பாகிஸ்தானின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக யூனூஸ் கான்

156
AFP

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான யூனுஸ் கான், இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் போது பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக செயற்பாடுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) குறிப்பிட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸிற்கான பிரதியீட்டு வீரர்களை அனுமதிக்க ஐ.சி.சி ஆய்வு

பாகிஸ்தான் அணி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடவுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் இங்கிலாந்து அணியுடனேயே முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், யூனுஸ் கானை அந்நாட்டு கிரிக்கெட் சபை பாகிஸ்தானின் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் செய்திருக்கின்றது. 

தற்போது மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்படுகின்றார். இதேவேளை, வகார் யூனுஸ் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பாகிஸ்தான் அணிக்கு கடமை புரிவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கிரிக்கெட் போட்டிகள் அதிக அனுபவம் கொண்ட யூனுஸ் கானின் உள்ளடக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு இன்னும் வலுவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதேநேரம், இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்சியாளராகவும், ஊக்குவிப்பாளராகவும் (Mentor) முஸ்தாக் அஹமட் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

பாகிஸ்தான் அணிக்கு குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் முன்னணி துடுப்பாட்ட வீரராக செயற்பட்டிருக்கும் யூனுஸ் கான் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ஓட்டங்களுக்கு மேல் குவித்திருப்பதோடு, இங்கிலாந்து மண்ணிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில், இங்கிலாந்து மண்ணில் 50 இற்கு மேலாக துடுப்பாட்ட சராசரி கொண்டுள்ள யூனுஸ் கான் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு பெரிதும் உதவியாக இருப்பார் என நம்பப்படுகின்றது.  

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, தன்னை துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமனம் செய்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் யூனுஸ் கான் தனது நாட்டுக்காக மீண்டும் சேவை புரிய சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்திருந்தார். 

”எனக்கு, எனது நாட்டினை பிரதிநிதித்துவம் செய்வதை விட வேறு ஒரு சிறந்த கௌரவம் கிடையாது. மீண்டும் ஒரு முறை (நாட்டினை பிரதிநிதித்துவம் செய்ய) கிடைத்த வாய்ப்பிற்காக சந்தோஷம் அடைவதோடு இங்கிலாந்துக்கு எதிரான தொடரினையும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.” என யூனுஸ் கான் குறிப்பிட்டார். 

இதேநேரம், யூனுஸ் கானின் நியமனம் தொடர்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளரான மிஸ்பா உல் ஹக் கருத்து வெளியிட்ட போது, அவர் பாகிஸ்தானை மீண்டும் சிறந்த பாதைக்கு எடுத்துச் செல்லக் கூடிய ஒரு நபராக இருப்பார் எனத் தெரிவித்திருந்தார். 

யூனுஸ் கான் தொடர்பான அறிவிப்பு ஒரு பக்கம் இருக்க, இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணியின் வீரர்கள் ஜூலை மாத இறுதிப் பகுதியில் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியிருக்கின்றது. 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<