உலகக் கிண்ணத்தில் அர்ஜுனவை பிரதிபலித்த திசர பெரேரா

68

இலங்கை அணிக்கு உலகக் கிண்ணம் வென்றுகொடுத்த தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் இடத்தை ஒருவரால் நிரப்புவது கடினமான விடயம். ஆனால், திசர பெரேரா அவரை பின்தொடர்ந்து 2014ம் ஆண்டு தனது கனவை நனவாக்கி T20 உலகக் கிண்ணத்தை வென்றுகொடுக்க காரணமாகியிருந்தார்.

இலங்கை அணி பரிசளித்த மறக்கமுடியாத டெஸ்ட் வெற்றிகள்

இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து…

இலங்கை அணி 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்லும் போது, 7 வயதான திசர பெரேரா, கிரிக்கெட் விளையாடுவதை மேலும் இரட்டிப்பாக்கி, அர்ஜுன ரணதுங்கவை பின்தொடர்ந்துள்ளார்.  

“நான் T20I உலகக் கிண்ணத்தின் வெற்றியை பௌண்டரியுடன் நிறைவுசெய்தமை, சற்று அர்ஜுன ரணதுங்கவை போன்று இருந்தது. உலகக் கிண்ண இறுதிப் போட்டியொன்றை பௌண்டரியுடன் நிறைவுசெய்வது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது” என எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியொன்றில் திசர பெரேரா குறிப்பிட்டுள்ளார். 

அதிரடி சகலதுறை வீரரான திசர பெரேரா 2014ம் ஆண்டு மின்பூரில் நடைபெற்ற T20  உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருந்தார். இதற்கு முன்னர் இலங்கை அணி 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளில் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்ததுடன், 2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கும் முன்னேறியிருந்தது. எனினும், இலங்கை அணியால் கிண்ணத்தை வெற்றிக்கொள்ள முடியவில்லை.

மின்பூரில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குமார் சங்கக்கார அரைச் சதம் அடித்து அணியின் வெற்றியை இலகுவாக்க, 52 ஓட்டங்கள் தேவைப்படும் போது, திசர பெரேரா களமிறங்கினார். போட்டி இரு அணிகளுக்கும் சம பங்காக இருந்த போது, திசர பெரேரா 3 சிக்ஸர்கள் அடங்கலாக 14 பந்துகளில் 23 ஓட்டங்களை விளாசி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.

“குமார் சங்கக்காரவுடன் துடுப்பெடுத்தாடுவது மிகச்சிறப்பான விடயம்.  நான் களத்தில் வந்து துடுப்பெடுத்தாட ஆரம்பித்த போது அவர் எனக்கு கொடுத்த ஆலோசனை, பந்து எனக்கு சாதகமாக வந்தால் அடித்தாடுமாறு கூறினார்” 

வெற்றிக்கான அந்த ஆறு ஓட்டம் தொடர்பில் கூறுகையில், அது எனக்கு ஒரு மிகப்பெரிய கனவாக இருந்தது. அதாவது உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் இறுதி ஓட்டத்தை பௌண்டரி மூலமாக பெற வேண்டும் என்பது கனவு. 

ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு கடினமான பந்துவீச்சாளர். பந்தினை வைட் பந்தாக வீசி, ஸ்டம்பிங் முறையில் விக்கெட்டினை கைப்பற்றுவதற்கு முயற்சி செய்தார். ஆனால், நான் பந்தினை சரியாக அடித்து பௌண்டரிக்கு அனுப்பியதுடன், எனது கனவை நனவாக்கிய உணர்வை பெற்றுக்கொண்டேன்” என திசர பெரேரா சுட்டிக்காட்டினார்.

திசர பெரேரா பாடசாலை காலத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்டு வந்தார். எனினும், அவரது பாடசாலை பயிற்றுவிப்பாளர் ஹர்ஷ டி சில்வா, திசர பெரேராவின் அதிரடி துடுப்பாட்டத்தையும், அணியை பலப்படுத்துவதற்காகவும் மத்தியவரிசை வீரராக மாற்றியிருந்தார்.

முதல் ஓவர்களில் களத்தடுப்பு வீரர்கள் மட்டுப்படுத்தல் இருப்பதால், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக திசர பெரேரா களமிறங்கினால் எதிரணிக்கு சவாலாக அமையும். திசரவும் தன்னால் எந்த இடத்துக்கும் மாற முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஊரடங்கு முடிவடைந்ததும், இதனையும் மிக்கி ஆர்தர் கவனத்தில் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<