இந்தியா மூலம் இலங்கைக்கு மற்றுமொரு வைட் வொஷ் தோல்வி

415
AFP PHOTO

நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான, T-20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கையை இந்தியா 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதுடன், T20 தொடரிலும் இலங்கையை 3-0 என வைட் வொஷ் செய்துள்ளது.

முன்னதாக, மும்பை நகரின் வாங்கடே மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.  

மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றியிருந்த காரணத்தினால், ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்த்த வண்ணம் இந்த ஆட்டத்தில் இலங்கை அணி களமிறங்கியிருந்தது.

இந்தப் போட்டிக்கான இலங்கை அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. (காயம் காரணமாக) அஞ்செலோ மெதிவ்ஸ், சத்துரங்க டி சில்வா ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட தனுஷ்க குணதிலக்க மற்றும் தசுன் சானக்க ஆகியோர் அணியில் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

மறுமுனையில் இந்திய அணியும் இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கியது. வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக T20 போட்டிகளில் அறிமுகமாக, வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜிற்கும் இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இவர்களுக்குப் பதிலாக யுஸ்வேந்திர சஹால் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோருக்கு இந்திய அணி ஓய்வு வழங்கியிருந்தது. வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக மிகவும் குறைந்த வயதில் (18 வருடங்கள் 80 நாட்கள்) T20 போட்டிகளில் அறிமுகமான வீரராக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் தொடருக்கான உத்தேச இலங்கை குழாம் அறிவிப்பு

இதனையடுத்து இலங்கை அணி, நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக தமது துடுப்பாட்டத்தை ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல் தரங்க ஆகியோருடன் தொடங்கியிருந்தது.

துடுப்பாட்டத்தை தொடங்கிய இலங்கை அணிக்கு எதிர்பார்த்த ஆரம்பம் அமையவில்லை. நிரோஷன் திக்வெல்ல, உபுல் தரங்க மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஓய்வறை நடந்தனர்.  இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை அணி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இவ்வாறானதொரு நிலையில் நான்காம் விக்கெட்டுக்காக சதீர சமரவிக்ரம அசேல குணரத்ன உடன் இணைந்து சொற்ப நேரம் போராடினார். இதனால், 50 ஓட்டங்களை இலங்கை அணி இலகுவாக கடந்தது. எனினும், சதீரவின் விக்கெட்டை ஹர்திக் பாண்டியா கைப்பற்ற மீண்டும் இலங்கை சரிவை சந்தித்தது. மத்திய வரிசையில் வந்த தனுஷ்க குணதிலக்க மற்றும் அணித் தலைவர் திசர பெரேரா ஆகியோர் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும் பின்வரிசையில் வந்த தசுன் சானக்க சற்று அதிரடி ஆட்டத்தைக் காட்ட 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அசேல குணரத்ன 3  பவுண்டரிகள் உடன் 36 ஓட்டங்களைப் பெற்றதோடு, தசுன் சானக்க 2 சிக்ஸர்கள் அடங்கலாக 24 பந்துகளுக்கு 29 ஓட்டங்களோடு ஆட்டமிழக்காமல் நின்றிருந்தார்.

இந்திய அணியின் பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

இதனை தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 136 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் லோக்கேஷ் ராகுல் ஆகியோரை தொடக்கத்தில் பறிகொடுத்து தடுமாறியிருந்தது. கடந்த போட்டியில் சதம் கடந்த ரோஹித் சர்மா 27 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தார்.

தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனீஷ் பாண்டே ஆகியோர் நிதானமான முறையில் துடுப்பாடி இந்திய அணிக்காக வெற்றி இலக்கை நெருங்கிய போதிலும் இலங்கையின் அபாரப்பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு காரணமாக அவர்கள் இருவரும் ஓய்வறை நடந்திருந்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பாக மாறத் தொடங்கியிருந்தது.

வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டத்தால் கொழும்பு கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் வெற்றி

இப்படியாக சென்ற ஆட்டத்தின் இறுதி இரண்டு ஓவர்களுக்கும் இந்தியா வெற்றிபெற 15 ஓட்டங்கள் தேவைப்பட அந்த ஓட்டங்களை தினேஷ் கார்த்திக் மற்றும் மஹேந்திர சிங் டோனி ஜோடி பெற்றுத்தந்தது.

முடிவில் இந்திய அணி, 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கை தொட்டது.

இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் மனீஷ் பாண்டே 29 பந்துகளுக்கு 32 ஓட்டங்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ஓட்டங்களையும் குவித்திருந்தனர்.

இந்திய அணிக்கு சவாலாக அமைந்த இலங்கை அணியின் பந்து வீச்சில், துஷ்மந்த சமீர மற்றும் தசுன் சானக்க ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது மற்றும் தொடரின் ஆட்ட நாயகன் விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட்டிற்கு வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 135/7 (20) – அசேல குணரத்ன 36(37), தசுன் சானக்க 29*(24), சதீர சமரவிக்ரம 21(17), ஜெய்தேவ் உனட்கட் 15/2(4), ஹர்திக் பாண்டியா 25/2(4)

இந்தியா – 139/5 (19.2) – மனீஷ் பாண்டே 32(29), ஸ்ரேயாஸ் ஐயர் 30(32), ரோஹித் சர்மா 27(20),  துஷ்மந்த சமீர 22/2(4), தசுன் சானக்க 27/2(4)

முடிவு – இந்தியா 5 விக்கெட்டுக்களால் வெற்றி