இலங்கை அணியின் 2011 உலகக் கிண்ண தோல்வி ஒரு ஆட்ட நிர்ணயமா?

2489

ஆட்ட நிர்ணயம் தொடர்பான புதிய குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை அணியின் 2011 உலகக் கிண்ண தோல்வி குறித்து விசாரணை ஒன்றை மேற்கொள்வதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகளால் தோல்வி அடைந்து கிண்ணத்தை பறிகொடுத்தது. போட்டிக்குப் பின்னர் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார தலைமைப் பதவியில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். இவர்களின் கருத்துக்கள் காரணமாக இலங்கை அணியின் அதிர்ச்சி தோல்வி குறித்து விசாரணை ஒன்றை நடத்துவதற்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது.  

ஐ.சி.சி டெஸ்ட் தர வரிசையில் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றிய ரங்கன ஹேரத்

ஐ.சி.சி இன் புதிய டெஸ்ட் தர வரிசைப்படி இரண்டாம் இடத்திலிருந்த..

“இந்தக் குற்றச்சாட்டானது விசாரணை ஒன்றுக்கு தகுதியுடையது” என்று தயாசிறி ஜயசேகர கொழும்பில் வைத்து செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

“இதுபற்றி எனக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்த விரைவிலேயே விசாரணையை ஆரம்பிப்பேன்” என்று குறிப்பிட்டார்.

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, தனது நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கார் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்ததை அடுத்து இலங்கை அணி வலுவான நிலையில் இருந்தது.

எனினும் இலங்கை அணியின் மோசமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பினால் இந்திய அணி அதிரடியாக வெற்றியை நோக்கி முன்னேறியது.  

அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே இது தொடர்பில் அவதானத்தை ஏற்படுத்தியுள்ளார். “இந்த போட்டி தொடர்பில் பல குழப்பமான காரணிகள் உள்ளன” என்று அவர் ஊடகத்திற்கு குறிப்பிட்டிருந்தார்.

விதிகளை மீறும் வகையில் முன் அனுமதியின்றி குறித்த போட்டியில் கடைசி நிமிடத்தில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் விளக்கம் கேட்டார்.  

“அப்போது ஒரு சிரேஷ்ட வீரரின் நடத்தை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. போட்டியின்போது மைதானத்திற்கு அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்களும் புறக்கணிக்கப்பட்டன” என்று மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார். எனினும் அந்த சிரேஷ்ட வீரரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.  

போட்டிக்குப் பின்னர் தான் விசாரணை ஒன்றை ஆரம்பித்ததாகவும் ஆனால் அந்த விசாரணை கைவிடப்பட்டதாகவும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.   

இந்நிலையில் முன்னாள் இலங்கை அணித்தலைவர் தலைவர் அர்ஜுன ரணதுங்க வெளியிட்ட கருத்துகள் தற்போது அளுத்கமகேயின் அவதானத்தை செலுத்தியுள்ளது. போலியான கிரிக்கெட் வீரர்களின் அழுக்கை வெளிக்கொண்டுவர விசாரணை ஒன்றை நடத்தும்படி ரணதுங்க கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

ஊழல் எதிர்ப்பு விசாரணை ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியது குறித்து முன்னணி இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஜயனந்த வர்ணவீரவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் கடந்த வருடம் மூன்று ஆண்டு தடையை அமுல்படுத்தியது.

2011 உலகக் கிண்ண தோல்வி : அர்ஜுனவை அடுத்து மஹிந்தானந்தவுக்கும் சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வேதனையைக் கொடுத்த…

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்கள் கடந்த காலங்களில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்தபோதும், அது தொடர்பில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு தண்டனைக்கு உள்ளான முதல் உயர் அதிகாரி ஜயனந்த வர்ணவீர ஆவார்.

கிரிக்கெட் அதிக பிரபலம் பெற்றிருக்கும் இந்திய துணைக் கண்டத்தில் சூதாட்டம் சட்டவிரோதம் என்றபோதும் பாதாள உலகத்துடன் தொடர்புபட்டு சூதாட்டங்கள் பிரமாண்டமான அளவில் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறாயினும் இலங்கை அணியின் எந்த ஒரு பெரும்புள்ளியும் இதுவரை ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதில்லை. ஆனால் வீரர்கள் பந்துவீச்சு அல்லது துடுப்பாட்டத்தில் வேண்டுமென்றே மோசமாக செயற்படும் ஆட்ட நிர்ணயம் அல்லது ஸ்பொட் பிக்சிங் (Spot Fixing) போன்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் நட்சத்திரங்க முகம்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் – AFP