ஒஸ்லோ டயமண்ட் லீக்கில் யுபுன் அபேகோனுக்கு 5ஆவது இடம்

60
upun Abeykoon Finished 5th
 

நோர்வேயின் ஒஸ்லோவில் நேற்று இரவு (16) நடைபெற்ற டயமண்ட் லீக் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் நட்சத்திர குறுந்தூர ஓட்ட வீரர் யுபுன் அபேகோன் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

உலக மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான டயமண்ட் லீக் மெய்வல்லுனர் தொடரின் 6ஆவது அத்தியாயம் நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் உள்ள பிஸ்லெட் அரங்கில் நேற்று நடைபெற்றது.

அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகளாக அமைந்த ஒஸ்லோ டயமண்ட் லீக் போட்டியில் உலகின் முன்னணி மெய்வல்லுனர் பலர் களமிறங்கியிருந்தனர்.

இதில் இத்தாலியில் அண்மைக்காலமாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றவரும், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்தவருமான யுபுன் அபேகோன் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டியில் பங்குகொண்டார்.

இதன்படி, கனடாவின் அன்ட்ரே டி கிராஸ், தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினே உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்ட யுபுன், 10.16 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பிடித்தார்.

எவ்வாறாயினும், போட்டி ஆரம்பமாவதற்கு முன் மழை பெய்ததால் குறித்த போட்டியில் யுபுன் அபேகோனுக்கு எதிர்பார்த்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது.

இதேவேளை, குறித்த போட்டியில் யுபுன் அபேகோனுக்கு வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், டயமண்ட் லீக் தொடரில் பங்குகொண்டு திறமைகளை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்படுகின்ற புள்ளிகள் படி அவருக்கு இந்த ஆண்டு உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பங்குபற்றுவதற்கான வீரர்கள் தரவரிசையில் முதல் 48 இடங்களுக்குள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், கடந்த சில வாரங்களாக நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்டு திறமைகளை வெளிப்படுத்தியிருந்த யுபுன் அபேகோன், உலக தரவரிசையில் தற்போது 41ஆவது இடத்தில் உள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு இத்தாலியின் ரோமிலும், சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலும் நடைபெற்ற இரண்டு டயமண்ட் லீக் மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குகொண்ட அனுபவத்தைக் கொண்ட யுபுன், இறுதியாக, கடந்த மாதம் ஜேர்மனியில் நடைபெற்ற ஆன்ஹோல்ட் சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தை 10.06 செக்கன்களில் கடந்து தனது சொந்த இலங்கை மற்றும் தெற்காசிய சாதனைகளை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, குறித்த போட்டியில் முதலிடத்தை டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கனடாவின் அன்ட்ரே டி கிராஸ் (10.05 செக்.) பெற்றுக்கொள்ள, பிரித்தானியாவின் ரீஸ் ப்ரெஸ்கோட் (10.06 செக்.) இரண்டாவது இடத்தையும், தென்னாபிரிக்காவின் அகானி சிம்பினே (10.09 செக்) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<