சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T-20 போட்டியில் பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் திறம்பட செயற்பட்டிருந்த பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் இலங்கையை வெற்றிகொண்டது.
இவ்வெற்றி மூலம் இறுதியாக தாம் விளையாடியிருந்த எட்டு T-20 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த பங்களாதேஷ் அணி, இவ்வெற்றியினால் அனைத்து தோல்விகளிற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதுடன், டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்கள் போன்று 1-1 என இந்த T-20 தொடரினையும் சமப்படுத்தியுள்ளது
ஆர். பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் T-20 சர்வதேச போட்டிகளில் ஓய்வினை அறிவித்திருந்த பங்களாதேஷ் அணியின் தலைவர் மசரபி மொர்தஸா, தனது பிரியாவிடைப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொண்டார்.
இன்றைய போட்டிக்காக பங்களாதேஷ் அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. முதுகு உபாதைக்கு உள்ளாகியிருந்த பங்களாதேஷ் அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பாலிற்கு பதிலாக இம்ருல் கைஸ் அணிக்குள் இணைக்கப்பட்டதுடன், வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அஹமடிற்கு பதிலாக இளம் சுழல் பந்துவீச்சாளர் மெஹதி ஹஸன் T-20 சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடும் வாய்ப்பினை பெற்றிருந்தார். இலங்கை குழாம் இன்றைய போட்டியில் மாற்றங்கள் ஏதுமின்றி களமிறங்கியிருந்தது.
இதனையடுத்து, வல்லுனர்களின் எதிர்வுகூறல்களிற்கு அமைவாக துடுப்பாட்டத்திற்கு அதிகம் சாதமாயிருந்த ஆடுகளத்தில் இம்ருல் கைஸ் மற்றும் செளம்யா சர்க்கார் ஜோடி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்தது.
ஆரம்ப வீரர்கள் மெதுவாக போட்டியை தொடங்கியிருப்பினும் அடுத்தடுத்த ஓவர்களில் தமது இரும்புக் கரவலிமையை வெளிக்காட்டி பவுண்டரி எல்லைகளை பதம் பார்த்தனர்.
அதிதுரித முறையில் 71 ஓட்டங்களினைப்பெற்றிருந்த பங்களாதேஷ் தமது முதல் விக்கெட்டாக செளம்யா சர்க்காரினைப் பறிகொடுத்தது. வெறும் 17 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டிருந்த சர்க்கார் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உடன் 34 ஓட்டங்களைப்பெற்று தமது அணிக்கு பெறுமதி சேர்த்திருந்தார். இலங்கை அணிக்கு மிகவும் தேவையாய் இருந்த இந்த முதல் விக்கெட்டினை அசேல குணரத்ன கைப்பற்றியிருந்தார்.
செளம்யா சர்க்காரின் விக்கெட்டினை தொடர்ந்து ரன் அவுட் முறையில் ஏனைய இடது கை ஆரம்ப வீரர் இம்ருல் கைஸ் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 36 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பினார்.
மத்திய வரிசையில் பங்களாதேஷ் அணியின் சகல துறை ஆட்டக்காரர் சகீப் அல்ஹஸன் 31 பந்துகளினை மாத்திரம் எதிர்கொண்டு 38 ஓட்டங்களினை குவித்து தனது அணியினை பலப்படுத்தியிருந்தார்.
சிறப்பான ஆட்டத்தினால், பங்களாதேஷ் அணியின் ஏனைய வீரர்கள் ஒரு பாரிய இலக்கினை பெறுவதற்கு போட்டியின் இறுதிக்கட்டத்தில் முயற்சித்திருந்தனர்.
எனினும், அப்போது போட்டியின் 19ஆவது ஓவரினை வீச கையில் பந்தினை ஏந்திக்கொண்ட இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தான் வீசிய மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளில் தொடர்ச்சியான முறையில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து ஹட்ரிக் சாதனை ஒன்றினை பதிவு செய்தார்.
