பொதுநலவாய விளையாட்டில் மீண்டும் கிரிக்கெட்

116
ICC
 

சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளின் பெயரில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் போட்டியானது பொதுநலவாய விளையாட்டு விழாவில் நடைபெறவுள்ளதாக பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பு இன்று (13) அறிவித்துள்ளது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவானது அடுத்ததாக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இது 22 ஆவது தடவையாக 2022 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெறவுள்ளது.

இந்திய பயிற்றுவிப்பாளருக்காக போட்டியிடும் ஆறு பேரின் விபரம் வெளியானது!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்காக…

அண்மையில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஐ.சி.சி உலகக்கிண்ண தொடரின் பின்னர் கிரிக்கெட், விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. கிரிக்கெட் விளையாட்டு உலகக்கிண்ணத்துடனேயே மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்பட்டது. இந்நிலையில் இதனை பரவலாக வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற முயற்சிகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை முயற்சித்து வந்தது.

குறித்த முயற்சியின் பலனாக தற்போது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் மகளிருக்கான கிரிக்கெட்டாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இடைநிறுத்தப்பட்டுள்ள ஆண்களுக்கான கிரிக்கெட்டும் எதிர்காலத்தில் மீண்டும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவை நடாத்தும் உரிமையை தென்னாபிரிக்கா முதன் முதலாக பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்காவின் விடுதலைக்காக போராடிய நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் நடாத்த பணிப்புரை வழங்கப்பட்டிருந்தது.  

ஆனால் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிப்பிரச்சினை காரணமாக போட்டியை நடாத்த இயலாது என்ற அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாகவே போட்டி மீண்டும் இங்கிலாந்து சென்றது. ஒரு நாட்டில் பொதுநலவாய விளையாட்டு விழா நடாத்தப்படும் போது குறித்த போட்டியை நடாத்தும் நாடு ஏழு போட்டிகளை பரிந்துரை செய்யலாம்.

கிரிக்கெட் உலகில் நடைபெற்றுவரும் டி20 லீக் தொடர்களில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக்பேஷ் லீக் தொடர் மிகவும் பிரபல்யமான ஒன்றாக காணப்படுகின்றது. அதில் மகளிருக்கான பிக்பேஷ் டி20 லீக் தொடரும் நடைபெற்று வருகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த வண்ணம் உள்ளன.

மகளிருக்கான பிக்பேஷ் லீக் தொடர் மூலம் மகளிர் கிரிக்கெட் மீதான ஆர்வம் அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து மகளிர் கிரிக்கெட்டையும் வளர்க்கும் நோக்குடன் சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் சபை மேற்கொண்ட பரிந்துரையின் அடிப்படையில் இவ்வாறு மகளிருக்கான டி20 கிரிக்கெட் தொடர் பொதுநலவாய விளையாட்டு விழாவில் சேர்க்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியை வீழ்த்த சில திட்டங்களை வைத்துள்ளோம் – திமுத்

நியூசிலாந்து அணியும் எமக்கு எதிராக சிறந்த முறையில் விளையாடுவார்கள். அதேபோல…

குறித்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் புதிதாக மீண்டும் இணைக்கப்பட்ட மகளிர் கிரிக்கெட்டுடன் சேர்த்து 18 விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன. இதில் 4,500 வீர, வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இதில் நடைபெறவுள்ள கிரிக்கெட் விளையாட்டில் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.

இந்தியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளின் தேசிய மகளிர் கிரிக்கெட் அணிகள் இதில் விளையாடவுள்ளன என பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் குறித்த போட்டிகள் அனைத்தும் 8 நாட்களில் நிறைவுக்குவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக 1998ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டில் கிரிக்கெட் விளையாட்டும் ஒரு பகுதியாக காணப்பட்டது. இறுதிப்போட்டியில் தென்னாபிரிக்க அணி அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. அதன் பின்னர் 24 வருடங்களின் பின்னர் கிரிக்கெட் விளையாட்டு இணைந்துள்ளது. அதுவும் மகளிர் கிரிக்கெட் எனும் வடிவில் இணைந்துள்ளது.

இது குறித்து பொதுநலவாய விளையாட்டு கூட்டமைப்பு கருத்து வெளியிடுகையில், மகளிர் கிரிக்கெட் போட்டியானது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது. எனவே மகளிர் கிரிக்கெட் போட்டியை பொதுநலவாய விளையாட்டில் சேர்ப்பதற்கு பலர் வாக்களித்துள்ளனர்.

இதில் டி20 போட்டிகளே சிறந்ததாக அமையும். அப்போதுதான் ஆட்டம் விறுவிறுப்பாகவும், விரைவாகவும் நிறைவுக்குவரும். அதனால்தான் டி20 முறை தெரிவு செய்யப்பட்டுள்ளது என குறித்த சம்மேளனம் கருத்து வெளியிட்டுள்ளது.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<