ஆஸி. டென்னிஸ் தொடருடன் அண்டி மர்ரே ஓய்வு

90
AFP

பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான அண்டி மர்ரே, அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள வருடத்தின் முதலாவது கிரான்ட்ஸ்லாம் போட்டித் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருடன் ஓய்வுப் பெற போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி டென்னிஸ் வீரரான அண்டி மர்ரே இடுப்பில் ஏற்பட்ட காயத்துக்கு சத்திர சிகிச்சை செய்தும் கடந்த ஒன்றரை வருடங்களாக வலி குணமடையாமல் அவதிப்பட்டு வருகிறார்.

சமீபகாலமாக இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் 31 வயதான அண்டி மர்ரே, இடுப்பு வலியுடன் தொடர்ந்தும் தன்னால் விளையாட முடியாது என உணர்ந்ததால், இந்த திடீர் முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீரரான அண்டி மர்ரே மெல்பேர்னில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

இதேநேரம், மெல்பேர்னில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கண்ணீர் மல்க அண்டி மர்ரே அளித்த பேட்டியில், ”அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறலாம் என்று நினைக்கிறேன். உள்ளூரில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி வரை விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் கடந்த 20 மாதங்களாக இடுப்பு வலியால் அவதிப்பட்டு வரும் என்னால் விம்பிள்டன் போட்டி வரை விளையாட முடியும் என்று உறுதியாக கூற முடியாது.

தெற்காசிய நீர்நிலைப் போட்டிகளில் இலங்கை வீரர்களுக்கு பங்கேற்க தடை

இலங்கை நீர்நிலை சங்கத்தின் (SLASU – Sri Lankan Aquatic Sports Union)…

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி தான் எனது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் காயத்தோடு விலகிய மர்ரே, கடந்த ஜுன் மாதம் குயின்ஸ் கழக டென்னிஸ் போட்டியில் மீண்டும் களமிறங்கியிருந்தார். ஆனால் தொடர் வலியினால் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை.

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் நடைபெற்ற பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரில், காயத்திற்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய அண்டி மர்ரே, 2 ஆவது சுற்றில் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார். இந்த தோல்வி தான் அவரின் ஓய்வு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை, 45 தடவைகள் ஏடிபி பட்டங்கள் சம்பியன் பட்டங்களை வென்றுள்ள அண்டி மர்ரே, 2016 ஆம் ஆண்டு உலகின் முதல் நிலை வீரராகவும் இடம்பிடித்தார். அத்துடன், 2013 ஆம் மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் விம்பிள்டன் சம்பியன் பட்டங்களையும், 2012 ஆம் ஆண்டில் அமெரிக்க டென்னிஸ் பட்டத்தையும் வென்ற அவர், இதுவரை 3 கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார்.

இதில் கடந்த 77 வருடங்களில் விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் பிரித்தானிய வீரர் என்ற பெருமையையும் அண்டி மர்ரே பெற்றுக்கொண்டார்.

1980களில் பயன்படுத்திய ஜேர்சிக்கு மாறிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 1980-களில் பயன்படுத்தியது போன்ற ஜேர்சியை …

மேலும், ஐந்து தடவைகள் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும், ஒரு தடவை பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரிலும் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அத்தோடு, 2015 ஆம் ஆண்டு டேவிஸ் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார். மேலும், 2012 ஆம், 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும் அவர் வென்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

டென்னிஸ் உலகில் பிக் போர் என்று சொல்லக்கூடிய ரொஜர் பெடரர், நொவேக் ஜோகோவிச், ரபாயல் நடால் ஆகியோருடன் முதல் 4 வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்த அவர், டென்னிஸ் தரவரிசையில் 230ஆம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<