தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் அடுத்த வாரம் கொழும்பில்

47th National Sports Festival

121

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் ஏற்பாடு செய்துள்ள வருடத்தின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான 47ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் இம்மாதம் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளுக்காக வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிக வீர வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள மெய்வல்லுனர் போட்டிகளில் தகுதிச்சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி என 60 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன், வருடத்தின் அதி சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனைக்கான விருதுகள் மற்றும் சம்பியன் அணிக்கான விருதினை இறுதிநாள் நிகழ்வுகளின் போது வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆசிய விளையாட்டு விழா அடுத்த மாதம் சீனாவில் நடைபெறவுள்ளதால், இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையின் முன்னணி மெய்வல்லுனர்கள் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப நாள் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமர் தினேஷ் குணவர்தன கலந்துகொள்ளவுள்ளதுடன், இறுதி நாள் நிகழ்வின் பிரதம விருந்தினராக அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் நாட்டில் ஏற்பட்ட அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமைகள் காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய விளையாட்டு விழா முழுமையாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<