வலைப்பந்தாட்டத்தில் தொடர்ந்தும் முன்னிலையில் வகிக்கும் மேல் மாகாண அணி

368
Western Province - 42nd National Sports Festival Netball Champions
Western Province - 42nd National Sports Festival Netball Champions

தற்பொழுது இடம்பெற்று வரும் 42வது தேசிய விளையாட்டு விழாவில், அநுராதபுரம் உள்ளக அரங்கில் இடம்பெற்ற வலைப்பந்து போட்டிகளில் மேல் மாகாண அணி தொடர்ந்தும் தனது ஆதிக்கத்தை செலுத்தி சம்பியனாகியுள்ளது.

இதில் இறுதிப் போட்டியில் இவ்வணி பலம் மிக்க மத்திய மாகாண அணியை 55-44  என்று வெற்றி கொண்டமை மூலம் தமது பலத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. இந்த இரு அணிகளிலும் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய வீரர்கள் பங்குகொண்ட நிலையில், இரு அணிகளும் சம பலத்துடன் மோதிக்கொண்டன. எனினும், நீண்ட போராட்டத்துக்கு பிறகு மேல் மாகாண அணி போட்டியை வெற்றி கொண்டு, மீண்டும் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எனவே,, 2012ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக சம்பியன் பட்டதை வென்ற பெருமையை மேல் மாகாண அணி பெற்றுள்ளது.

மத்திய மாகாண அணிக்காக, இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வலைப்பந்தாட்ட தேசிய அணித்தலைவர் கயனி திஸ்ஸாநாயக்க, ருவினி யடிகம்மன, கயஞ்சலி அமரவன்ச, திலினி வத்தகெதர ஆகியோர் பங்குபற்றிய அதேநேரம், மேல் மாகாண அணிக்காக திசலா அல்கம, சதுறங்கி ஜயசூரிய, செமினி அல்விஸ், மனோஜிக்கா பிரியதர்ஷனி, திவங்க பெரேரா, துலங்க தனஞ்சி மற்றும் அசித்த மெண்டிஸ் ஆகியோர் பிரதிநிதித்துவப்படுத்தினர்.

போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய மேல் மாகாண அணி முதல் 15 நிமிடத்தில் 15-10 என்ற புள்ளிகளில் முன்னிலை பெற்றதோடு, தொடர்ந்தும், சிறப்பாக விளையாடியது.

அதேபோன்று இரண்டாம் 15 நிமிட நேரத்தின் முடிவில் அவ்வணி மொத்தமாக, 29-21 என்ற புள்ளிகளைப் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தது.

போட்டியின் இடைவேளை, அவர்களது உத்திவேகத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து போட்டியின் மூன்றாவது 15 நிமிடங்களின்போது, அவ்வணியின் புள்ளிகள் 43-31 என்ற நிலையில் இருந்தது. இறுதி நேரம் வரை மத்திய மாகாண அணியால் எந்தவிதமான சவால்களையும் மேல் மாகாண அணிக்கெதிராக கொடுக்க முடியாமல் போனது. எனினும், இறுதிப் 15 நிமிடங்களில்  13-12 என்ற புள்ளிகளைப் பெற்று மத்திய மாகாண அணி ஆறுதல் அடைந்தது.

மூன்றாவது இடத்துக்காக போட்டியிட்ட தென் மாகாணம் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களான வடமத்திய மாகாணங்களுக்கிடையிலான போட்டியில், அதிரடியாக விளையாடிய தென் மாகாண அணி 13-10, 17-6, 17-6, 18-7 என போட்டியின் முழு நேரத்தில் 64-39  என   வெற்றி பெற்றது.

அரை இறுதிப்போட்டிகளில், மத்திய மாகாண அணிதென் மாகாண அணியை 57-40 (10-16, 12-11, 17-06, 18-07) என  வெற்றி கொண்டது. அதே நேரம், மேல் மாகாண அணி வட மத்திய மாகாண அணியை 76-26 (22-04, 22-04,16-10,1-08) என  இலகுவாக வெற்றி கொண்டது.

போட்டிகளின் சிறந்த விளையாட்டு வீரர் விருதை மேல் மாகாண அணி வீரரான சத்துறங்கி ஜயசூரிய பெற்றுக்கொண்டார்.

போட்டி முடிவுகள்:

கால் இறுதிக்கான தெரிவுப் போட்டிகள்
வட மத்திய மாகாணம் 64-32 ஊவா மாகாணம்

கால் இறுதி போட்டிகள்

மேல் மாகாணம் 84-39 வட மாகாணம்
சப்ரகமுவ மாகாண 43-56, வட மத்திய மாகாணம்
மத்திய மாகாணம் 59-32 வடமேல் மாகாணம்
கிழக்கு மாகாணம் 14-81 தென் மாகாணம்