மேவரின் அதிரடியால் முதல் டி20 போட்டியில் நெதர்லாந்துக்கு வெற்றி

108
Zimbabwe tour of Netherlands 2019

ரோலொப் வென் டர் மேவரின் அதிரடியான துடுப்பாட்டம் மற்றும் கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய பிரென்டன் க்ளோவரின் துள்ளியமான பந்துவீச்சின் உதவியால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நெதர்லாந்து அணி 49 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி அங்கு நெதர்லாந்து அணியுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட இருதரப்பு கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறது. முதல் தொடரான ஒருநாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை (21) நிறைவுக்கு வந்த நிலையில் தொடரை 2 – 0 என்ற அடிப்படையில் நெதர்லாந்து அணி கைப்பற்றியிருந்தது.

ஜிம்பாப்வே அணியை துவம்சம் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது நெதர்லாந்து

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள்..

இந்நிலையில் அடுத்த தொடரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று (23) ரொட்டேர்டமில் நடைபெற்றது. நெதர்லாந்து அணி சார்பாக பந்துவீச்சாளரான பிரென்டன் க்ளோவர் கன்னி டி20 சர்வதேச போட்டியில் களமிறங்கினார். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணி பணிக்கப்பட்டது.

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கிடைத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தொபைஸ் வைஸி 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் இரண்டாவது விக்கெட் இணைப்பட்டம் நெதர்லாந்து அணிக்கு வலு சேர்த்தது. மெக்ஸ் ஓடௌட் மற்றும் பென் கூப்பர் ஆகிய இருவரும் இணைப்பாட்டமாக 81 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட வேளையில், மெக்ஸ் ஓடௌட் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து வந்த பஸ் டீ லீடி வந்த வேகத்தில் இரு பந்துகளுடன் 1 ஓட்டத்தை பெற்று அரங்கம் திரும்பினார். மறுமுனையில் ஆடிய பென் கூப்பரும் அடுத்த ஓவரில் அபாரமான முறையில் அரைச்சதம் கடந்து 28 பந்துகளுக்கு 54 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வெஸ்லி பரிஸி 18 பந்துகளுக்கு முகங்கொடுத்து வெறும் 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆனால் ஆறாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோலொப் வென் டர் மேவர் மிக மிக அபாரமாக தனது துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்துகளுக்கு முகங்கொடுத்த அவர் 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 75 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக்கொள்ள, இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 13 உதிரிகளுடன் 199 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

கோஹ்லி மற்றும் நியூசிலாந்து அணிக்கு ஐ.சி.சி அபராதம்

ஆட்டமிழப்பு கோரி நடுவருடன் முரண்பட்ட காரணத்தினால்…

ஜிம்பாப்பே அணியின் பந்துவீச்சில் கிறிஸ் முப்போ 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், சேன் வில்லியம்ஸ், சிக்கன்டர் ராஸா, ரயன் பேர்ள் மற்றும் கெய்ல் ஜர்விஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

200 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலெடுத்தாட ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. சொலொமொன் மிர் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மூன்றாவது ஓவரில் இரண்டாவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. அணித்தலைவர் ஹெமில்டன் மஸகட்ஸா 4 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த கிரேக் ஏர்வின் மற்றும் பிரென்டன் டைலர் ஆகியோர் அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டுச்சென்றனர். இருவரும் இணைப்பாட்டமாக 63 ஓட்டங்களை பகிர்ந்து கொண்ட நிலையில் டைலர் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரில் அதிரடியாக அரைச்சதம் கடந்த கிரேக் ஏர்வின் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஏர்வினை தொடர்ந்து வந்த சேன் வில்லியம்ஸ் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஜிம்பாப்வே அணி 13.1 ஓவர்கள் நிறைவில் 105 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையை அடைந்தது. ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 5 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 41 பந்துகளுக்கு 95 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி

கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய…

இந்த நிலையில் அதிரடியை வெளிக்காட்ட முயன்ற ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அடுத்து அடுத்து ஆட்டமிழக்க இறுதியில் 19.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களும் வீழ்த்தப்பட்டது. இவ்வேளையில் ஜிம்பாப்வே அணி 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் கிரேக் ஏர்வின் மாத்திரமே சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்தார். அவர் 37 பந்துகளில் 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். ஏனைய வீரர்கள் எவரும் 20 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் கன்னி டி20 போட்டியில் விளையாடிய பிரென்டன் க்ளோவர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அணித்தலைவர் பீட்டர் சீலர் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், பிரெட் கிளாஸன் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ரோலொப் வென் டர் மேவர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.  

போட்டியின் இறுதியில் நெதர்லாந்து அணி 49 ஓட்டங்களினால் வெற்றிபெற்று இரு போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் 1-0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நெதர்லாந்து 199/6 (20) – ரோலொப் வென் டர் மேவர் – 75 (39), பென் கூப்பர் – 54 (28), கிறிஸ் முப்போ – 2/38 (4), சேன் வில்லியம்ஸ் – 1/18 (3)

ஜிம்பாப்வே – 150/10 (19.5) – கிரேக் ஏர்வின் – 59 (37), கிறிஸ் முப்போ – 17 (9), பிரென்டன் க்ளோவர் – 3/20 (4), பீட்டர் சீலர் – 3/28 (4)

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<