர். “கடந்த 18 மாதங்களில் நுவன் விளையாடிய போட்டிகள் பற்றி நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம். அவருக்கு அதிக சுமையை வழங்க முடியாது என்று நாம் கருதுகிறோம். அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் 100 வீதம் பங்களிப்பு செய்கிறார். அவரது உடல் நிலை ஒரு டெஸ்ட் போட்டியில் ஆட முடியுமாக இருப்பதோடு, இரண்டாவது டெஸ்டில் விளையாட அவர் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டும். எனவே, அவருக்கு அழுத்தம் கொடுக்காமல் இருக்க நாம் எண்ணினோம். அதேபோன்று ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடரிலும் அவர் மீது நாம் அவதானம் செலுத்தவில்லை. அந்த காலங்களில் ஒருநாள் போட்டிகளில் மாத்திரம் அவர் கருத்தில் கொள்ளப்படுவார்” என்றார் லெப்ரோய்.