பாகிஸ்தானின் சவாலான இலக்கை நெருக்கடி இன்றி எட்டிய இங்கிலாந்து

180

பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற ஒரே ஒரு டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றது.

கார்டிப், சொபியா கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக துடுப்பெடுத்தாடி 173 ஓட்டங்களை பெற்றபோதும் இங்கிலாந்து அணி 4 பந்துகளை மிச்சம் வைத்து இலக்கை எட்டியது.

குறிப்பாக இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் விளாசியே இங்கிலாந்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த பாபர் அஸாம் மற்றும் ஹாரிஸ் சொஹைல் ஜோடி 103 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

இதன்போது அஸாம் 42 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களை விளாசியதோடு, ஹாரிஸ் சொஹைல் 36 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 50 ஓட்டங்களை பெற்றார்.

தனது முதல் டி-20 போட்டியில் களமிறங்கிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜெப்ரா ஆர்சர் 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் பதிலெடுத்தாட கமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர் பென் டெக்கட் 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோதும் ஏனைய வீரர்கள் தேவையான ஓட்ட வேகத்துடன் நின்றுபிடித்து ஆடி அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

அணித்தலைவர் மோர்கன் 29 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை பெற்று ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

இரு அணிகளும் அடுத்து, எதிர்வரும் உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் வகையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடவுள்ளன. இதன் முதல் ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை (08) ஓவலில் நடைபெறவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் – 173/6 (20) – பாபர் அஸாம் 65, ஹாரிஸ் சொஹைல் 50, ஜெப்ரா ஆர்சர் 2/29

இங்கிலாந்து – 175/3 (19.2) – இயன் மோர்கன் 57*, ஜோ ரூட் 47, ஜேம்ஸ் வின்ஸ் 36, இமாத் வெசிம் 1/24
முடிவு – இங்கிலாந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<