அன்ரோ ரசலின் சகலதுறை பிரகாசிப்பால் மேற்கிந்திய தீவுகளுக்கு இலகு வெற்றி

462
Photo -Toisports (twitter)

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்று (01) செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரின் முதல் போட்டியில், கெஸ்ரிக் வில்லியம்ஸ் மற்றும் அன்ரோ ரசல் ஆகியோரின் சிறப்பான ஆட்டங்களின் உதவியுடன் மேற்கிந்திய தீவுகள் அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 11 பந்துகள் மீதமிருக்க, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 

இரண்டு அணிகளும் மோதிய டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 2-0 என அபார வெற்றி பெற்றிருந்ததுடன், தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரை பங்களாதேஷ் அணி 2-1 என கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தொடரின் இறுதியாக நடைபெறவுள்ள T-20 தொடரில் வெற்றிபெறும் நோக்குடன் இரண்டு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்தின.

இதன்படி ஆரம்பமாகிய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் கார்லோஸ் பிராத்வைட், முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பங்களாதேஷ் அணிக்கு வழங்கினார். துடுப்பெடுத்தாட களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு எதிராக முதல் பந்து ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அஷ்லி நேர்ஷ் வீசினார். போட்டியின் ஆரம்பமே பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்துக்கு சவால் விடுக்கக் கூடியதாக அமைந்தது.

போட்டியின் முதல் பந்தில் ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசியிருந்த தமிம் இக்பால், “ஸ்டம்ப்பிங்“ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து முதல் பந்து ஓவரின் நான்காவது பந்தில் சௌமிய சர்கார் போல்ட் செய்யப்பட்டு வெளியேற, பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் அடைந்தது. முக்கியமாக இரண்டு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்தமை அணிக்கு ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இரண்டு விக்கெட்டுகள் சரிக்கப்பட்ட போதும், அணித் தலைவர் சகிப் அல் ஹசனுடன் இணைந்த லிடன் டாஸ், பந்துக்கு ஒரு ஓட்டம் என ஓட்ட எண்ணிக்கையை நகர்த்தினார். எனினும், ஆறாவது ஓவரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்துகளில் லிடன் டாஸ் மற்றும் சகிப் அல் ஹசன் முறையே ஆட்டமிழந்தனர். லிடன் டாஸ் 21 பந்துகளுக்கு 24 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, மறுபக்கம் வேகமாக ஓட்டங்களை பெற முற்பட்ட சகிப் அல் ஹசன் 4 பௌண்டரிகள் அடங்கலாக 10 பந்துகளுக்கு 19 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார். 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த பங்களாதேஷ் அணிக்கு ஓரளவு நம்பிக்கை அளிக்கும் வகையில் மஹ்மதுல்லா மாத்திரம் துடுப்பெடுத்தாட ஏனைய வீரர்கள் கவனக்குறைவான ஆட்டத்தால் அணிக்கு ஏமாற்றத்தை வழங்கினர்.

27 பந்துகளுக்கு முகங்கொடுத்த மஹ்மதுல்லா 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதிலும், எதிர்பார்க்கப்பட்ட முஷ்பிகுர் ரஹீம் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் ஹரிபுல் ஹக் மற்றும்  மெஹிதி ஹாசன் மிராஷ் ஆகியோர் முறையே 15 மற்றும் 11 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதிலும், பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து, 143 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், கீமோ பௌல் மற்றும் அஷ்லி நேர்ஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அன்ரோ ரசல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர், 144 என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கினை நோக்கி தங்களது துடுப்பாட்ட இன்னிங்ஸை மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பிப்பதற்கு முன்னர், போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டது. இதனால்  போட்டி சுமார் ஒரு மணித்தியாலம் தாமதமாகி ஆரம்பமாகியது. அந்தவகையில் முழு போட்டிக்கு பதிலாக டக்வர்த் லூவிஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 11 ஓவர்களுக்கு 91 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு போட்டி நடுவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கினை அடைவதற்கு 8.27 என்ற ஓட்ட வேகத்தில் துடுப்பெடுத்தாட வேண்டும் என்ற நிலையில், களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் ஓவரில் 10 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும், போட்டியில் பங்களாதேஷ் அணியின் ஆதிக்கம் இரண்டாவது ஓவரில் தென்பட்டது. தங்களது முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஷ்தபிசூர் ரஹ்மானின் பந்து வீச்சில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான எவின் லிவிஸ் மற்றும் அன்ரோ பிளெட்சர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். பிளெட்சர் 7 ஓட்டங்களுடனும், லிவிஸ் 2 ஓட்டங்களுடனும் அரங்கு திரும்பினர்.

எனினும், அடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்ட நட்சத்திரங்களான அன்ரோ ரசல் மற்றும் மார்லன் சாமுவெல்ஸ் ஆகியோர் அதிரடியை வெளிப்படுத்தி, பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களை தினறடித்தனர்.  அதிரடியாக ஆடிய மார்லன் சாமுவெல்ஸ் 13 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்த போது, ரூபல் ஹுசைனின் பந்தில் மஹ்மதுல்லாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்பின் பின்னர் ஜோடி சேர்ந்த ரசல் மற்றும் ரோவ்மன் பௌல் ஆகியோர் இணைந்து 41 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, மேற்கிந்திய தீவுகள் அணி 9.1 ஓவரில் 93 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட்ட அன்ரோ ரசல் 21 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, அவருடன் இணைந்திருந்த ரோவ்மன் பௌல் இரண்டு சிக்ஸர்களுடன் 15 ஓட்டங்களை விளாசி, போட்டியை முடிவுக்கு கொண்டுவந்தார். பங்களாதேஷ் அணியின் சார்பில் முஷ்தபிசூர் ரஹ்மான் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரூபல் ஹுசைன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்றைய வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட T-20 தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான அடுத்த T-20 போட்டி,  எதிர்வரும் 5ம் திகதி அமெரிக்காவின் லௌடர்ஹி்ல் நகரின் சென்ட்ரல் புரோவார்ட் ரீஜினல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

போட்டி சுருக்கம்

பங்களாதேஷ் மஹ்மதுல்லா 35 (21), கெஸ்ரிக் வில்லியம்ஸ் – 4/28

மேற்கிந்திய தீவுகள் அன்ரோ ரசல் 35* (21), முஷ்தபிசூர் ரஹ்மான் – 2/18

ஆட்ட நாயகன் விருது – அன்ரோ ரசல்