இந்திய பயிற்றுவிப்பாளருக்காக போட்டியிடும் ஆறு பேரின் விபரம் வெளியானது!

2911

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர்  பதவிக்காக விண்ணப்பித்திருக்கும் 6 பேரின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கான நேர்முகத் தேர்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (16) இடம்பெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அறிவித்திருக்கிறது. 

கோஹ்லியின் சாதனையுடன் இந்திய அணிக்கு வெற்றி

இந்திய அணியின் ஐக்கிய அமெரிக்கா மற்றும்……….

கிடைக்கப்பெற்றிருந்த விண்ணப்பங்களின் படி, மைக் ஹெசன், டொம் மூடி, ரொபின் சிங், லால்சாந் ராஜ்பூட், பில் சிம்மன்ஸ் மற்றும் தற்போது இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வரும் ரவி சாஸ்த்ரி ஆகியோர் இந்திய கிரிக்கெட் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு பேரின் விபரங்கள் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் ஆலோசனை குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேர்முகத் தேர்வை ஆரம்பிக்கும். இதில், வெளிநாட்டில் இருந்து விண்ணப்பத்திருக்கும் மூவர் மற்றும் தற்போது மேற்கிந்திய தீவுகளில் உள்ள ரவி சாஸ்த்ரி ஆகியோருக்கான நேர்முகத் தேர்வு  ஸ்கைப் மூலமாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களில், தற்போதைய பயிற்றுவிப்பாளரான ரவி சாஸ்திரி, மீண்டும் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய விண்ணப்பதாரர்களில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டொம் மூடி ஐ.பி.எல். தொடரில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கடந்த ஆறு வருடங்களாக செயற்பட்டுள்ளார்.  இந்த காலப்பகுதியில் ஹைதராபாத் அணி 2016ம் ஆண்டு சம்பியனாகியதுடன், 2018ம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்திருந்தது.

லால்சாந் ராஜ்பூட், இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், தற்போது க்ளோபல் T20  லீக்கில் வின்னிபெக் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். இவரது பயிற்றுவிப்பின் கீழ் இந்தியா அணி 2007ம் ஆண்டு முதலாவது T20I  உலகக் கிண்ணத்தை வென்றிருந்தது. 

மற்றுமொரு விண்ணப்பதாரரான ரொபின் சிங், இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றிவிப்பாளராக 2007 – 2009 ஆண்டு காலப்பகுதியில் செயற்பட்டுள்ளார். அத்துடன், இவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டதுடன், கரீபியன் ப்ரீமியர் லீக்கில் பார்படோஸ் ட்ரைடென்ஸ் அணியை வழிநடத்தியுள்ளார்.

இதேவேளை, மைக் ஹெசன் நியூசிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக 2012 தொடக்கம் 2018ம் ஆண்டுவரை செயற்பட்டிருந்ததுடன், கடந்த ஐ.பி.எல். தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ் 2019ம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.

“சொந்த மண்ணில் எம்மால் முடியாதது என ஒன்றுமில்லை” – மெதிவ்ஸ்

அவுஸ்திரேலியா போன்ற முன்னணி அணிகளை ……

இதேபோன்று, இந்திய அணியின் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர்களுக்காக சுமார் 2000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த இடங்களுக்கான நியமனங்களை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன விண்ணப்பித்திருந்தார் என்ற கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், தற்போது இந்திய கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலில் மஹேல ஜயவர்தனவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<