இதனால் முறையே பங்களாதேஷ் வீரர்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிக்காட்டிய முஸ்பிகுர் ரஹீம் 15 ஓட்டங்களுடனும் இன்றைய போட்டியின் பிரியாவிடை நாயகன் மசரபி மொர்தஸா மற்றும் மெஹதி ஹஸன் ஆகியோர் ஓட்டம் ஏதுமின்றியும் ஓய்வறை திரும்பியிருந்தனர்.
முடிவில் பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.
களத்தடுப்பு இப்போட்டியில் சற்று மோசமாக காணப்பட்டிருந்த இலங்கை அணியின் பந்து வீச்சில் நான்காவது சர்வதேச ஹட்ரிக் சாதனையை பதிவு செய்திருந்த லசித் மலிங்க 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், நுவன் குலசேகர, விக்கும் சஞ்சய, அசேல குணரத்ன மற்றும் திசர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
இதனையடுத்து சற்று சவாலான வெற்றி இலக்கான 177 ஓட்டங்களை 20 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு ஆடியிருந்த இலங்கை அணி முதல் ஓவரின் இரண்டாம் பந்தில், தமது முதல் விக்கெட்டினைப் பறிகொடுத்தது.
கடந்த போட்டிக்கு மாறாக இன்றைய ஆட்டத்தில் தில்ஷான் முனவீர உடன் மைதானம் விரைந்த குசல் பெரேரா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் பவுண்டரி ஒன்றினை விளாசி இரண்டாம் பந்தில் சகீப் அல்ஹஸன் மூலம் போல்ட் செய்யப்பட்டார்.
மோசமான ஆரம்பத்தினைப் பெற்றுக்கொண்ட இலங்கை தொடர்ச்சியாக, சகீப் அல்ஹஸன், முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மஹமதுல்லாஹ் ஆகியோரின் அற்புத பந்துவீச்சுகளில் விக்கெட்டுகளை அடுக்கடுக்காக பறிகொடுத்து, ஒரு கட்டத்தில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இவ்வாறானதொரு இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த திசர பெரேரா மற்றும் கபுகெதர ஆகியோர் ஆறாவது விக்கெட்டுக்காக சிறப்பாக ஆடி போட்டியினை இலங்கையின் பக்கம் திருப்பி நம்பிக்கையூட்டியிருந்தனர்.
எனினும் மீண்டும் சகீப் அல் ஹஸனின் சாமர்த்தியமான பந்து வீச்சு ஒன்றின் மூலம் ஸ்டம்ப் முறையில் பெரேராவை ஓய்வறை நோக்கி அனுப்பியிருந்தார்.
27 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பிய பெரேராவை தொடர்ந்து ஏனைய இலங்கை அணி வீரர்கள் எவரும் சொல்லிக்கொள்ளுமளவுக்கு எதனையும் செய்திருக்கவில்லை. கபுகெதரவும் இலங்கையின் 8ஆவது விக்கெட்டாக ஓய்வறை திரும்ப பங்களாதேஷ் அணியின் வெற்றி உறுதியாகியிருந்து.
இறுதியில் இலங்கை அணி, 18 ஓவர்களிற்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இப்போட்டியில் 45 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதில் இலங்கை அணியில் இறுதிவரை போராடியிருந்த சாமர கபுகெதர மொத்தமாக, 35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்களாக 50 ஓட்டங்களைப் பெற்று தனது முதலாவது T-20 சர்வதேச அரைச்சதத்தினைப் பூர்த்திசெய்தார்.
பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சில், இலங்கைக்கு அதிக நெருக்கடி தந்த முஸ்தபிசுர் ரஹ்மான் வெறும் 21 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளையும் சகீப் அல்ஹஸன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியுடனான தமது சுற்றுப்பயனத்தினை வெற்றியுடன் நிறைவு செய்தனர்.
இப் போட்டியின் ஆட்ட நாயகனாக சகீப் அல் ஹஸன் தெரிவு செய்யப்பட்டதோடு லசித் மலிங்க தொடர் நாயகனாக விருது வழங்கப்பட்டிருந்தார்.
போட்டியின் சுருக்கம்
போட்டி முடிவு – பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் வெற்றி