NSL ஒருநாள் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த ஜப்னா, தம்புள்ள

National Super League 2023

188

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐந்து அணிகள் மோதும் தேசிய சுபர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று (11) ஆரம்பமாகியது.

இதில் காலி அணியை எதிர்கொண்ட நடப்புச் சம்பியன் ஜப்னா அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற, கொழும்பு அணியை எதிர்கொண்ட தம்புள்ள அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

போட்டித்தொடரின் ஆரம்ப நாளில் ஜப்னா அணிக்காக சதீர சமரவிக்ரம, ஜனித் லியனகே, காலி அணிக்காக பசிந்து சூரியபண்டார, பெதும் குமார, மற்றும் தம்புள்ள அணிக்காக அஷான் பிரியன்ஜன் ஆகியோர் அரைச் சதங்களை பதிவுசெய்தனர்.

அதேபோல, ஜப்னா அணிக்கெதிரான போட்டியில் காலி அணியின் லஹிரு மதுசங்க 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தார்.

ஜப்னா எதிர் காலி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் சதீர சமரவிக்ரம தலைமையிலான ஜப்னா அணியும், துனித் வெல்லாலகே தலைமையிலான காலி அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஜப்னா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா அணி சார்பாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் சதீர சமரவிக்ரம தொடரின் முதலாவது அரைச் சதத்தை பதிவுசெய்ய, ஜனித் லியனகே மற்றும் ரவிந்து பெர்னாண்டோ ஆகிய இருவரினதும் துடுப்பாட்ட பங்களிப்புடன் ஜப்னா அணி 48.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 233 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஜனித் லியனகே 95 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக சதீர சமரவிக்ரம அரைச் சதம் கடந்து 53 ஓட்டங்களையும், ரவிந்து பெர்னாண்டோ 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் லஹிரு மதுசங்க 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மூன்றாம் நாளில் முழு ஆதிக்கம் பெற்றுக் கொண்ட நியூசிலாந்து அணி

பின்னர் களமிறங்கிய காலியின் முன்வரிசை வீரர்கள் மூவரும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியிருந்தனர். எனினும், மத்திய வரிசையில் களமிறங்கிய பசிந்து சூரிய பண்டார (51) மற்றும் பெதும் குமார (60) ஆகிய இருவரும் மாத்திரம் அரைச் சதம் கடந்து நம்பிக்கை கொடுத்திருந்த நிலையில், ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்க தவறினர்.

இறுதியில் காலி அணி 32.3 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 55 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

ஜப்னா அணியின் பந்துவீச்சில் பிரமோத் மதுசான் 3 விக்கெட்டுகளையும், ரவிந்து பெர்னாண்டோ மற்றும் லஹிரு மதுசங்க ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

தம்புள்ள எதிர் கொழும்பு

தேசிய சுபர் லீக் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் தசுன் ஷானக தலைமையிலான கொழும்பு அணியும், மினோத் பானுக தலைமையிலான தம்புள்ள அணியும் பலப்பரீட்சை நடத்தின.

தம்புள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை காட்டிய நிலையில், 113 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், மத்திய வரிசையில் வந்து நிதானமாக ஓட்டங்களைக் குவித்த அணித் தலைவர் தசுன் ஷானகவும், அஷேன் பண்டாரவும் தலா 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இதனால் கொழும்பு அணி 40.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. தம்புள்ள அணியின் பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன் 3 விக்கெட்டுகளையும், துஷான் ஹேமன்த மற்றும் லஹிரு சமரகோன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

116வது வடக்கின் பெரும் சமரின் சம்பியனாக முடிசூடியது யாழ். மத்தி!

பின்னர் இலகுவான வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணியின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வெளியேறினாலும், அஷான் பிரியன்ஜன் மற்றும் துஷான் ஹேமன்தவின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் 43 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அந்த அணிக்காக அஷான் பிரியன்ஜன் 71 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 50 ஓட்டங்களையும், துஷான் ஹேமன்த 46 பந்துகளில் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். கொழும்பு அணியின் பந்துவீச்சில் ஹசங்க ரத்நாயக 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

எனவே, இன்று ஆரம்பித்த தேசிய சுபர் லீக் ஒருநாள் தொடரின் முதல் நாள் போட்டிகளில் ஜப்னா மற்றும் தம்புள்ள அணிகள் வெற்றிகளைப் பதிவுசெய்து, தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளன.

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளில் ஜப்னா அணியை கண்டி அணி எதிர்கொள்ளவுள்ளதுடன், காலி அணி தம்புள்ள அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<