ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை வென்றது வதிரி டயமண்ட்ஸ்

750
TP Pathmanathan Memorial Trophy

தெல்லிப்பளை மகாஜன கல்லூரியின் முன்னாள் வீரர் ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் பசையூர் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை வீழ்த்திய வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் இவ்வருட சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

வாய்ப்புகளைத் தவறவிட்ட பாடும்மீன்; காலிறுதியில் புளூ ஸ்ரார்

இந்த சுற்றுத்தொடர் கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் தெல்லிப்பளை மகாஜன கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இத்தொடரில் யாழ் மாவட்டத்தின் முன்னணி கழகங்களின் எட்டு அணிகள் பங்கெடுத்தன.

பெருந்தொகையான ரசிகர்களுடன் ஆரம்பமான, கிண்ணத்தைத் தீர்மானிப்பதற்கான, தொடரின் இறுதிப் போட்டியில் யாழ் மாவட்டத்தின் புகழ் பூத்த கழகங்களான பசையூர் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து வதிரி டயமன்ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதியாட்டத்தின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்திய நிலையில், 16ஆவது நிமிடத்தில் சென் அன்ரனீஸ் வீரன் கலிஸ்ரர் முதலாவது கோலைப் போட 1-0 என தனது தரப்பினரை அவர் முன்னிலைப்படுத்தினார்.

அதன் பின்னர் இரு தரப்பினராலும் கோலுக்கான முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டன. எனினும், வீரர்களின் தடுப்பாட்டம் காரணமாக மேலதிகமாக எந்த ஒரு கோலும் பெறப்படாத நிலையில் முதல் பாதி நிறைவடைந்தது.

முதல் பாதி: சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் 1 – 0 டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

இந்நிலையில் இரண்டாவது பாதியாட்டத்தில் வேகமெடுத்த டயமண்ட்ஸ் அணியினருக்கு 51ஆவது நிமிடத்தில் தண்ட உதைக்கான வாய்ப்பொன்று கிடைத்தது. அதனை அவ்வணி வீரன் உஷானந் சரியாகப் பயன்படுத்தி கோலைப் பெற்றார். இதன்மூலம் டயமன்ஸ் அணி போட்டியை சமநிலைப்படுத்தியது.

தர்ஜினியின் அறிமுகம் முன்னரே கிடைத்திருந்தால்

எனினும் அதன் பின்னர் இரு அணி வீரர்களும் போட்டியின் வெற்றி கோலைத் பெறுவதற்காக கடுமையாகப் போராடினர். எனினும் இறுதி வரை இரண்டாவது கோல் பெறப்படவில்லை.

இதன் காரணமாக ஆட்டத்தில் மேலதிக நேரம் வழங்கப்பட்டது. இதன்போதும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறவில்லை.

முழு நேரம்: சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் 1 – 1 டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

இறுதியாக கிண்ணத்தின் சொந்தக்காரர் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி வாய்ப்பாக இரு தரப்பினருக்கும் பெனால்டி உதைக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. இதன்போது, டயமன்ஸ் அணியினர் 3-2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று 2017ஆம் ஆண்டிற்கான ரி.பி.பத்மநாதன் ஞாபகார்த்த கிண்ணத் தொடரில் சம்பியனாகத் தெரிவாகியது.

அரையிறுதி ஆட்டங்கள்

தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பலம்மிக்க வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம், குருநகர் பாடும் மீன் விளையாட்டுக் கழகம் என்பன மோதின.

இப்போட்டியில், இம்முறை FA கிண்ணத் தொடரில் காலிறுதிக்கு முன்னைய சுற்று வரை முன்னேறியிருந்த யாழின் பலம் மிக்க அணிகளில் ஒன்றான பாடும் மீன் தரப்பினரை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய டயமண்ட்ஸ் அணி வீரர்கள் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தனர்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டியிலும் பலம் மிக்க அணிகளான பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழக அணி மோதியது.

பார்வையாளர்களுக்கு விருந்தளித்த இந்த விறுவிறுப்பான போட்டியின் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் காணப்பட்டதால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழகம் வெற்றியீட்டி இறுதி போட்டிக்குத் தகுதிபெற்றது.

இறுதிப் போட்டியின்  ஆட்ட நாயகன்

T.உஷானன்த் – டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்

தொடரின் நாயகன்

கலிஸ்டர் – சென் அன்ரனீஸ் விளையாட்டுக் கழக

சிறந்த கோல் காப்பாளர் 

M.ஜானரத்தனன் – டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகம்