சத்தமின்றி சாதனைகளை குவித்த உபுல் தரங்கவின் இலக்கு

109

இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும், அனுபவ வீரருமான உபுல் தரங்க, ஆரம்ப துடுப்பாட்ட வீரராக ஒருநாள் அரங்கில் பல சாதனைகளை படைத்த வீரர் ஆவார். 

அண்மைக்காலமாக இலங்கை அணியில் தொடர்ச்சியாக விளையாடுகின்ற வாய்ப்பு அவருக்கு கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகின்றார்

உலகக் கிண்ணத்தில் அர்ஜுனவை பிரதிபலித்த திசர பெரேரா

இலங்கை அணிக்கு உலகக் கிண்ணம் ……………..

இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் தனக்கென பல சாதனைகளை வைத்துள்ள 35 வயதுடைய உபுல் தரங்க, இதுவரை 235 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6951 ஓட்டங்களைக் குவித்துள்ளதை எவரும் அறிந்து இருக்க மாட்டீர்கள்

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்த இலங்கை வீரர்களில் 8ஆது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ள இடதுகை துடுப்பாட்ட வீரரான அவர், இறுதியாக 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.  

எனவே, தொடர்ந்து தனது உடற்தகுதியைப் பேணிக்கொண்டு உள்ளூர் கழகமட்டப் போட்டிகளில் என்.சி.சி அணிக்காக விளையாடி வருகின்ற உபுல் தரங்கவுக்கு மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கி 7,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் உண்டு

இலங்கை அணியின் பயிற்சியாளராக டொம் மூடி பதவியேற்ற காலத்தில் உபுல் தரங்க, தனது 20ஆவது வயதில் 2005இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.  

இதனைப் பயன்படுத்திக் கொண்ட மூடி, தேசிய அணிக்குள் அவரை தொடர்ந்து இடம்பெறச் செய்து சிரேஷ் வீரர்களுடன் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்தார். இதன்காரணமாக உபுல் தரங்க நிறைய பயன்களைப் பெற்றுக் கொண்டார். எனவே, டொம் மூடியின் முயற்சிக்கு சிறந்த பிரதிபலன் கிடைத்தது.  

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுமாகிய முதலாவது ஆண்டில் உபுல் தரங்க 6 ஒருநாள் சதங்களை விளாசினார். கொழும்பு மற்றும் தம்புள்ளை போன்ற மெதுவான  ஆடுகளங்களில் மட்டுமல்ல, கிறைஸ்ட்சர்ச், லீட்ஸ், லோர்ட்ஸ், அஹமதாபாத் மற்றும் மொஹாலி போன்ற மைதானங்களில் ஓட்டங்களை அள்ளிக் குவித்தார். அவற்றில் சில உலக சாதனைகளும் அடங்கும்

2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் லீட்ஸில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு 322 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் போட்டிகளை பொருத்தமட்டில் இது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்

Sri Lanka’s Upal Tharanga (left) and Sanath Jayasuriya score runs during the second Natwest Series One-Day International against England at The Brit Oval, Surrey. (Photo by Sean Dempsey – PA Images/PA Images via Getty Images)

ஆனால் அந்தக் காலப்பகுதியில் இலங்கை அணி 300 இற்கும் அதிகமான ஓட்டங்களை துரத்தியடிப்பதில் முன்னணி அணியாக விளங்கியது. இதன்படி, குறித்த போட்டியை 38 ஓவர்களில் நிறைவுசெய்து இலங்கை அணி வெற்றியீட்டியது.  

சுகாதார அறிவுரைகளுடன் பயிற்சிகளை தொடரவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கிரிக்கெட் போட்டிகள் முழுமையாக தடைப்பட்டுள்ள……..

இதில் உபுல் தரங்க (109), சனத் ஜயசூரியா (152) ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 286 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று உலக சாதனையும் படைத்தனர். இதற்காக 191 பந்துகளை அவர்கள் எடுத்துக் கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

குறிப்பாக, உபுல் தரங்க மற்றும் சனத் ஜயசூரியாவின் வானவேடிக்கையினால் ஒருசில இங்கிலாந்து அணி வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் நிறைவுக்கு வந்தது என்றால் மிகையாகாது

இந்தப் போட்டியில் முதல் ஓவரை வீசிய கபீர் அலி, இங்கிலாந்துக்காக மீண்டும் விளையாடவில்லை. அவ்வாறே விக்ரம் சோலங்கி

இதன்படி, குறித்த போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியுடன் இலங்கை அணி 5-0 என இங்கிலாந்தை வைட்வொஷ் செய்து ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.  

இறுதிப் போட்டியில் சதமடித்து அசத்திய உபுல் தரங்க, லோர்ட்ஸில் நடைபெற்ற முதலாவது போட்டியிலும் சதமடித்து (120 ஓட்டங்கள்) அசத்தினார்.  

எனினும், துடுப்பாட்டத்துக்கு மிகவும் கடினமாக குறித்த ஆடுகளத்தில் இலங்கை அணி 257 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2007 உலகக் கிண்ணப் போட்டிகள் உபுல் தரங்கவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும் அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை. அதற்கான பதிலை 2011 உலகக் கிண்ணத்தில் சுடச்சுட கொடுத்தார்

காலிறுதிப் போட்டியில் திலகரத்ன டில்ஷானுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் விளையாடி இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுக்களால் விழ்த்துவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்தப் போட்டியானது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களின் மறக்கமுடியாத போட்டிகளில் ஒன்றாக இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றது

இதுவரை நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக அதிகூடிய இணைப்பாட்டங்களைப் பெற்றுக்கொண்ட முதல் 10 இணைப்பாட்ட சாதனைக்கான ஜோடியில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு வீரராகவும் உபுல் தரங்க வலம்வந்து கொண்டிருக்கின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதுஇவ்வாறிருக்க, அஞ்செலோ மெதிவ்ஸ் தலைவர் பதவியை திடீரொன இராஜினாமாச் செய்ய இலங்கை அணியின் தலைவரக உபுல் தரங்க நியமிக்கப்பட்டார்.  

மிகவும் கடினமான நேரத்தில் அவர் அணியை வழிநடத்த முன்வந்தாலும், அவருக்கு எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் தொடர்ந்து போராடினார். உபுல் தரங்க தலைவர் என்பதை விட அணியின் ஒரு சாதாரண வீரராக இருந்தார். அவர் தனது வாழ்க்கை முழுவதும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே களமிறங்கியிருந்தார்.  

மேலும், அணிக்குள் புதிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை அறிமுகப்படுத்துவதற்கான தேவைகள் இருந்தபோது, அவர் விருப்பத்துடன் நடுத்தர வரிசையில் களமிறங்கி ஒரு முன்மாதிரியான வீரராகவும் திகழ்ந்தார். இறுதியில் அவரது தலைவர் பதவியும், இலங்கை அணியில் நிரந்ததர இடமும் பறிபோனது.

குறிப்பாக, இலங்கை கிரிக்கெட்டில் பல ஊழல் விசாரணைகள் இருந்த காலகட்டத்தில் அவரது முன்மாதிரியான கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிரிக்க வைத்தன என்றால் மிகையாகாது.

இறுதியாக, கடந்த பெப்ரவரி மாதம் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒருநாள் பயிற்சி போட்டியில் சதமடித்து அசத்திய உபுல் தரங்க, தன்னிடம் இன்னும் கிரிக்கெட் உத்வேகமும், திறமையும் இருப்பதை தேர்வாளர்களுக்கு நிரூபித்துக் காட்டினார்.

35 வயதாகியும் இன்னும் ஓய்வு பெறாமல் விளையாடிக் கொண்டிருக்கின்ற வீரர்களில் அதிக சதங்களைப் பெற்றுக்கொண்ட வீரராக வலம்வந்து கொண்டிருக்கின்ற தரங்க, ஒருநாள் போட்டிகளில் அதிக தடவைகள் முச்சத இணைப்பாட்டத்தைப் பெற்றுக்கொண்ட வீரர்களில் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்குக்கு அடுத்தபடியாக இடம்பிடித்துள்ளார்.  

சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல

இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆடி 537 ஓட்டங்களிற்கு அனைத்து விக்கெட்டுகளையும் …….

இந்த நிலையில், இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com இன் Cricket Chat நிகழ்ச்சியில் கடந்தவாரம் கலந்துகொண்ட உபுல் தரங்க, இன்னும் இரண்டு வருடங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்

எனவே, சனத் ஜயசூரியா முதல் மஹேல ஜயவர்தன, திலகரத்ன டில்ஷான், குசல் ஜனித் பெரேரா, தனுஷ் குணதிலக்க போன்ற வீரர்களுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விளையாடியுள்ள உபுல் தரங்க, ஒருநாள் அரங்கில் 7,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை பூர்த்தி செய்வாரா? 2023 உலகக் கிண்ணம் வரை இலங்கை அணிக்காக விளையாடுவாரா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்

அதேபோல, தேர்வாளர்களும் அவருக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இலங்கை ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<