தேசிய விளையாட்டுப் போட்டிகள் மெய்வல்லுனரில் தனுக, நதீஷா சிறந்த வீரர்களாக தெரிவு

47th National Sports Games

101

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2023ஆம் ஆண்டுக்கான 47ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்று (26) கோலகலமாக நிறைவுக்கு வந்தது. 

இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீரருக்கான விருதை மத்திய மாகாணத்தைச் சேர்ந்த 400 மீட்டர் சட்டவேலி ஓட்ட வீரர் (50.59 செக்.) தனுக தர்ஷன தட்டிச் செல்ல, ஆண்டின் அதி சிறந்த மெய்வல்லுனர் வீராங்கனைக்கான விருதை தென் மாகாணத்தைச் சேர்ந்த 400 மீட்டர் ஓட்ட வீராங்கனை (52.80 செக்.) நதீஷா ராமநாயக்க பெற்றுக்கொண்டார் 

தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற மேல் மாகாணம், இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது. 

இதில் 115 தங்கம், 78 வெள்ளி மற்றும் 89 வெண்கலப் பதக்கங்களை வென்று மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 39 தங்கம், 45 வெள்ளி, 50 வெண்கலப் பதக்கங்களை வென்ற மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 30 தங்கம், 37 வெள்ளி மற்றும் 45 வெண்கலப் பதக்கங்களை வென்ற தென் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.  

இந்த நிலையில், 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 8 வெண்கலப் பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற வட மாகாணம் இம்முறையும் கடைசி இடத்தைப் பிடித்தது 

9 மாகாணங்களில் இருந்தும் 5806 விளையாட்டு வீரர்கள் 30 விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று 262 தங்கப் பதக்கங்கள், 262 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 360 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். 

தொடர்ந்து 3 நாட்களாக கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளின் மெய்வல்லுனர் நிகழ்ச்சியில் 5 புதிய போட்டிச் சாதனைனகள் முறியடிக்கப்பட்டன 

ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் மேல் மாகாண வீரர் ஐனிந்து லக்விஜய புதிய போட்டிச் சாதனையை நிலைநாட்டினார். அப்போட்டியை அவர் 14.16 செக்கன்களில் நிறைவுசெய்தே புதிய சாதனையை நிலைநாட்டினார். 

முன்னதாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 110 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியின் 3ஆவது தகுதிகாண் சுற்றை 14.18 செக்கன்களில் நிறைவுசெய்த ஜனிந்து, 29 ஆண்டுகள் பழைமையான தேசிய விளையாட்டுப் போட்டிகள் சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    

ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் மேல் மாகாண வீரர் சி. குமாரசிறி (16.23 மீட்டர்), பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வட மாகாண வீராங்கனை நேசராசா டக்சிதா (3.50 மீட்டர்), பெண்களுக்கான தட்டெறிதலில் வடமத்திய மாகாண வீராங்கனை வி. வினோதனி (44.59 மீட்டர்) மற்றும் பெண்களுக்கான 4தர100 அஞ்சலோட்டத்தில் தென் மாகாண அணி (3 நிமிடங்கள் 41.36 செக்.) ஆகியோர் இம்முறை தேசிய விளையாட்டுப் போட்டிகள் மெய்வல்லுனரில் புதிய போட்டிச் சாதனைகளை நிலைநாட்டியிருந்தனர்.    

இது இவ்வாறிருக்க, நேற்று நடைபெற்ற பரிசளிப்பு வைபவம் மற்றும் நிறைவு விழா வைபவத்திற்கு பிரதம அதிதியாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கலந்து கொண்டதுடன், வெற்றிக் கேடயங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார். 

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<