ஜிம்பாப்வே அணியை துவம்சம் செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றியது நெதர்லாந்து

113
Image Courtesy - ESPNcricinfo

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அபாரமான முறையில் துடுப்பெடுத்தாடி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2 – 0 என நெதர்லாந்து அணி கைப்பற்றியுள்ளது.

இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணிக்குமிடையிலான இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று (21) டெவென்டரில் அமைந்துள்ள ஸ்போர்ட்பார்க் ஹெட் ஸ்கொட்ஸ்வெல்ட் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி

கன்னி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய மெக்ஸ்….

முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நெதர்லாந்து டக்வத் லூவிஸ் முறையில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடர் தோல்வியிலிருந்து தவிர்ந்துகொள்ள கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையில் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது.

இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே அணியில் மாற்றமெதுவும் நிகழவில்லை. ஆனால் நெதர்லாந்து அணி சார்பாக இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன. வென் மீகிரன் மற்றும் பஸ் டீ லீட் ஆகியோர் வெளியேற்றப்பட்டு இரண்டு அறிமுக வீரர்கள் அணியில் உள்வாங்கப்பட்டனர்.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் அணித்தலைவர் ஹமில்டன் மஸகட்ஸா இன்றைய போட்டியிலும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். சக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சொலொமொன் மிர் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிரோக் ஏர்வின் மற்றும் விக்கெட் காப்பாளர் பிரென்டன் டைலர் ஆகியோர் இணைப்பாட்டமாக 83 ஓட்டங்களை பெற்று அணிக்கு வலுச்சேர்த்தனர். 49 பந்துகளுக்கு முகங்கொடுத்த பிரென்டன் டைலர் அரைச்சதம் கடந்து 51 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார்.

க்ளோபல் டி20 கனடா தொடரில் இலங்கையின் 3 அதிரடி வீரர்கள்

க்ளோபல் டி20 கனடா கிரிக்கெட் தொடரின் இரண்டாவது…..

பின்னர் ஆடுகளம் நுழைந்த சோன் வில்லியம்ஸ் 2 ஓட்டங்களுடன் ஏமாற்றமளித்தார். ஆனால் ஐந்தாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த கிரோக் ஏர்வின் மற்றும் சிக்கன்டர் ராஸா ஆகிய இருவரும் 94 ஓட்டங்களை பகிர்ந்து ஜிம்பாப்வே அணிக்கு மிகப்பெரிய இணைப்பாட்டத்தை வழங்கினர். கிரேக் ஏர்வின் 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆடுகளம் நுழைந்த பீட்டர் மூர் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் ஏழாவது விக்கெட்டுக்காக மீண்டும் சிக்கன்டர் ராஸாவுடன் ஜோடி சேர்ந்த டொனால்ட் திரிபானோ ஆட்டமிழக்காது 16 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள வீழ்த்தப்படாத இணைப்பாட்டமாக 55 ஓட்டங்கள் பகிரப்பட்டது. மறுபக்கம் சிக்கன்டர் ராஸா ஆட்டமிழக்காது அதிரடியாக 68 பந்துகளுக்கு 85 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இறுதியில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் ப்ரெட் கிலாஸன் 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அறிமுக வீரர் ப்ரென்டன் க்ளோவர், பீட்டர் சீலர், மற்றுமொரு அறிமுக வீரர் ஷாகிப் சுல்பிகார் மற்றும் விவியன் கிங்மா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

290 எனும் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நெதர்லாந்து அணிக்கு நல்ல ஆரம்பம் கிடைத்தது. அதிரடியாக துடுப்பாடிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தொபைஸ் வைஸீ 41 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மூன்றாமிலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பென் கூப்பர் 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடர் இந்தியாவில் நடைபெறாது – பி.சி.சி.ஐ

இந்தியாவில் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடர் நடாத்த………

கன்னி ஒருநாள் போட்டியில் விளையாடிய ஷாகிப் சுல்பிகார் அதே ஓவரில் ஓட்டமெதுவும் பெறாமல் வந்த வேகத்திலேயே ஆடுகளம் திரும்பினார். அதனை தொடர்ந்துவந்த வெஸ்லி பாரிஸி 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் ஒருநாள் அறிமுகம் பெற்று ஆட்டநாயகன் விருதுவென்ற ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மெக்ஸ் ஓடௌட் இந்த போட்டியிலும் அரைச்சதம் அடித்து 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க நெதர்லாந்து அணி 167 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றத்திற்கு உள்ளாகியது.

இக்கட்டான நிலையிலும் ஒரு பக்கத்தில் சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ரோலொப் வேன் டர் மேவர் அரைச்சதம் கடந்தார். எனினும் அவரால் தொடர்ந்தும் போராட முடியாமல் போக 57 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆறு ஓவர்களுக்கு 4 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 59 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இந்நிலையில் அணித்தலைவர் பீட்டர் சீலரினுடைய அபார துடுப்பாட்டத்தின் மூலம் நெதர்லாந்து அணி வெற்றியை நோக்கி நகர்ந்தது. 15 பந்துகளுக்கு 32 ஓட்டங்களை பெற்ற வேளையில் சீலர் ஆட்டமிழந்து சென்றார். அவ்வேளையில் 12 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டது. இறுதியில் 4 பந்துகள் மீதமிருக்கின்ற நிலையில் நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆடுகளத்தில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த விக்கெட் காப்பாளர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் 44 ஓட்டங்களுடனும், ப்ரெட் கிளாசன் 6 ஓட்டங்களுடனும் காணப்பட்டனர்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் சோன் வில்லியம்ஸ் சிறப்பாக பந்துவீசி 43 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். டொனால்ட் திரிபானோ 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், டென்டி சதாரா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

கோஹ்லியின் சாதனையை சமன் செய்த டேவிட் வோர்னர்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு….

நெதர்லாந்து அணியின் இவ்வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை,  நெதர்லாந்து அணி 2 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஜிம்பாப்வே – 290/6 (50) – சிக்கன்டர் ராஸா 85(68), கிரேக் ஏர்வின் 84(107), ப்ரெட் கிலாஸன் 2/53(10), ப்ரென்டன் க்ளோவர் 1/37(10)

நெதர்லாந்து – 291/7 (49.2) – மெக்ஸ் ஓடௌட் 59(81), ரோலொப் வேன் டர் மேவர் 57(54), ஸ்கொட் எட்வார்ட்ஸ் 44(47), சோன் வில்லியம்ஸ் 4/43(7), டொனால்ட் திரிபானோ 2/62(10)

முடிவு – நெதர்லாந்து அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<