வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு நிகழ்வின் கால்பந்தாட்ட தொடரில் 18 வயதின் கீழ் பிரிவில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியும், 16 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன.

16 வயதின் கீழ் பிரிவு

சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியை எதிர்த்து மன்னார் சென் லூஸியா கல்லூரி மோதியது.

மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர்

விறுவிறுப்பான போட்டியாக அமைந்த இவ்வாட்டம் ஆரம்பம் முதலே பரபரப்பானது. இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. போட்டியின் முதற்பாதியின் 14ஆவது நிமிடத்தில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி A.P திலக்ஷன் மூலம் தனது முதலாவது கோலைப் பெற்றது.

இதன் காரணமாக முதற்பாதி புனித பத்திரிசியார் கல்லூரியின் முன்னிலையுடன் நிறைவுக்கு வந்தது.

முதல் பாதி : புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 0 சென் லூஸியா கல்லூரி

எழுச்சியுடன் இரண்டாம் பாதியை ஆரம்பித்த சென் லூஸியா கல்லூரி சிறப்பான ஆட்டத்தை வழங்கியது. எனினும் அவ்வணி விரர்கள் தமக்குக் கிடைத்த கோல் போடும் சந்தர்ப்பங்களை தவறவிட்டனர்.  

எனினும், சிறந்த வீரர்களைக் கொண்ட புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர் எதிரணியின் ஆட்டத்திற்கு சிறந்த முறையில் ஈடுகொடுத்து ஆடினர். அது போன்றே அவர்களாலும் எந்த ஒரு கோலையும் பெற முடியாமல் போனது.

எனவே, இந்த ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் புனித பத்திரிசியார் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

முழு நேரம் : புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 0 சென் லூஸியா கல்லூரி


மூன்றாம் இடத்திற்கான போட்டி

இப்போட்டியில் கால்பந்தாட்டத்திற்கு பெயர்பெற்ற அணிகளுள் ஒன்றான இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியை எதிர்த்து சுற்றுத் தொடருக்கு முதன் முறையாக நுழைந்து, அரையிறுதியை எட்டிப்பிடித்திருந்த இமையாணன் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய அணி மோதியது.

போட்டியின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்திய புனித ஹென்ரியரசர் கல்லூரி அணிக்கு முறையே 9ஆம், 17ஆம் நிமிடங்களில் டிசாந்த், ஜெலெக்ஸன் ஆகியோர் கோலினைப் பெற்றுக்கொடுத்து அணியை முன்னிலைப்படுத்தினர்.

முதல் பாதி : புனித ஹென்ரியரசர் கல்லூரி 2 – 0 இமையாணன் அரசினர் தமிழ் கலவன் வித்.

புனித ஹென்ரியரசர் கல்லூரி 2 கோல்களினால் முன்னிலையிலிருக்க ஆரம்பமான இரண்டாம் பாதியில், இமையாணன் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

முதல் பாதியின் பின்னிலைக்கு பதில்கொடுக்கும் முகமாக அவ்வணியின் டினேஷ், திவான்சுஜன் ஆகியோர் அடுத்தடுத்து கோல்களைப் போட்டு கோல் கணக்கினை சமப்படுத்தினர்.

இந்த இரு கோல்களும் புனித ஹென்ரியரசர் கல்லூரிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. எனவே வெற்றி கோலுக்கான முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும், எதிர்தரப்பு அவர்களது கோலுக்கு இடம் கொடுக்கவில்லை. எனவே ஆட்டம் சமநிலையில் முடிந்தது.

முழு நேரம் : புனித ஹென்ரியரசர் கல்லூரி 2 – 2 இமையாணன் அரசினர் தமிழ் கலவன் வித்.

இதன் காரணமாக சமநிலை தவிர்ப்பு உதை (பெனால்டி) வழங்கப்பட்டது. அதில் 4-3 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று மூன்றாம் இடத்தினை தமதாக்கியது புனித ஹென்ரியரசர் அணி.


18 வயதின் கீழ் பிரிவு

அதனைத் தொடர்ந்து 18 வயதின் கீழ் பிரிவுக்கான போட்டிகள் இடம்பெற்றன. மிகச் சிறந்த வீரர்களைக் கொண்ட வயதெல்லையான இப்பிரிவின் இறுதிப் போட்டியில் பலம் மிக்க மன்னார் சென் சேவியர் கல்லூரியை எதிர்த்து யாழ் மத்திய கல்லூரி அணி மோதியது.  

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் விறுவிறுப்பாக மோதியது. இரு தரப்பினரும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தியபோதும், வீரர்களின் தவறுகள் மற்றும் எதிரணியின் தடுப்பாட்டம் என்பன காரணமாக முதல் பாதியில் எந்த ஒரு அணியினராலும் கோல்களைப் பெற முடியாமல் போனது.

முதல் பாதி : சென் சேவியர் கல்லூரி 0 – 0 யாழ் மத்திய கல்லூரி

ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் நிலைமை முதல் பாதியை விட முழுமையாக வேறுபட்ட விதத்தில் இருந்தது. இந்த பாதியாட்டத்தின் ஆரம்பத்தில் சென் சேவியர் அணி சற்று பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் சந்தர்ப்பங்கள் பலவற்றை வீணடித்தது.

போட்டியின் இறுதி நிமிடங்களில் வேகமெடுத்த யாழ் மத்திய கல்லூரி அணி வீரர்கள் கோல் கம்பம் வரை சென்றும் தமது சந்தர்ப்பங்களை தவற விட்டநிலையில் கோல்கள் எதையும் பெறாத நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

முழு நேரம் : சென் சேவியர் கல்லூரி 0 – 0 யாழ் மத்திய கல்லூரி

இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் சமநிலை தவிர்ப்பு உதையில் (பெனால்டி) 3-2 என்ற கோல்கள் கணக்கில் மன்னார் சென் சேவியர் அணி வெற்றி பெற்று 18 வயதின் கீழ் பிரிவில் சம்பியனானது

மகளிர் பிரிவு போட்டிகளின் புகைப்படங்களைப் பார்வையிட


மூன்றாம் இடத்திற்கான போட்டி

இப்போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியர் கல்லூரி அணியை எதிர்த்து  கிளிநொச்சி செட்டிக்குளம் மகா வித்தியாலய அணி மோதியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற முதற்பாதியில் பலமான பத்திரிசியார் கல்லூரி அணிக்கு செட்டிக்குளம் மகா வித்தியாலய வீரர்கள் பலத்த அழுத்தம் கொடுத்தனர்.

அவர்கள் பத்திரிசியார் கல்லூரியின் கோல் போடும் முயற்சிகளையும் கட்டுப்படுத்தினர். எதிர்பர்ப்புக்களுக்கு மத்தியில் ஆரம்பமாகிமுதற்பாதி நிறைவடையும்பொழுது எந்த அணியினரும் கோல்களைப் பெறவில்லை.

முதல் பாதி : புனித பத்திரிசியர் கல்லூரி 0 – 0 செட்டிக்குளம் மகா வித்தியாலயம்

அதே விறுவிறுப்புடன் ஆரம்பமான இரண்டாவது பாதியில் அடுத்தடுத்து 03 கோல்களைப் பெற்றது புனித பத்திரிசியார் கல்லூரி. எனவே, போட்டி முடிவில் அக்கல்லூரி வீரர்கள் மேலதிக 3 கோல்களினால் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை வென்றனர்.

முழு நேரம் : புனித பத்திரிசியர் கல்லூரி 3 – 0 செட்டிக்குளம் மகா வித்தியாலயம்