சாரங்கி, நிலானிக்காக நடத்தப்படும் விசேட போட்டித் தொடர்

187

3000 மீட்டர் தடைதாண்டல் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய போட்டி நிகழ்ச்சிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை விசேட போட்டித் தொடரொன்றை நடத்த இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தியகம மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறவுள்ள இந்தப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள 35 முன்னணி வீரர்கள் அடங்கிய குழுவொன்றையும் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

இதனிடையே, குறித்த போட்டித் தொடரில் பெண்களுக்கான நீளம் பாய்தல் தேசிய சம்பியனான சாரங்கி டி சில்வாவும் 3000 மீட்டர் தடைதாண்டல் சம்பியனான நிலானி ரத்நாயக்கவும் பங்குபற்றவுள்ளதோடு, அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுவதற்கான போனஸ் புள்ளிகளை அதிகரித்துக் கொள்ளவும் இந்தப் போட்டித் தொடர் அவர்கள் இருவருக்கும் சிறந்த வாய்ப்பாக அமையவுள்ளது.

உலக சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெறுகின்ற வீரர்களுக்கான தரவரிசையில் சாரங்கி டி சில்வா தற்போது 32ஆவது இடத்தில் உள்ளார். மேலும், குறித்த போட்டித் தொடருக்கு 32 வீராங்கனைகள் மட்டுமே தெரிவு செய்யப்படவுள்ளதால் இவ்வார இறுதியில் நடைபெறுகின்ற இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தின் விசேட போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தி போனஸ் புள்ளிகளை அதிகரிப்பது முக்கியமானது.

அத்துடன், இது F பிரிவுக்கான போட்டித் தொடர் என்பதால் அதிக அளவிலான போனஸ் புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது. எனினும், உலக சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற இன்னும் சில நாட்களே உள்ளதால் இந்தப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தி பெற்றுக்கொள்கின்ற போனஸ் புள்ளிகள் அவருக்கு மிகப் பெரிய சாதகமாக அமையும்.

இதனிடையே, பெண்களுக்கான 3000 மீட்டர் தடைதாண்டல் போட்டிக்கான தரவரிசையில் நிலானி ரத்நாயக்க தற்போது 37ஆவது இடத்தில் உள்ளார். எனினும், உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான தரவரைசயின் பிரகாரம் 45 வீராங்கனைகள் மாத்திரம் தெரிவு செய்யப்படவுள்ளதால், நிலானி ரத்னாயவுக்கு இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதேவேளை, அண்மையில் நிறைவடைந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் அதிசிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்ற ஹிருஷ ஹஷேன், உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுகின்ற வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.

எனினும், அவரையும் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள நீளம் பாய்தல் விசேட போட்டித் தொடரில் இணைத்துக்கொள்ள இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<