ஷாய் ஹோப்பின் அதிரடியில் ஆப்கானை வைட்வொஷ் செய்தது மேற்கிந்திய தீவுகள்

60
Afghanistan Cricket Board‏
 

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இன்று (11) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாய் ஹோப் சதமடித்து அசத்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்று வருகிறது.

சகலதுறையிலும் பிரகாசித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒருநாள் தொடர் வெற்றி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற இரண்டாவது …

முதலிரண்டு ஒருநாள் போட்டிகளையும் வெற்றி கொண்டு தொடரைக் கைப்பற்றிய மேற்கிந்திய தீவுகள் அணி, லக்னோவில் இன்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 15 ஓட்டங்களுக்கு இழந்தது. அறிமுக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இப்ராஹிம் சத்ரான் (2), அல்சாரி ஜோசப்பின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

அடுத்து வந்த ரஹ்மத் ஷாஹ் 10 ஓட்டங்களுடனும், இக்ரம் அலிகில் 9 ஓட்டங்களுடனும் கீமோ போலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவ்விரண்டு வீரர்களது ஆட்டமிழப்பினைத் தொடர்ந்து அபாரமாக துடுப்பெடுத்தாடி வந்த இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹஸ்ரதுல்லாஹ் ஷசாய் தனது இரண்டாவது ஒருநாள் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த நிலையில், கீமோ போலின் பந்துவீச்சில் (50) வெளியேறினார்.  

இதனால் ஆப்கானிஸ்தான் அணி 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

தொடர்ந்து களமிறங்கிய நஜிபுல்லாஹ் சத்ரான் மற்றும் அஸ்கர் ஆப்கான் ஜோடி அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டது. இருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 44 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நஜிபுல்லாஹ் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 6ஆவது விக்கெட்டுக்காக அஸ்கர் ஆப்கானுடன் ஜோடி சேர்ந்த மொஹமட் நபி மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தார்.

நிதானமாக ஓட்டங்களை குவித்த இருவரும் 127 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, அல்சாரி ஜோசப்பின் பந்தில் அஸ்கர் ஆப்கான் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

இறுதியில், மொஹமட் நபி ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்ட 50 ஓட்டங்களுடன் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 249 ஒட்டங்களை எடுத்தது.

பந்துவீச்சில் கீமோ போல் 3 விக்கெட்டுக்களையும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

250 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பாடக் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்திலே விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

முஜிபுர் ரஹ்மான் வீசிய இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் எவின் லூவிஸ் ஒரு ஓட்டத்துடனும், அடுத்துவந்த ஷிம்ரொன் ஹெட்மயர் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 4 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.

சஹாரின் சாதனை பந்துவீச்சு மூலம் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

தீபக் சஹாரின் ஹெட்ரிக் விக்கெட் உட்பட உலக சாதனை 6 விக்கெட்டுகள் மூலம் …

அடுத்துவந்த பிரெண்டன் கிங், ஷாய் ஹோப்புடன் இணைந்து அணியை ஓரளவு சரிவிலிருந்து மீட்டார். இருவரும் இணைந்து 3ஆவது விக்கெட்டுக்காக 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது பிரெண்டன் கிங் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து வந்த நிக்கொலஸ் பூரன், ஷாய் ஹோப்புடன் ஜோடி சேர்ந்து அரைச்சத (51) இணைப்பாட்டமொன்றை பெற்று நம்பிக்கை கொடுத்தார். எனினும், 26 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்த நிக்கொலஸ் பூரன், சராபுதீன் அஷ்ரப்பின் பந்தில் பிடிகொடுத்து வெளியேறினார்.

5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷாய் ஹோப், கிரென் பொல்லார்ட் இருவரும் அதிரடியில் இறங்கி ஓட்டக்களைக் குவித்தனர். 2 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி உட்பட 32 ஓட்டங்களை எடுத்த கிரென் பொல்லார்ட், மொஹமட் நபியின் பந்துவீச்சில் நஜிபுல்லாஹ் சத்ரானிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதன் பின்னர் ஷாய் ஹோப்புடன், ரொஸ்டன் சேஸ் கைகோர்த்தார். நிதானமாக ஆடிய இருவரும் 6ஆவது விக்கெட்டுக்காக 71 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 

இதன்படி, மேற்கிந்திய தீவுகள் அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 253 ஓட்டங்களை எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஷாய் ஹோப் 145 பந்துகளில் 109 ஓட்டங்களுடனும் (8 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ரொஸ்டன் சேஸ் 42 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது. 

இறுதி ஒருநாள் போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் செல்ல, இந்தத் தொடர் முழுவதும் சகலதுறையிலும் பிரகாசித்த ரொஸ்டன் சேஸ் தொடர் நாயகன் விருதைப் பெற்றுக் கொண்டார். 

சர்வதேச டி20 யில் பும்ராவின் சாதனையை இலகுவாக தகர்த்த சஹால்

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (10) நடைபெற்ற …

அடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தானை சந்திக்கவுள்ளது. இதன் முதலாவது போட்டி 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

ஆப்கானிஸ்தான் – 249/7 (50) –  அஸ்கர் ஆப்கான் 86, மொஹமட் நபி 50*, ஹஸ்ரதுல்லாஹ் ஷசாய் 50, கீமோ போல் 3/44, அல்சாரி ஜோசப் 2/59

மேற்கிந்திய தீவுகள் – 253/5 (48.4) – ஷாய் ஹோப் 109*, ரொஸ்டன் சேஸ் 42*, பிரெண்டன் கிங் 39, முஜிபுர் ரஹ்மான் 2/49

முடிவு – மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…