இன்னிங்ஸ் வெற்றிகளை பதிவு செய்த பேதுரு, தோமியர், நாலந்த கல்லூரி அணிகள்

68

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – I பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (17) மூன்று போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

ஜனாதிபதி கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி

கொழும்பு மாவட்ட பாடசாலைகளான ஜனாதிபதி கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டியில் புனித பேதுரு கல்லூரி வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 74 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டினர்.

புனித பேதுரு கல்லூரியின் சொந்த மைதானத்தில் நேற்று (16) இந்தப் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஜனாதிபதி கல்லூரி அணி முதலில் துடுப்பாடி 92 ஓட்டங்களுனேயே முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணியின் வீரரான சந்துஷ் குணத்திலக்க 3 விக்கெட்டுக்களை பேதுரு கல்லூரிக்காக சாய்த்திருந்தார்.

பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய புனித பேதுரு கல்லூரி அணி 281 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து வலுவான நிலை ஒன்றில் காணப்பட்டிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது. பேதுரு கல்லூரியின் துடுப்பாட்டத்தில் ஏற்கனவே மூன்று விக்கெட்டுக்களை சாய்த்த சந்துஷ் குணத்திலக்க சதம் (123) பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, பேதுரு கல்லூரி அணியை விட 189 ஓட்டங்கள் பின்தங்கி தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய ஜனாதிபதி கல்லூரி அணி மீண்டும் ஒரு மோசமான துடுப்பாட்டத்தை காண்பித்து 115 ஓட்டங்களுடன் சுருண்டு போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினை தழுவியது. கனிஷ்க மதுவந்த 5 விக்கெட்டுக்களை இம்முறை சாய்த்து பேதுரு கல்லூரியின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 92 (30.2) –  விக்கும் கல்ஹார 30, சந்துஷ் குணத்திலக்க 3/06,

புனித பேதுரு கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 281/5d (65) – சந்துஷ் குணத்திலக்க 123, நிப்புனக்க பொன்சேக்கா 84*

ஜனாதிபதி கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 115 (47.5) – கனிஷ்க மதுவந்த 5/35

முடிவு – புனித பேதுரு கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 74 ஓட்டங்களால் வெற்றி

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் புனித தோமியர் கல்லூரி

புனித தோமியர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் புனித தோமியர் கல்லூரி அணி மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிக்கெதிராக இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நேற்று தொடங்கியிருந்த இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தது. இதனை தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய தோமியர் கல்லூரி அணி ரவிந்து டி சில்வா பெற்ற சதத்தோடு (123*) 66.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களுடன் காணப்பட்டிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் உப தலைவர் கபில ஜயலத் காலமானார்

இலங்கை பாடசாலை கிரிக்கெட் சங்கத்தின் உப தலைவரும், முன்னாள் கிரிக்கெட் நடுவருமான கபில ஜயலத் பக்கவாதம் காரணமாக, தனது…

இதனை அடுத்து 152 ஓட்டங்கள் பின்தங்கி காணப்பட்ட பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 139 ஓட்டங்களுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸை நிறைவு செய்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த இன்னிங்ஸில் தோமியர் கல்லூரியின் டிலான் பீரிஸ் 6 விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 148 (46.4) – பிரின்ஸ் பெர்னாந்து 54, தில்மின் ரத்நாயக்க 4/24

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 300/6d (66.2) – ரவிந்து டி சில்வா 122*, உமயங்க சுவாரிஸ் 66

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 139 (42.5) – தரிந்து அமரசிங்க 49, டிலான் பீரிஸ் 6/28

முடிவு – புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 13 ஓட்டங்களால் வெற்றி

நாலந்த கல்லூரி எதிர் டி மெசனொட் கல்லூரி

கொழும்பு நாலந்த கல்லூரியின் சொந்த மைதானத்தில் முடிந்த இப்போட்டியில் மைதானச் சொந்தக்காரர்களான நாலந்த வீரர்கள் இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

போட்டியின் முதலில் துடுப்பாடிய டி மெசனொட் கல்லூரி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களையே தமது முதல் இன்னிங்ஸில் பெற்றது. நாலந்த கல்லூரியின் லக்ஷித ரசஞ்சன வெறும் 41 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை நாலந்த கல்லூரிக்காக கைப்பற்றியிருந்தார்.

இதனை அடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நாலந்த கல்லூரி 302 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து இருந்த போது ஆட்டத்தினை இடைநிறுத்தியது. நாலந்த கல்லூரியின் துடுப்பாட்டத்தில் சமிந்து விஜேசிங்க (78), ரனிது டி சில்வா (56) மற்றும் ரவின் டி சில்வா (54*) ஆகியோர் அரைச்சதம் பெற்றிருந்தனர்.

பின்னர், 156 ஓட்டங்களால் எதிரணியை விட குறைவாக காணப்பட்ட டி மெசனொட் கல்லூரி அணி தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கி 141 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. நாலந்த கல்லூரிக்காக இம்முறை கவீஷ் மதுப்பெரும 13 ஓட்டங்களுக்கு 6  விக்கெட்டுக்களை சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை ஊர்ஜிதம் செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

டி மெசனொட் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 146 (46) நதுன் 30, லக்ஷித 7/41, சமிந்து விஜேசிங்க 3/34

நாலந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 302/7d (74) – சமிந்து விஜேசிங்க 78, ரனிது டி சில்வா 56, ரவின் டி சில்வா 54*, ரொமல் பெர்னாந்து 3/84

டி மெசனொட் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 141 (64.3) – நதுன் தில்சான் 69*, கவீஷ் மதுரப்பெரும 6/13

முடிவு – நாலந்த கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<